இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்!

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை கடந்த வாரம் தோற்கடித்த மகிழ்ச்சியின் இனிப்பு மனதில் இருந்து மறைவதற்குள் நேற்று பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றுள்ளது.

பவர் ப்ளேவில் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஓவர்களில் 62 ரன்களை விளாசிய பிறகும், கடந்த பல மாதங்களாக அவுட் ஆஃப் பார்மில் இருந்த விராட் கோலி, அதிரடியாக ஆடி அரை சதம் எடுத்தபோதிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு 4 காரணங்கள் உள்ளன. அவை…

காலை வாரிய டாஸ்:

போட்டி நடந்த துபாய் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமான சூழலைக் கொண்டிருந்தது. அத்துடன் பனியும் இருந்ததால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமான நிலை இருந்தது.

எனவே, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸில் தோற்றது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சொதப்பிய மிடில் ஆர்டர்:

இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நேற்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இதில் ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தலா 28 ரன்களை எடுக்க, விராட் கோலி 60 ரன்களைக் குவித்தார். ஆனால் வலுவான மிடில் ஆர்டர் வரிசையாக கருதப்பட்ட இந்தியாவின் மத்திய தர ஆட்டக்காரர்கள் நேற்று சொதப்பினர்.

சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் நின்று நிலைத்து ஆடுவதைவிட அதிரடியாக பேட்டிங் செய்வதிலேயே கவனம் செலுத்தியதால் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இப்படி எதிர்முனையில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தது விராட் கோலியின் ரன் குவிக்கும் வேகத்தையும் பாதித்தது.

இதனால் 200 ரன்களை அனாயாசமாக எட்டும் நிலையில் இருந்த இந்திய அணி, பின்னர் 181 ரன்களில் திருப்திப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

ஜடேஜா இல்லாதால் வெற்றிடம்:

கடந்த முறை பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டபோது ஜடேஜாவையும் சேர்த்து 6 பந்துவீச்சாளர்களை இந்தியா வைத்திருந்தது.

ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சிறப்பாக பந்துவீசியதுடன் 4-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி ரன்களையும் குவித்தார்.

காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஜடேஜா ஆடமுடியாமல் போக, அவரது இழப்பு இந்தியாவை பாதித்தது.

ஹூடா ஓரளவு பந்து வீசுவார் என்றபோதிலும், ஜடேஜாவுக்கு நிகரான பந்துவீச்சாளர் இல்லை என்பதால், 5 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டி வந்தது.

இதனால் ஹர்த்திக் பாண்டியா, சஹல் ஆகியோர் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் அவர்களை வைத்தே சமாளிக்க வேண்டி இருந்தது.

தவறவிட்ட கேட்ச்:

‘கேட்சஸ் வின் மேட்சஸ்’ என்று சொல்வார்கள். ஒரு போட்டியில் வென்றாக வேண்டுமென்றால், பீல்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

நேற்றைய போட்டியில் மிக இக்கட்டான நிலையில் ஆசிப் அலி கொடுத்த எளிமையான கேட்ச்சை அக்‌ஷர்தீப் சிங் தவறவிட்டார்.

அது இந்திய அணியை கடுமையாக பாதித்தது. அவுட் ஆவதில் இருந்து தப்பித்த ஆசிப் அலி, 8 பந்துகளில் 16 ரன்களைக் கொடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இது இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

– சுதிர் P.M.

நன்றி: வாவ் தமிழா இணையதளம்

You might also like