அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர்கள்!
சில நாட்களுக்கு முன்பு கலைஞர் மு. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டைப் பார்க்க பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது.
அவர்களை அன்புடன் வரவேற்று வீட்டைச் சுற்றிக் காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு சுவையான கதையை பத்திரிகையாளர் கோலப்பன், பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு வாரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அமெரிக்காவில் இருந்து சந்திரிகா நாராயன் என்பவர் எழுதியிருந்தார்.
2018-ல் திமுக தலைவர் மு. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டைக் குறித்து நான் பணியாற்றும் தி ஹிந்து பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையைப் படித்திருக்கிறார்.
அதைக் குறிப்பிட்டு, அவருடைய தாயாரான 86-வயது சரோஜா சீதாராமன் அந்த வீட்டைப் பார்க்க விரும்ப விரும்புவதாகவும் கோபாலபுரம் வேணுகோபாலசாமி கோயிலில் தரிசனம் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குக் காரணம் அவர் வளர்ந்தது கோபாலபுரத்தில் உள்ள அந்த வீட்டில்தான். படித்ததும் கோபாலபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்தான். அவருடைய சகோதரர் ஜம்புநாதன் அந்த வீட்டில்தான் பிறந்தார்.
அந்த வீடு அவருடைய தாத்தா சரபேஸ்வர ஐயருக்கு சொந்தமானது. 1955-ல் அவர் அதை கலைஞருக்கு விற்றுவிட்டார்.
புதையல் திரைப்படத்துக்கு வசனம் எழுதியதால் கிடைத்தப் பணத்தில் அந்த வீட்டை வாங்கியிருக்கிறார்.
அவர்கள் வீட்டைப் பார்க்க விரும்புவதை முதல்வரின் செயலாளர் தினேஷிடம் தெரிவித்தேன். அவர் ஏற்பாடு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9-மணிக்கு பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. தினேஷ் மீண்டும் அழைத்து, “சார் 10.30-க்கு வந்து விடுங்கள். முதல்வர் வருகிறார். அவருடைய சகோதரி சகோதரன் மனைவி எல்லோரையும் வரச் சொல்லியிருக்கிறார்” என்றார்.
அதன் படி 10.30 மணிக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். அதற்கு முன்னதாகவே முதல்வரின் மனைவி, சகோதரி, சகோதரர் எல்லோரும் வந்திருந்தனர். முதல்வர் வந்ததும் சரோஜாவுக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர் வீட்டின் ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று காட்டினார். “தரையைக்கூட மாற்றவில்லை பாருங்கள்” என்றார் முதல்வர்.
அந்த வீட்டை 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கலைஞர் வாங்கிவிட்டார். “எனக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஜூன் வரை அனுமதிக்க வேண்டும் என்று என் தாத்தா கேட்டுக் கொண்டார்.. கலைஞரும் பெருந்தன்மையுடன் அனுமதித்தார்,” என்றார் சரோஜா.
வீட்டின் மாடிக்கும் அவர்களை முதல்வர் ஸ்டாலினே அழைத்துச் சென்றார். மாடிப் படிக்கட்டுகளின் கைப்படி சுவரில் சறுக்கி விளையாடிய காலத்தை நினைவுகூர்ந்தார் ஜம்புநாதன்.
“மாடியில் எங்க தாத்தாவுக்கு பூஜையறை உண்டு” என்றார் அவர். “இப்போது எல்லா இடமும் புத்தகம்தான்” என்றார் முதல்வர் ஸ்டாலின். முதல் மாடியில் எங்கு நோக்கினும் புத்தகங்கள்தான். அந்த அறையின் முன் விழுந்து கும்பிட்டார் ஜம்புநாதன்.
தனது அன்னை தயாளு இருக்கும் அறைக்கும் அழைத்துச் சென்றார் முதல்வர். அவரிடம் ஆசி பெற்றார்கள் சரோஜாவும் அவருடைய மகள்கள் சந்திரிகா, பிரியா மற்றும் மகன் அனந்த்.
சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அவர்களுடன் செலவிட்டு, காபி, பர்பி, வடை கொடுத்து உபசரித்தார்.
“ஒரு காலத்தில் இந்த வீட்டின் பெயர் கல்யாணி. ஏனெனில் இந்த வீட்டில் ஏராளமான திருமணங்கள் நடக்கும்” என்று நினைவுகூர்ந்தார் சரோஜா.
“வீட்டைப் பார்க்க முடியுமா என்று தெரியாமல் தவிப்புடன் இருந்தேன்.
இரவெல்லாம் அதைப் பார்க்கும் ஆசையில் தூங்கவில்லை. முதல்வர் என் ஆசையைப் பூர்த்திசெய்து விட்டார்” என்று கூறிய சரோஜா, செவ்வாய்க்கிழமை மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டார்.
உற்சாகத்துடன் இருந்த முதல்வர், கிளம்புவதற்கு முன்னால் எதிர் வீட்டுக்காரர்களிடம் சென்று, “வந்தவங்க யாரு தெரியுமா. இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்களா இருந்தவங்க” என்று சொல்லிவிட்டேதான் கிளம்பினார்.