பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய பாடலாசிரியர் அறிமுகமாகியுள்ளார். அவர்தான் நவீன தமிழ் இலக்கிய வெளியில் கவிஞராக புகழ்பெற்ற இளங்கோ கிருஷ்ணன்.
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
எழுத்தாளராகவும், கவிஞராகவும் அறியப்பட்ட இளங்கோ கிருஷ்ணன், முதன்முறையாக திரைப்பட உலகில் கால்பதித்துள்ளார்.
கோயம்புத்தூரில் பிறந்த இவரது இயற்பெயர் இளங்கோவன். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை சொந்த ஊரிலேயே முடித்தார்.
பட்டயக் கணக்காயர் அலுவலகத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சில ஆண்டுகள் அதுதொடர்பான வேலையில் இருந்தார்.
பிறகு அவர் சென்னைக்கு நகர்ந்த அவர் பத்திரிகைத் துறை பணியில் சேர்ந்தார். குங்கும் டாக்டர் இதழின் ஆசிரியராக இருக்கிறார்.
நவீன கவிதையுலகில் முக்கிய கவிஞரான இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளில் புதுமையான உருவகமும் இசைத்தன்மையும் மிகுந்திருக்கும். அரசியல் சார்ந்த கவிதைகளுக்காகவும் அவர் பேசப்பட்டார்.
கவிதை அழகியல் கோட்பாடுகள் பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.
கல்லூரியில் படிக்கும் காலங்களில் கவிதை எழுதத் தொடங்கிய அவர், 2007 ஆம் ஆண்டு தன் முதல் கவிதைத் தொகுப்பான காயசண்டிகை என்று நூலை வெளியிட்டார்.
பட்சியின் சரிதம் (கவிதைகள்), பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் (கவிதைகள்), வியனுலகு வதியும் பெருமலர் (கவிதைகள்) மருதம் மீட்போம் (கட்டுரைகள்) போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
தம் படைப்புகளுக்காக தேவமகள் அறக்கட்டளை விருது, சென்னை இலக்கிய விருது, வாசக சாலை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஒரு கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் வலம்வந்த இளங்கோ கிருஷ்ணன், பாடலாசிரியர் என்ற புதிய தளத்தில் அறிமுகமாகியுள்ளார்.
காட்சி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“பொன்னியின் செல்வன் படத்திற்கு பாடல் எழுதுவதற்காக, பத்தாம் நூற்றாண்டுத் தமிழும் நவீன கவிதை பரிச்சயமும் இருக்கக்கூடிய ஒருவரைத் தேடினார்கள். ஒருநாள் எழுத்தாளர் ஜெயமோகன் என்னை அழைத்துப் பேசினார்.
பொன்னியின் செல்வனை எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே படித்திருக்கிறேன். அந்த படத்திற்கு பாடல் எழுத முடியுமா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே ஏற்றுக்கொண்டேன்.
சினிமாப் பாடல், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாட்டார் பாடல் என பல வடிவங்களில் பாடல்கள் எழுதினேன். நான் எழுதிய கவிதைகள், படைப்புகள் அனைத்தையும் இயக்குநர் மணிரத்னம் படித்திருந்தார்.
என்னை அழைக்கும்போது வெறுங்கையாக போகவேண்டாம் என சில வரிகளை எழுதிக்கொண்டு போனேன். அவரை இம்பரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
காவிரிக்கு பொன்னி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. படத்தின் பெயர் பொன்னியின் செல்வன் என்பதால், பொன்னி நதி என்று தொடங்கும் பாடலையும் அதில் வைத்தார்கள்.
பத்தாம் நூற்றாண்டின் பேச்சு மொழியும் இலக்கிய மொழியும் வேறு வேறு. அந்த காலகட்டத்தின் பேச்சு அல்லது எழுத்துத் தமிழில் எழுதினால் தற்போதைய தலைமுறைக்குப் புரிய வாய்ப்பில்லை.
இன்றைய பேச்சு வழக்குத் தமிழில் எழுதினால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்.
தமிழ் சினிமாவின் பெருங்கனவு பொன்னியின் செல்வன்.
நாவலை வாசித்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில், இவர் நடித்தால் நன்றாக இருக்கும் நினைத்திருப்பார்கள். பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எம்ஜிஆர்கூட முயற்சி செய்திருக்கிறார்.
இயக்குநர் மணிரத்னமும் பல காலகட்டங்களில் திரைப்படமாக்க நினைத்திருக்கிறார்.
என் பாடல்களை நவீன எழுத்தாள நண்பர்களும் ரசிகர்களும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற கவலை இருந்தது. ஆனால் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பில் மகிழ்ச்சியாக இருந்தது” என்று மனந்திறந்து பேசியிருக்கிறார்.
பா. மகிழ்மதி