டைரி – ‘அட’ சொல்ல வைக்கும் த்ரில்லர்!

அறுசுவையில் ஏதேனும் ஒன்றின் அளவைக் கூட்டிக் குறைத்து, உள்ளடக்கத்தை மாற்றியமைத்து நாவைச் சுண்டியிருக்கும் புது ருசியை விதவிதமாகப் பெறலாம்.

வண்ணங்களிலும் கூட, கொஞ்சமாய் அடர்த்தியைக் கூட்டியோ குறைத்தோ இது போலப் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.

அந்த வரிசையில், ‘த்ரில்லர்’ வகை கதைகளையே விதவிதமாக முயற்சித்துப் பார்க்கலாம் என்ற முயற்சியில் நடிகர் அருள்நிதி இறங்கிவிட்டாரா என்று தெரியவில்லை. இந்த முறை இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘டைரி’ தந்திருக்கிறார்.

ஒரு பேருந்தையும் சில பயணிகளையும் மையப்படுத்திய இக்கதை உண்மையிலேயே நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கிறதா? முழுமையாக ஒரு த்ரில்லர் பார்த்த திருப்தியைத் தந்திருக்கிறதா?

மீண்டும் போலீஸ் வேடம்!

2000ஆவது ஆண்டில் ஊட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் ஒரு புதுமணத் தம்பதி கொலை செய்யப்படுகின்றனர்; அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால், கொள்ளையர்கள் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கவில்லை.

பதினாறு ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கை விசாரணை செய்யத் தொடங்குகிறார் புதிதாக போலீஸ் அதிகாரி ஆன வரதன் அண்ணாதுரை (அருள்நிதி). தானாகத் தன்னைத் தேடி வந்த வழக்கு என்பதால், சாட்சியங்களும் அது போல கிடைக்குமென்று நம்புகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊட்டியில் நடந்தது போலவே கும்பகோணம் அருகே ஒரு திருட்டு நடந்திருப்பதாக வரதனுக்குத் தெரிய வருகிறது.

அந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரைப் பற்றி மட்டும் பல ஆண்டுகளாகத் தகவல் ஏதும் இல்லை. வரதன் கும்பகோணத்திற்கு கிளம்பவிருந்த நிலையில், அவரது கார் திருடு போகிறது.

அதன் தொடர்ச்சியாக நிகழும் சில சம்பவங்கள், ஊட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் ஒரு பேருந்தில் அவரைப் பயணிக்கச் செய்கிறது.

அந்த பேருந்தில் ஆட்களைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கும் மூன்று திருடர்கள் இருக்கின்றனர்; வீட்டைவிட்டு ஓடிவந்த எம்.எல்.ஏ. மகளும் அவரது காதலனும் பயணிக்கின்றனர்.

அவர்களிருவரையும் கொல்ல ஒரு கும்பலே வெறி கொண்டு திரிகிறது. ஒரு வழக்கறிஞர் தனது மனைவி குழந்தைகளுடன் அதில் ஏறுகிறார். ஒரு பள்ளி மாணவி இருக்கிறார். வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞனும் கூட அதில் இருக்கிறார்.

இவர்களுக்கு நடுவே, ஒரு மூதாட்டியும் ஒரு இளைஞனும் (நக்கலைட்ஸ் தனம் & ஷ ரா) அப்பேருந்தில் இருந்து இறங்கினால் போதுமென்ற மனத்துடன் பதைபதைக்கின்றனர். காரணம், பேருந்தில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக இருவரும் நம்புவதுதான்.

இந்த சூழலில், அந்த நகைக்கொள்ளையர்களை வரதன் கையும் களவுமாகப் பிடித்தாரா? எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அந்த காதலர்களை துரத்தினார்களா? அந்த அமானுஷ்ய சக்தி என்னவானது என்பதைச் சொல்கிறது ‘டைரி’.

கூடவே, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த வரதனின் பெற்றோர் பற்றிய உண்மையையும் இறுதியில் தெரிய வைக்கிறது.

பரபர திருப்பங்கள்!

நல்ல த்ரில்லர் என்பது ஒரு சாதாரண காட்சியில் மிகச்சாதாரணமாக காண்பிக்கப்படும் மனிதர்களை, பொருட்களை, அதில் பொதிந்திருக்கும் காலத்தை திருப்பத்திற்கான காரணமாகப் பயன்படுத்த வேண்டும். ‘டைரி’ ஏறக்குறைய அவ்விஷயத்தை சரியாகக் கையாண்டிருக்கிறது.

வரதன் எனும் பாத்திரம் தீர்வு காண முயலும் வழக்கு 16 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

அதில் துப்பு துலக்குவது என்பது பெரும் நீர்நிலையில் மூழ்கிய பொருளொன்றைத் தேடுவதற்கு ஒப்பானது.

ஆனாலும், அதையே திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறது திரைக்கதை.

உண்மையில் இக்கதை வெறுமனே த்ரில் ஊட்டுவதாக இல்லை; இது ஒரு பேய்க்கதை ஆகவும் பேண்டஸி கலந்ததாகவும் இருப்பதுதான் இதன் சிறப்பு.

இதனைச் சொன்னபிறகும், உங்களால் நிச்சயமாக படத்தின் முக்கியமான திருப்பமொன்றைக் கண்டுபிடிக்க முடியாது.

அந்த விஷயத்தில் நம்மை அசரடித்திருக்கிறார் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இன்னாசி பாண்டியன்.

இப்படத்தில் அருள்நிதிக்கு ‘ஆக்‌ஷன்’ பில்டப்கள் உண்டு. மிக புத்திசாலித்தனமாக ரொம்பவும் சாதாரண வசனங்கள், பத்தோடு பதினோரு நபராகத் தோன்றும் உடல்மொழியைக் கொண்டதாக அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் அமைந்தாலும், எடுத்த காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றும் குணாம்சம் இருப்பதை முதலிலேயே வெளிப்படுத்தி விடுகிறார்.

ஆதலால், அதன்பின் ஹீரோயிசம் காண்பிப்பது கதையோடு கலந்ததாக மாறிவிடுகிறது.

நாயகியாக வரும் பவித்ரா மாரிமுத்து, சட்டென்று சாரதா ஸ்ரீநாத்தை நினைவூட்டுகிறார்.

ஆனால், மிகநேர்த்தியாக ஒரு இளம் பெண் போலீஸ் அதிகாரியைப் பார்த்த உணர்வை ஊட்டுகிறார்.

வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷும் சரி, மூன்று திருடர்களாக நடித்தவர்களும் சரி, மிகச்சரியாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நமக்கெல்லாம் தெரியவந்த தணிகைக்கு இதில் நல்ல வேடம் தரப்பட்டிருக்கிறது.

இவர்கள் தவிர்த்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், வழக்கறிஞர், அவரது மனைவி, குழந்தைகளாக நடித்தவர்கள் மகன் மட்டுமே தனக்குத் துணை என்று சொல்லும் தாய், பழங்குடியின மக்களாக வருபவர்கள் என்று அனைவருமே நல்ல நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

ஆர்ஜே ஷ ரா, நக்கலைட்ஸ் தனம் மட்டுமல்லாமல் போலீஸ்காரராக வரும் சாம்ஸும் அவ்வப்போது ஒன்லைனர்களை அள்ளிவிடுகிறார்.

அதனால், சீரியசான காட்சிகளில் கூட நம்மால் சிரிக்க முடிகிறது. அதுவும் பின்பாதியில் ஷ ரா மட்டுமே கதையின் அடிப்படையைச் சிதைத்துவிடாமல் ஜோக்குகளாக அடித்து நொறுக்கியிருக்கிறார்.

அருள்நிதி போலவே, தொடர்ச்சியாக ‘த்ரில்லர்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதோடு, அவற்றைத் தயாரிக்கவும் முன்வருபவராக விளங்குகிறார் அரவிந்த் சிங்.

அருள்நிதியின் சமீபத்திய படங்களில் இவரது ஒளிப்பதிவு பங்களிப்பு தொடர்கிறது. இதிலும் அப்படியே. மனிதர் உண்மையிலேயே தன் கேமிரா பார்வையால் ‘த்ரில்’ கூட்டியிருக்கிறார்.

எஸ்.பி.ராஜசேதுபதியின் படத்தொகுப்பு திரைக்கதையோடு இணைந்து பயணிக்க வகை செய்கிறது.

ரான் ஈதன் யோகன் மற்றும் ராஜேஷின் இசையில் பாடல்கள் சட்டென்று கடந்து போனாலும், பின்னணி இசை காட்சிகளோடு பொருந்தி தனித்துவத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.

லாஜிக் தேவையா?

தொடக்கம் முதல் முடிவு வரை பல திருப்பங்களைக் கொண்டிருந்தாலும், இக்கதையில் லாஜிக் சார்ந்து பல கேள்விகளை எழுப்ப முடியும்.

ஒருகட்டத்தில் பேருந்தில் இருந்து எல்லோரையும் இறக்கிவிடுமாறு நாயகி சொல்லியும் நாயகன் அதனைச் சட்டை செய்யாமல் அதிலேயே பயணிப்பார். அதன்பிறகு பேருந்துக்குள் நடக்கும் மோதல் திரைக்கதையைத் தொய்வடையச் செய்யும்.

அதையும் மீறி மீண்டுமொரு திருப்பத்தை அறிமுகப்படுத்தி திரைக்கதையை அடுத்த ‘கியருக்கு’ மாற்றியிருப்பார் இயக்குனர்.

இப்படத்தில் வழக்கமான முடிவைத் தாண்டி ஒரு இரண்டாம் கிளைமேக்ஸும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பார்க்கும் சிலர், ‘புரியவில்லையே’ என்று சொல்லக்கூடும்.

’லாஜிக் இல்லையே’ என்ற கேள்வியும் கூட பெருகலாம். ‘மீண்டும் ஒருமுறை படம் பார்த்தால் புரியும்’ என்று இப்படக்குழு அவர்களுக்கு பதில் சொல்லக்கூடும்.

அதற்கேற்ற வகையிலேயே படமும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு நல்ல த்ரில்லர் காண வேண்டுமென்பவர்கள் ‘டைரி’ பார்த்ததும் ‘அட’ என்று சொல்வார்கள். இயக்குனர் இன்னாசி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

-உதய் பாடகலிங்கம்

You might also like