நாடோடி மன்னனுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த நற்சான்றிதழ்!

– அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் 100-ஆவது நாள் விழா சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில் 30.11.1958-இல் நடைபெற்றது.

அவ்விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை வருமாறு;

நூறு நாள்களாக மிக வெற்றிகரமாக நடக்கும் ‘நாடோடி மன்னன் படத்தைக் கண்டுகளித்த இலட்சக்கணக்கான மக்கள் இன்று தங்கள் பாராட்டுதலையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதற்கும், மக்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவும், இந்த விழாவினை இங்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சமீபகாலம் வரை தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட நல்ல படங்கள் வெளிவந்திருக்கின்றனவா என்று பார்த்தால், வந்த படங்களிலே நல்ல முறையிலே இப்படிப்பட்ட முழு வெற்றியைத் தந்த படம் என்று எதையும் பார்க்க முடியவில்லை.

நண்பர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் நம்முடைய புன்னகையைப் பெறுவதை மட்டும் இலாபகரமாகக் கொண்டு நாட்டு மக்கள் மறக்க முடியாத, நாட்டு மக்களின் பேராதரவைப் பெறக்கூடிய, நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை கொண்ட ஓவியத்தை நமக்கு அளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் அவருக்குத் தங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதற்காக மதுரையிலே தங்கவாள் பரிசளித்து மகிழ்ந்தார்கள்.

அடுத்தபடியாக, சேலத்திலே வெள்ளி வீரவாள் அளித்தார்கள். சென்னையிலே சர் தியாகராயர் கல்லூரியில் ஒரு தங்கவாள் அளிக்கப்பட்டது.

இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பாராட்டுவதன் பொருள் என்ன என்று பார்த்தால், வெகுகாலமாக இப்படிப்பட்ட படம் வெளிவந்ததில்லை; மக்கள் எதிர்பார்த்திருந்தபடி நல்ல வெற்றிகரமான படத்தைத் தயாரித்து மக்களுக்கு அளித்திருக்கிறார்.

அவர் தி.மு.கழகத்தைச் சார்ந்தவர் என்பதனாலே நாங்களெல்லாம் மகிழ்ச்சி அடைகிறோம். பெருமைப்படுகிறோம். உண்மையிலே அவருடைய இந்தப் பெரும்பணியின் பயன் சொல்லுந்தரமன்று.

கலைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசியல் கட்சிகளில் ஈடுபாடு கொள்வதால் அவர்களுடைய கலைத்திறமையே கெட்டுவிடும் எனப் பலர் சொல்லுகிறார்கள்.

ஆனால், இன்று ‘நாடோடி மன்னன்’ வெற்றியின் மூலம், இலட்சியப் பற்றும், கொள்கையில் விடாப்பிடியும் கொண்ட எம்.ஜி. இராமச்சந்திரன் கலைத்திறன் குன்றாமல் காட்ட முடியும் என்பதைக் காட்டிவிட்டார்.

நம் கலைத்துறை வெறும் பொழுது போக்குக்கு மட்டுமே என்று இல்லாமல், நாட்டுக்கும் அது பயன்படும் என்பதை உணர்ந்து, இனிமேல் எல்லாக் கலைஞர்களும் முயலுவார்கள்.

அதற்கு இந்த ‘நாடோடி மன்னன்’ படம் ஒரு நல்லபாடமாக அமைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி, தமிழில் எடுக்கப்படும் படங்கள் நல்ல கருத்துள்ளவைகளாக,

நாட்டுக்குப் பயன்பட வேண்டுமென்ற நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்டால் – நாட்டு மக்களின் நல்லாதரவு கிடைப்பது உறுதி என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தை எம்.ஜி.ஆர். பெறப்போவதில்லை. மற்றப் படங்களின் வெற்றியினின்றும் இந்தப் படத்தின் வெற்றி மாறுபட்டது என்பதை, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மானேஜிங் டைரக்டர் வீரப்பன் பேசுகையில் எடுத்துச் சொன்னார்.

இலாபம் பார்க்காமல், கலை நோக்கு மட்டும் கொண்டு உள்ளத்திலுள்ள கருத்தை நாட்டுக்கு அளிக்கும் பண்புவாய்ந்த ஒரு கழகத் தோழன் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சி இது!

இதுமட்டுமல்ல; பல படங்கள் இலட்சக்கணக்கிலே செலவிட்டு எடுக்கப்படுகின்றன. அந்தப் படங்களிலே ஒன்றிரண்டு நல்ல வெற்றிகரமாக ஓடினால், அதனாலே சிலர் சில மாதங்களுக்குள்ளேயே பெரும் பணக்காரராக மாறலாம்; 4 அடுக்கு வீடு ஆறு அடுக்கு மாளிகையாக மாறலாம்.

அவர்களுடைய பழைய கார் மாறி புதுப் புது மோட்டார்களிலே அவர்கள் செல்லலாம்; அவர்கள் வீட்டிலுள்ள நகைகளிலே வைரம் மின்னும் இதைத் தவிர, நாட்டுக்குப் பயன் இல்லை.

வெறும் இலாப வேட்டைக்காக புகுத்தியும் கலையை வளர்க்கலாம்; புகழும் உச்சநிலையடை முடியும் என்பதை ‘நாடோடி மன்னன் நிரூபித்துருக்கிறது.

எம்.ஜி.ஆர். நம் கழகத் தோழர் என்று சொல்லிக் கொள்வதிலே நாமெல்லாம் பெருமை அடைகிறோம். நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்துக்கு ஆற்றும் பணிகளில் ‘நாடோடி மன்னன்’ ஒரு சிறந்த பணியாகும்.

இலாபத்தைக் கருதாமல் நாட்டு விடுதலை இலட்சியத்தையும், நல்ல உணர்ச்சியையும் ஊட்டக்கூடிய வகையிலே இந்தப் படத்தைப் தயாரித்து அதன் மூலம் நம் கழக இலட்சிய வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

தோழர் இராமச்சந்திரன் மட்டுமின்றி, அவருடன் ஒத்துழைத்த எல்லா நடிக-நடிகையரின் திறமையும், உச்சநிலையில் ஒரு சேர அமைந்திருக்கிறது.

நல்ல நாதம் எழுப்பக் கூடிய வீணையைத் திறமைமிக்க வித்துவான் சுருதி குறையாமல் வாசித்தால் எப்படி நாத இன்பம் கிடைக்குமோ, அப்படி நமது ‘நாடோடி மன்னன்’ படத்தில் அனைத்தும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

கத்திச் சண்டை இதுபோல வேறு எதிலும் இல்லை; காதல் காட்சி, பண்பு குறையாமல் இப்படி வேறு எந்தப் படத்திலும் இல்லாத வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது’ என்று பார்த்தவர்கள் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதைப் போல உணர்ச்சியூட்டும் வசனம், கருத்துப் பொதிந்த பாடல், இன்பமூட்டும் இசை வேறு எதிலும் இல்லை’ என்று ஒவ்வொருவரும் கூறும்வகையில்,

எந்தக் கோணத்திலிருந்து இப்படத்தை ஆராய்ந்தாலும் அந்தக் கோணத்தில் இதுவரை எதற்கும் கிடைக்காத சிறப்பு இப்படத்திற்குக் கிடைத்திருக்கிறது.

மற்றப் படத் தயாரிப்பாளர்களைப் போல் தனக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், எல்லாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையோடு, மிக அடக்கத்தோடு படம் எடுக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

அதனாலேதான், இன்று டைரக்டர் இராஜா சந்திரசேகர் பாராட்டினார்; பழம்பெரும் நடிகரான சித்தூர் வி. நாகையா பாராட்டினார். இப்படியொரு நல்ல புகழைத்தானும் பெற்று, தான் சார்ந்துள்ள கழகத்துக்கும் தேடித் தந்திருக்கிறார்.

இன்று, இப்படத்திலே ஈடுபட்டுப் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களுக்கும் அன்பளிப்புப் பரிசுகள் வழங்கினார். அத்தனை கலைஞர்களும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது.

கழகத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் பலருண்டு. கழகத்தைப் பிடிக்காதவர்களும் இருப்பார்கள்; கழகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அச்சப்படுவர்களும் இருப்பார்கள்; கழகம் என்றால் அருவருப்படைபவர்களும் இருக்கக் கூடும்.

கழகம் நல்லது என்று சொல்லத்தக்க கலைஞர்களுக்கும், மற்ற எல்லோருக்குமே இந்தப் பரிசினை அளிப்பதன் மூலம், எல்லாக் கலைஞர்களுடைய வீட்டிலும் நம் கழகச் சின்னம் – கறுப்பு – சிவப்புச் சின்னம் பொறிக்கப்பட்ட சின்னம் இருக்கச் செய்து, அதைத் தினந்தோறும் அவர்கள் பார்த்து மகிழும்படியாகச் செய்திருக்கிறார் நமது எம்.ஜி.ஆர்.

இதனாலே நம் கழகத்திற்கு ஒரு புதுப்பெருமை வந்துவிட்டதாகச் சொல்ல வரவில்லை, நான்! அப்படி எண்ணி ஏமாறுபவன் அல்ல நான்.

கழகக் கொள்கையிலேயே ஊறிய எம்.ஜி.ஆர்., அக்கழகம் என்ன சொல்கிறது அதன் திட்டம் என்ன – இலட்சியம் என்ன என்பதைப் பல கலைஞர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.

இதன் மூலம் ஒருசிலர் வேண்டுமானால், கொள்கை பற்றி அக்கறை செலுத்தாவிட்டாலும், சிலராவது நம் கொள்கையை ஆராய இருக்கிறார்கள்.

இந்த வகையிலே எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்திற்குப் பலன் தேடித் தந்து வருகிறார் என்பதையறிந்து பெருமைப்படுகிறேன்.

நான் பல தம்பிமார்களைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருதுறையிலே திறமை பெற்றுத் திகழ்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை ஒருபோதும் இழக்கக் கூடாது என்பதுதான் என் எண்ணம்.

எவரும் கழகத்திலே சேர்ந்து பணியாற்றுவதாலே தங்களுக்குள்ள திறனை இழந்துவிடக் கூடாது; மாறாக, மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சங்கீதம் தெரிந்தவர்கள் கழகத்திலே சேர்ந்தால் சங்கீதத் திறமை குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 ஓவியர்கள் கழகத்திலே சேர்ந்தால், இன்னும் சிறந்த ஓவியராகத் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக் கழகத்திலே பணியாற்றுகின்ற பேராசிரியர்கள் கழகத்தில் சேர்ந்தால் அதிக அளவிலே தங்கள் திறமையைக் காட்ட வேண்டும். இப்படிச் செய்வதனாலே தான் கழகத்துக்கு வலிமை பெருகும்.

அமெரிக்காவில் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த பால்ராப்சன் என்னும் உலகப் புகழ்பெற்ற ஒரு பாடகர் இருக்கிறார். அவர் உடல் கறுப்பு, உள்ளம் வெள்ளை. அவருடைய தொண்டு மகத்தானது. அவர் தன்னுடைய இசைக் கலை மூலம் உலகில் பலரை இன்புறச் செய்கிறார்.

அவருடைய இசைத் திறனைக் கண்ட உலகத்தினர், ‘நீக்ரோ இனத்திலுமா இப்படிப்பட்ட ஒரு பாடகன் இருக்கிறான்? என்று வியப்புறுகிறார்கள்.

‘நீக்ரோ இனத்தவர் அடிமைகளாகக் கருதப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள்.

அவர்களுடைய விடுதலைக்காகப் பலர் போராடியிருக்கின்றனர்.

அவர்களுக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட சமூகமாக நாம் இன்று இருக்கிறோம்.

அப்படி நம் நாட்டிலும் நல்ல திறமைசாலிகள் உண்டு என்பதை நாம் வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.

இக்கழகம் எல்லோருக்கும் பொதுவானது; இதன் இலட்சியம் எல்லோருக்கும் சொந்தம். எவ்வித பேதமும் பாராட்டாதது கழகம்,பேதம் பாராட்டினால் தான் சிலர் தாங்கள் வாழ முடியும் என்றிருக்கலாம்.

அவர்களெல்லாம் ஒரு காலத்தில் வந்து நம்முடன் சேரலாம் நேற்று சேராதவர்கள் இன்று சேரலாம். இன்று சேராதவர்கள் நாளைச் சேரலாம்.

கேரளம் என்று சொல்லக்கூடிய சேர நாட்டைச் சேர்ந்தவர்களும். கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களும், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்திலே தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்ற அடிப்படை உண்மையை அவர்களெல்லாம் உணர்வார்களானால் அவர்கள் அடையும் புகழ், பெறுகின்ற செல்வாக்கு நாட்டுக்குப் பயன்படுமானால், நாட்டு விடுதலை இலட்சியத்துக்கு அது பேருதவியாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் எடுத்த இந்தப் படத்தில் பானுமதியம்மையாரும், சரோஜாதேவியாரும், நம்பியாரும் தமிழ் பேசியிருக்கிறார்கள் என்றால் காரணம் என்ன? பேதம் பாராட்டதா இயக்கம் எம்.ஜி.ஆர். சார்ந்துள்ள கழகம்.

திராவிட இன உணர்ச்சியையூட்டக் கூடிய முறையிலே இந்தப் படத்திலே வரும் ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலே பாட்டிசைத்து நாட்டியம் ஆடுகின்ற அந்தக் காட்சியை நான் கூர்ந்து கவனித்தேன். அந்தக் காட்சியின் ரசத்தைப் பருகுவதற்காகக் கவனிக்கவில்லை.

அந்தப் பருவத்தை நான் கடந்துவிட்டேன். ஆனால், தமிழ், தெலுங்கு மலையாள, கன்னட, மொழிகளுக்கிடையே ஒருமைக்கோடு ஓடிக்கொண்டிருந்த அவர்களுடைய முகபாவத்தை, நான்கு மொழிகளிடையே எவ்வளவு பந்தம் – பாசம் – ஒட்டு – உறவு இருக்கிறது என்பதைக் கண்டேன்.

நாட்டுக்குப் பிடித்தமான நல்ல படமாக அங்குலத்துக்கு அங்குலம் ஒரு நோக்கத்தோடு எந்தப் படத்தை எடுத்தாலும் எப்போது எடுத்தாலும் அது ஓடும்.

‘படம் ஓடவில்லையே’ என்று வருந்தும் சில படத்தயாரிப்பாளர்கள், ‘மக்களுக்கு இரசிக்கத் தெரியவில்லை; அதனாலே தான் உயர்ந்த படமாக எடுத்தும் அது ஓடவில்லை என்கிறார்கள். தயாரிப்பாளர்கள் கூறுவது உண்மைதான்.

நண்பர் இராமச்சந்திரன், இந்தப் படத்தை தயாரித்த நேரத்தில், ‘இன்ன நோக்கத்தோடும் படம் எடுக்கிறேன்’ என்று என்னிடம் கூடச் சொல்லவில்லை.

அவர் சொல்லாததற்குக் காரணம், வழக்கமாக அவருக்கிருக்கின்ற கூச்ச சுபாவம் தான். தாய், குழந்தையைப் பெற்றெடுத்து, அழுக்குப் போக்கிப் பிறகு தன் கணவனிடமோ, மூத்த மகனிடமோ காட்டுவது போல, தோழர் எம்.ஜி.ஆர் அவர்களும் தான் பெற்றெடுத்த செல்வத்தை நோக்கம் கெட்டுவிடாமல் அழுக்கு நீக்கி என்னிடமும், உங்களிடமும் இல்லை என்று காட்டியிருக்கிறார்.

இதைப் பார்த்து, நன்றாக  இல்லை என்று யார் சொல்ல முடியும்?, உன்னைத் தவிர இத்தகைய கலைச் செல்வத்தை வேறு எவரால் பெற முடியும்? நீ பெற்ற செல்வம் அழகு இல்லாமல் அவலட்சணமாகவா இருக்கும்? என்று நாம் அவரைப் பார்த்துக் கேட்கின்ற நிலையிலே இருக்கின்றோம்.

தோழர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய உள்ளம் பெரிது! அவருடைய கலைத் திறமை பெரிது! கழகத்தின் பால் அவர் பெற்றுள்ள ஈடுபாடு வேறு எதில் பெற்றிருந்தாலும் அதில் சிறப்பு இருக்கும்.

அவருடைய குணம் தங்கம் போன்றது. தங்கத்தை உருக்கி என்ன பொருள் செய்தாலும் அழகாக இருப்பதுபோல, அவருடைய நேர்மையான உள்ளம், அவர் எதில் ஈடுபட்டாலும் வெற்றி காணச் செய்யும்.

ஒருவர் நல்ல உள்ளத்தோடு எதில் ஈடுபட்டாலும், அத்துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையிலே முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் எம்.ஜி.ஆர்.

தோழர் எம்.ஜி.ஆர் ஒரு சர்க்கஸ் கம்பெனியிலே பணியாற்றிக் கொண்டிருந்தால் கூட அத்துறையில் வெற்றியின் உச்சியைப் பிடிக்கத்தான் செய்வார். மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்தாலும் அதில் மதிக்கத் தகுந்தவராகப் புகழ்பெற்று விளங்குவார்.

தங்கத்தை எடுத்து நகையாகச் செய்தாலும் அது அழகாகத்தான் இருக்கிறது. நமக்குத் தங்கம் தான் முக்கியமே தவிர தங்கத்தாலான பொருளா முக்கியம்? தங்கம் இருந்தால் அதை நமது விருப்பம்போல் செய்து கொள்ளலாம்!

தோழர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தங்க உள்ளத்தைப் பாராட்டத்தான் அண்மையில் மதுரையில் முத்தமிழ்ச் சங்கம் முழங்கிய மதுரையம்பதியில் நற்றொண்டர்கள் நிறைந்த அந்தத் திருநகரில் – தங்கவாள் பரிசு அளித்தார்கள்.

‘தங்கம் போன்ற மனம்படைத்தவர் என்றும் பிரகாசிக்கட்டும்’ என்றுதான் தங்க வாளைத் தந்தனர். இலட்சியத்திற்கு ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்த்தொழிக்கும் வாளாக அது இருக்கட்டும்.

அவர் பெற்ற புகழ் நாம் பெற்ற புகழாகும்; நாம் பெற்ற புகழ் நாட்டுக்குச் சொந்தம். நம் ஒவ்வொருவருக்கும் அவர் புகழிலே பாத்தியம் உண்டு. நம் நாட்டின் தலைசிறந்த மகனாக அவரைக் கருதுகிறோம். இன்றைய விழா ஒரு மாபெரும் இலக்கிய விழா

போன்று கலை மாநாடு போன்று காட்சியளிக்கிறது. இது ஒரு தனி மனிதனுக்குச் சொந்தமல்ல; கருத்து வெற்றிக்குச் சொந்தம். கருத்தைக் கலையிலே காட்ட முடியும் என ஒரு நல்ல செயலைச் செய்துகாட்டிய படம் ‘நாடோடி மன்னன்’.

இப்படத்தைப் பற்றி இதன் வெற்றியைப் பற்றி இன்னும் பல காலத்துக்கு மக்கள் பேசக்கூடிய ஒரு நல்ல படம்.

இனிமேல் படம் எடுப்பவர்களையும் ஒரு நல்ல கருத்தை அடிப்படையாக வைத்து எடுப்பதற்குத் தூண்டக்கூடிய படம் இது.

பண்பு குறையாமல் காதல் காட்சியைக் காட்ட முடியும் என்பதற்கு வழிகாட்டி இப்படம் வியக்கத்தகும் சண்டைக்காட்சிகள் நிறைந்த சண்டைப் படம் இது!

சண்டைப்படம் மட்டுமல்ல எம்.ஜி.ஆர். இரு உருவில் வந்து கைகுலுக்கும் காட்சியை மிகத் திறமையுடன் காட்டும் படம்!

உள்ளத்திலுள்ள சங்கடத்தை முகத்தில் எப்படிக் காட்டமுடியும் என்பதைத் தோழர் எம்.ஜி.ஆர் மன்னனாக நடிக்கும்போது, நாடோடியாக நடிக்கும்போதும், கணவன் மனைவியிடம் கொஞ்சும் போதும் அவர் நடிப்பு உச்சத்தை எட்டிப் பிடிக்கின்றது.

தோழர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய உள்ளத்தில் சிறந்த திறமை இருக்கிறது. எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்றால், வெறும் கத்திச் சண்டை மட்டுமே அந்தப் படத்தில் எடுக்கிறார்கள் என்று சில அமைச்சர்கள் எண்ணுகிறார்கள்.

நேற்றுகூட, கலைவாணர் நினைவு விழாவிலே அமைச்சர் சுப்பிரமணியம் பேசுகையில் ‘அதிகமாகப் படம் பாருங்கள்’ என்றார். நானும் சொன்னேன் – அமைச்சர்கள் அதிகமாகச் சினிமா பார்க்க வேண்டும் என்று!

‘நாடோடி மன்னன்’ வெறும் கோட்டையைத் தாக்கிக் கொடி மரத்தைச் சாய்க்கின்ற சண்டைப் படம் மட்டுமல்ல; ஒரு கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி, மக்களுக்கான திட்டம் தீட்டித் தரக்கூடிய அரசியல் பாடம் கற்பிக்கின்ற ஒரு நல்ல படம்.

நான் சில மாதங்களுக்கு முன்பு மதுரையிலே பேசிய ஒரு கூட்டத்தில், ‘சென்சார் தொந்தரவு இல்லாமல் படம் எடுக்க அனுமதித்தால் இந்த நாட்டில் விடுதலை உணர்ச்சியை உண்டாக்கச் சில படங்களை எடுத்து வெளியிட்டாலே போதும்’ என்று கூறினேன்.

அதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் ‘அண்ணாதுரை 4 சினிமாப்படம் எடுத்தால் திராவிட நாடு வாங்கிவிட முடியும் என்று சொல்லுகிறார்’ என்று பிரச்சாரம் செய்தார்கள்.

சம்பூர்ண இராமாயணமும் மகாபாரதமும் படமாக்கப்பட்டு நாட்டுக்கு ஏற்படும் பயன் என்ன? மோட்சத்துக்கு வழி காட்டுவதாகக் கூறும் அத்தகைய படங்களை எடுத்தால் நாடு விடுதலை பெற்றுவிடுமா?

ஒரு மாளிகை – அதன் பக்கத்திலே கலமிழந்த குடிசை; மாளிகையிலேயுள்ள மேனாமினிக்கி – அவளிடம் வந்து பிச்சை கேட்கும் ஏழை; ‘பிச்சை இல்லை, போ’ என்று அந்த ஏழையை அவள் விரட்டும் கொடுமை – இப்படிப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டால் தான் நாட்டின் நிலைமை நாட்டு மக்களுக்குப் புரியும்; நாட்டின் முன்னேற்றத்திலே நாட்டம் செலுத்த மக்களுக்கு எண்ணம் உண்டாகும்.

மேனாட்டு நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் ஜெர்மன் நாட்டுச் சர்வாதிகாரி ஹிட்லரைப் போல நடித்துக் காட்டிய பிறகுதான் உலக மக்களுக்கு ஹிட்லரின் கொடிய செயல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

நம் நாட்டில் உள்ள மக்கள் சினிமாப் படத்தின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் இருக்கின்றன.

மக்கள் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்ளக்கூடிய கலைஞர்கள் வேண்டும். உள்ளத்தை ஆராய்கின்ற இடத்திலே மக்கள் மத்தியிலே கலைஞர்கள் இருக்க வேண்டும். கலைஞர்கள் தங்களுக்குப் பிடிக்கின்ற ஏதாவது ஒரு கட்சியில் இருக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் தான் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி எடுக்கப்படும் படம் நாட்டுக்குப் பயன்படும்.

‘பிரைடு அண்டு பேஷன்’ என்ற படத்தைப் பார்த்தால், அதில் பொதிந்துள்ள சின்னஞ்சிறிய அழகான கருத்து நாட்டு விடுதலைக்குத் தேவையான கருத்து, எப்படிப் படத்தின் மூலம் பயன்படுத்தப்படுகிறது அதனாலே நாட்டுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பது புரியும்.

தோழர் எம்.ஜி.ஆர். அவர்களின் கலை ஆர்வமும், கழகப் பற்றும், சிறந்த பண்பும், பொதுவாழ்வில் அக்கறையும் ஒன்றுக்குப் பத்துமடங்கு ஓங்கி வளரும் என்பது உறுதி. அவருடைய நடிப்பைப் பார்த்தால் எல்லாருக்கும் நல்ல உள்ளம் ஏற்படும்.

ஒரு நல்ல படத்தை எடுத்தால் யாருக்கு இலாபம்? தியேட்டர்காரர்களுக்குத்தான் இலாபம்.

ஆகையினாலே, தியேட்டர்காரர்களெல்லாம் நல்ல படம் எடுக்கும்படி படத் தயாரிப்பாளர்களைத் தூண்ட வேண்டும்.

‘நாடோடி மன்னன்’ போன்ற படங்களை எடுக்கும்படி மற்றவர்களையும் இனித் தூண்டுவார்கள் என நான் நம்புகிறேன். இந்தப் படத்தை உருவாக்க உதவியாக இருந்த அத்தனை பேரையும் பாராட்ட வேண்டும் என்பதற்காகத் தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இப்படி ஒரு விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்தப் படம் அவருடைய திறமைக்கு ஒரு சான்று; இந்த விழா அவர் உள்ளத்துக்கு ஒரு சான்று! ஒரு படம் எடுப்பது தனி மனிதனின் திறமை மட்டுமல்ல; ஒரு படத்தை எடுத்து முடிக்க எல்லா வசதிகளுடன், நல்ல சூழ்நிலையையும் உருவாக்க வேண்டும்.

நடிகர்கள் பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். எல்லா நடிக, நடிகையரும், இன்று இங்கு வந்து மேடையில் அமர்ந்து இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

இனியும், இப்படிப் பொதுமக்கள் நடுவே வர நடிகர்கள் அச்சப்படாமல், பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வார்கள் என நம்புகிறேன்.

தி.மு.கழகம் பெற்றிருக்கின்ற தோழர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர் என்ற முறையில், தி.மு.கழகச் சார்பில் அவரைப் பாராட்டி, நன்றி கூறி, வாழ்த்துகிறேன்.

-க.திருநாவுக்கரசு தொகுத்துள்ள ‘திமுக வரலாறு – பாகம் – 3’ நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like