– மனம் திறந்த விஜயகாந்த்
கேள்வி : அடுத்த கட்டம் அரசியல்னு வெளிப்படையா அறிவிச்சிட்டீங்க… குடும்பத்தில ஆரம்பத்திலே இருந்த அரசியல் சூழ்நிலை என்ன?
விஜய்காந்த் பதில் : எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். தாத்தா காங்கிரஸ்காரர். அப்பா காங்கிரஸ்காரர். நானும், என்னோட அண்ணனும்தான் திராவிட உணர்வுகளால் ஈர்க்கப்பட்டோம். வீட்ல வேற யாரும் அரசியல் பேசறதில்லை.
அப்போது திலகர் திடல்ல பெரிய பெரியக் கூட்டங்கள் நடக்கும். சந்தைதானே திலகர் திடல். எந்தக் கூட்டம் நடந்தாலும் அது தமிழக அரசியல்ல ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
நாங்க அப்ப இளவட்டம். திடலுக்கு உள்ளே போறதில்லை. வெளிய டீக்கடை பக்கத்தில நின்னுகிட்டு பால் இல்லன்னா டீ, காபி குடிச்சிகிட்டு, அங்க கட்டி வச்ச மைக் அடியில, பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்துப்போம். பத்து டீ, பத்து காப்பி குடிச்சிட்டு முடியறவரைக்கும் கூட்டம்தான்.
முடிஞ்சாலும் சட்டுன்னு வீட்டுக்கு போறதில்லை. மறுபடியும் எங்க பேச்சு தொடங்கும். கலைஞர் இப்படிச் சொல்றாரே இதுக்கு என்ன அர்த்தம்? எம்.ஜி.ஆர். இப்படி சொல்கிறாரே இதுக்கு என்னன்னு விடியவிடிய அரசியல் பேச்சுதான்.
வீட்ல பணத்துக்கு குறைச்சலில்ல. அப்பா பெருசா அதட்ட மாட்டாரு. காங்கிரஸை கண்டுக்கலியேன்னு நினைச்சிருக்கலாம். யார் வந்தாலும் பேச்சு கேட்கக் போனாலும் கலைஞர், எம்.ஜி.ஆர். வந்தால் மிஸ் பண்றதேயில்லை.
அதிலும் கலைஞர் பேச்சு கேட்கறதுக்காவே எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க. நான் அப்பவே தீவிர எம்.ஜி.ஆர். விசுவாசி. ‘எம்.ஜி.ஆர். வழி நம்ப வழி’ன்னு இருந்தேன்.
அவர் திமுக சேர்ந்தால் நானும் திமுக. வெளிய வந்து அண்ணா திமுக ஆரம்பிச்சா நானும் அந்தப் பக்கம்.
இப்படித்தான் இளமைக் காலத்து உணா்வுகள் இருந்துச்சு… பெருசா படிக்கலை. எம்.ஜி.ஆர். படங்களும் அரசியலும் பெரிய ஈா்ப்பா இருந்துச்சு…
அப்பவே மன்றம், பாசறை எல்லாம் நடத்தினோம். மனநிலைக்கு தகுந்த மாதிரி கையில முரசொலி, சமநீதி போல பத்திரிகைகள் இருக்கும்.
சமூக சேவையெல்லாம் செய்யற ஆசை இருந்துச்சு. ரிக்சாவெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வாங்கிக் கொடுத்திருக்கோம்.
நிறைய நாள் ஹாஸ்டல்ல இருந்தேன். நிறைய ஏழை மாணவர்கள்… பாக்கவே கஷ்டமா இருக்கும்… அவங்க ஒரு நாள் சாப்பாடே மதியம் உணவுதான். எனக்கு மட்டும் வீட்ல இருந்து டின் டின்னா பிஸ்கட் வரும்… சாப்பிடவே பிடிக்காது…
அடிப்படை விஷயங்கள் எல்லோருக்கும் ஏன் சரியா இல்லங்கற வருத்தம் அப்ப பெருசா இருந்துச்சு… என்னால முடிஞ்சதை அப்பவே செஞ்சிருக்கேன்.
கேள்வி : இவ்வளவு தீவிர அரசியல் உணர்வு இருந்தும் நீண்டகாலம் திரைத் துறையிலேயே இருந்திருக்கீங்களே?
விஜய்காந்த் பதில் : சினிமாமேல அப்ப பெரிய ஆர்வம் இருந்துச்சு… எனக்கும் பெரிய நடிகனா வரணும்னு பெரிய வெறி… எம்.ஜி.ஆர் மாதிரி வரணும்னு எண்ணம்… எப்பவுமே அரசியல் மனசில இருக்கு… முதல்ல சினிமால ஜெயிக்கலாம்னு ஆசை… வந்துட்டேன்…
இதோ ரொம்ப வருஷம் வெற்றிகரமா போயிடுச்சு… அதுக்காக இத்தனை வருஷமும் அரசியல் எண்ணம் இல்லாம இல்லை.
என்னோட அரசியல் உணர்வுகளை பத்திரிகைகள் மூலமாகவும், திரைப்படங்கள் வழியாகவும் பிரதிபலிச்சுக்கிட்டுதான் வந்திருக்கிறேன். இப்ப நேரடியா வந்தாச்சு.
கேள்வி : திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றின மாதிரியே அரசியலிலும் எம்.ஜி.ஆரா?
விஜய்காந்த் பதில் : அப்படி ஒரு பார்முலா எதுவும் இல்லை. உலகம் முழுக்க கதாநாயகன் ஜெயிக்கணும். அதுக்காக கதை நடக்கும். புரூஸ்லீ படங்களைப் பாருங்க. வில்லன் அடிப்பான். உதட்டு ஓரத்துல ரத்தம் வரும். அப்பதான் அவருக்கு கோபம் வந்து திருப்பி அடிப்பாரு.
இது எல்லா இடத்திலேயுமே நடக்கிறதுதான். என் படத்திலேயும் இதுதான் நடந்தது. மற்றபடி அரசியல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பார்முலா. சிலருக்கு கூட்டணி பார்முலா. சிலருக்கு கள்ள ஓட்டு பார்முலா. சிலருக்கு வன்முறை பார்முலா.
எனக்கு இந்த மாதிரி எதுவும் இல்லை. ஜனங்களுக்கு நல்லது செய்யணும். இதுல பார்முலா எதுவும் இல்லை. அவங்களுக்கு நல்லது செஞ்சா அவங்க நமக்கு நல்லது செய்வாங்க. நானும் இதைத்தான் செய்யப்போறேன்.
கேள்வி : உங்களைப்போல சிவாஜி கணேசனுக்கும் பெரிய கூட்டம் கூடினாங்க. தேர்தல்ல ஐம்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதி- திருவையாருல மட்டும்தான் டெபாசிட் வாங்க முடிஞ்சது. இம்மாதிரி நடந்த விஷயங்கள் உங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தலையா?
விஜய்காந்த் பதில் : ஸார்… ஏன் எப்பவும் தோல்வி அடைஞ்ச விஷயங்களையே பாக்கறீங்க? ஜெயிச்சவங்களைப் பாருங்க. செருப்பு தைக்கிற தொழிலாளியோட மகன் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆகலயா?
ஏன் ஒரு தோல்வியைப் பாக்கறீங்க… ஒரு என்.டி.ஆரைப் பாருங்க… ஒரு எம்.ஜி.ஆரைப் பாருங்க… ஒரு ஜெயலலிதாவைப் பாருங்க… இவங்க எல்லாம் ஜெயிக்கலயா?
எல்லாத் துறையில இருந்தும் அரசியலுக்கு பல பேர் வர்றாங்க… அது போல சினிமாவுல இருந்தும் வர்றாங்க. சிலர் ஜெயிக்கிறாங்க.. சிலர் தோற்கிறாங்க… நடிகர்கள் என்பதால அதை மட்டும் நீங்க பெரிசாப் பாக்கறீங்க…?
அப்புறம் ஒவ்வொருத்தரும் அவங்க அளவில் முயற்சி செய்யறாங்க… இதுல விமர்சனம் பண்ண என்ன இருக்கு?
ஒருத்தரோட முயற்சியை எப்படி குறை சொல்ல முடியும்? எல்லா அரசியல்வாதிகளையும் போல நானும் மக்களை நம்புகிறேன்… மக்கள் என்னை நம்பினால் விஜயகாந்த் கட்சி இருக்கும். நம்புவாங்க என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கு.
கேள்வி : இங்க ஒவ்வொரு கட்சிக்கும் சில தலைவர்கள் முன்மாதிரியாக காட்டப்படுவார்கள்… உங்களுக்கு யார்?
விஜய்காந்த் பதில் : காமராஜர், எம்.ஜி.ஆர்.
கேள்வி : என்ன காரணமா உங்க கட்சிக்கு முன்மாதிரியா இவர்களை நிறுத்த ஆசைப்படுகிறீர்கள்?
விஜய்காந்த் பதில் : இவங்க ரெண்டு பேருமே எளிமையானவர்கள். மற்ற தலைவர்கள் ஏழை ஜனங்களை பற்றியும் யோசித்தார்கள். ஆனா இவங்க ரெண்டு பேரும் கைகொடுக்க ஆளில்லாத ஏழை ஜனங்களுக்காகவே வாழ்ந்தாங்க.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனைப் பற்றியே யோசிச்சாங்க. சுயநல அரசியல் செய்யவே இல்லை. இவங்க வாழ்க்கையே ஒரு தீபம் மாதிரி மத்தவங்களுக்கு ஒளி கொடுக்க எரிஞ்சது.
இவங்க ரெண்டு பேரும்தான் என்னோட தலைவர்கள். நான் என்னுடைய கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பின்பற்ற போகிற தலைவர்களா இவர்களைத்தான் முன் நிறுத்தப் போகிறேன்.”
சந்திப்பு: பரசுராம்
‘புதிய பார்வை’ 2005 – ஏப்ரல் இதழில் வெளிவந்த விஜய்காந்த் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.