‘இரு வல்லவர்கள்’: ரீமேக் யுகத்தின் பொற்காலம்!

தமிழ் திரையின் வெற்றித் தடங்கள்

ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் உரிமையைப் பெற்று, இன்னொரு மொழியில் உருவாக்குவதென்பது ஒரு கலை.

’ரீமேக்’ படங்கள் என்பது திரையுலகம் இவற்றுக்கு வழங்கிய பெயர். டப்பிங் படங்களுக்கும் இவற்றுக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு.

வெறுமனே வசனங்களை மொழிபெயர்த்து குரல் பதிவு செய்து இணைக்கும் ‘டப்பிங்’ கலை மூலமாக வெற்றி வசப்படும் என்றாலும், நேரடியாகத் தயாரிக்கும் படங்களுக்கு இணையாக அமையாது.

நடிப்புக் கலைஞர்களின் உதடுகள் ஒரு பக்கமாக அசைய, இன்னொரு திசையில் இருந்து வார்த்தைகள் வெளிப்படுவதைப் பார்க்க நாராசமாக இருக்கும்.

வேறொரு மொழியில் கோலோச்சிய திரைக்கலைஞர்கள் தமிழில் வசனம் பேசுவதைக் காண ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது இன்னொரு காரணம்.

இதனாலேயே, வெற்றி பெற்ற திரைப்படங்களின் உரிமையைச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியரிடம் இருந்து பெற்று அவற்றை மறுஉருவாக்கம் செய்யும் போக்கு இன்றும் உலகம் முழுக்கப் புழக்கத்தில் இருந்து வருகிறது.

தமிழில் ஏவிஎம், வாஹினி, ஜெமினி என்று பல்வேறு நிறுவனங்கள் ’ரீமேக்’ படங்களை அவ்வப்போது தயாரித்தாலும், அந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்திய தயாரிப்பு நிறுவனமாக அக்காலத்தில் திகழ்ந்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.

1965-ல் வெளியான ‘வல்லவனுக்கு வல்லவன்’ மாபெரும் வெற்றியைப் பெற, அதன் தொடர்ச்சியாக அதற்கடுத்த ஆண்டே சுடச்சுட வெளியான திரைப்படம் ‘இரு வல்லவர்கள்’. இந்தியில் வெளியான ‘தோ உஸ்தாத்’ படத்தின் ரீமேக் ஆக இது அமைந்தது.

பிரிந்தவர் கூடினால்..!

’ஒரு ஊர்ல ஒரு குடும்பம் இருந்துச்சு. ஏதோ ஒரு கஷ்டத்தால அந்த குடும்பத்தைச் சேர்ந்தவங்க வேறொரு ஊருக்கு போறாங்க.

அப்பாவோ அல்லது அம்மாவோ அல்லது ரெண்டு பேருமோ இறந்து போனதால, அந்த குழந்தைங்க மட்டும் தனியா வாழுறாங்க. சந்தர்ப்ப சூழ்நிலையால ஒரு குழந்தை தன்னோட சகோதரனையோ அல்லது சகோதரியையோ பிரிஞ்சிருது. ரெண்டு குழந்தைங்களும் வேற வேற சூழல்ல வளர்றாங்க.

பெரியவங்களா ஆன பிறகு ஒருத்தருக்கொருத்தர் எதிரிகளா மாறுறாங்க. அவங்களோட மோதல் வில்லனுக்கு ஆதாயமா இருக்குது.

கடைசியில ரெண்டு பேருமே உண்மைய தெரிஞ்சுகிட்டு சகோதர அல்லது சகோதரி பாசத்தைப் பொழியுறாங்க.

வில்லனைப் பழி வாங்குறாங்க. அப்புறமென்ன சுபம்தான்’ என்று கதை சொல்வது சினிமா பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான தமிழின் முதல் இரட்டை வேடப் படமான ‘உத்தமபுத்திரன்’ இதே ரகத்தில் அமைந்தது நம்மனைவருக்கும் தெரிந்த விஷயம். ‘இரு வல்லவர்கள்’ படத்திலும் கூட இதே கதைதான்.

பெற்றோரை இழந்து நிர்க்கதியான நிலைமைக்கு மோகன், ராஜன் என்ற இரு சகோதரர்களின் பால்யத்தில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

இவர்கள் இருவரும் பிரிவதற்கு சுந்தரமூர்த்தி (எஸ்.ஏ.அசோகன்) என்பவர் காரணமாகிறார். ஆதலால், அவர் மீது மோகன் பெரும்பகை கொள்கிறார்.

பார்வதி (சி.வசந்தா) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவரும் மோகன் (ஆர்.எஸ்.மனோகர்). வெளியுலகில் தன்னை ஒரு வியாபாரியாக காட்டிக் கொள்கிறார். உண்மையில், அவர் ஒரு திருட்டு கும்பலின் தலைவன்.

சுந்தரமூர்த்தியை பழிவாங்கும் எண்ணமே, அவருக்குள் கொள்ளையடிக்கும் வேட்கையை வளர்க்கிறது.

ராணி (விஜயலட்சுமி) என்ற பணக்காரப் பெண்ணின் பாதுகாவலராக இருக்கும் சுந்தரமூர்த்தி, அவருடைய சொத்துக்களை தனதாக்க வேண்டுமென்ற வெறியில் காலம் தள்ளுகிறார்.

சுந்தரமூர்த்தியின் பிடியில் இருந்து தப்ப நினைக்கும் ராணியோ, தனக்கு ஆதரவாக ஒரு துணை கிடைக்காதா என்று ஏங்குகிறார். அந்த நேரம் பார்த்து, சிறையில் இருந்து விடுதலையாகி வரும் ராஜனைச் (ஜெய்சங்கர்) சந்திக்கிறார்.

ராஜன் ஒரு திருடன். அதனை அறியாத ராணி, அவர் மீது காதல்வயப்படுகிறார். அந்த உண்மைக் காதலை அறியாமல், பணத்திற்கு ஆசைப்பட்டு மோகனிடம் ராணியை விட்டுவிடுகிறார் ராஜன்.

மோகனின் கொள்ளைக் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் ராணி, நேராக பார்வதியிடம் தஞ்சம் புகுகிறார். அந்த வீட்டில் மோகனின் புகைப்படம் இருப்பது கண்டு திகைக்கிறார்.

அதன்பிறகு என்னவானது? மோகனின் உண்மை முகத்தை பார்வதி தெரிந்துகொண்டாரா? ராணியின் நேசத்தை ராஜன் புரிந்துகொண்டாரா? சுந்தரமூர்த்தியின் சதிச்செயல் அம்பலமானதா? சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்தார்களா என்பதைச் சொல்கிறது ‘இரு வல்லவர்கள்’.

’பிரிந்தவர் கூடினால் என்னவாகும் தெரியுமா’ என்ற எதிர்பார்ப்பை ஒட்டியே திரைக்கதையை நீட்டியது ரசிகர்களின் மனதைக் கவர்வதாக அமைந்தது. படமும் பெரிய வெற்றியைச் சுவைத்தது.

ஜெய்சங்கர் எனும் நடிகன்!

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி மூவரும் தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே, அவர்களது அடுத்த தலைமுறையாக ரவிச்சந்திரன், சிவகுமார், ஜெய்கணேஷ், விஜயகுமார் போன்றோர் தலையெடுத்தனர். அவர்களில் முதன்மை பெற்றுத் திகழ்ந்தவர் ஜெய்சங்கர்.

இவரது தந்தை சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அந்த காரணத்தால் சட்டக்கல்வி பயிலச் சென்றாலும், சினிமா மீதான ஈர்ப்பு படிப்பின் பக்கமிருந்து திசை திருப்பியது.

சோ ராமசாமியின் சகோதரர் ராஜகோபால் மற்றும் அவரது நண்பர்கள் நடத்தி வந்த விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகங்களில் பங்கேற்ற ஜெய்சங்கர், ஜோசப் தளியத்தின் ‘இரவும் பகலும்’ மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சிவகுமார், விஜயகுமார் போன்றவர்கள் சிவாஜியின் நடிப்பு வலைக்குள் சிக்கிக் கொள்ள,

எம்ஜிஆரின் படங்களுக்கான கமர்ஷியல் பார்முலாவை ரவிச்சந்திரன் போன்றவர்கள் முயற்சிக்க, தனக்கென்று தனித்த ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார் ஜெய்சங்கர்.

அந்த காலகட்டத்தில், திரையுலகில் நிலவிய வழக்கங்களில் இருந்து ஜெய்சங்கரின் நடவடிக்கைகள் பெரிதும் வேறுபட்டிருந்தன.

தினமும் இயக்குனர் முதல் லைட்பாய் வரை அனைவருக்கும் கைகளை ஆட்டி இவர் சொல்லும் ‘ஹாய்’ திரையுலக சீனியர்கள் மத்தியில் ஒரு பேச்சுப்பொருளாகவே மாறியிருக்கிறது.

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று பல வகைப்பட்ட கதைகளில் நடித்தாலும் ஜேம்ஸ்பாண்ட் ரக துப்பறியும் பாத்திரங்களுக்காகவும், கர்ணன் படங்களில் ஏற்ற கௌபாய் பாத்திரங்களுக்காகவும் புகழ் பெற்றார்.

தான் நடித்த காலத்தில் ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என்று கொண்டாடப்பட்டார். தன்னிடம் பணியாற்றியவர்கள் முதல் தெரிந்தவர்கள் வரை, புதிதாகப் படமெடுக்க ஆசைப்பட்ட பலரைத் தயாரிப்பாளர் ஆக்கியுள்ளார்.

அவ்வாறு எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியுற்று தனக்கான சந்தை நலிந்தபோதும், அது குறித்து ஜெய்சங்கர் கவலையுறவில்லை என்று சொல்லப்படுகிறது.

எண்பதுகளில் பட வாய்ப்புகள் அறவே இல்லாமல் போனபோது, ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளை’யில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

அதன்பிறகு ’விதி’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

ஆபாவாணன், அரவிந்தராஜ், மனோஜ் கியான் கூட்டணியில் வெளியான ‘ஊமை விழிகள்’ திரைப்படம், இன்றும் தமிழ் திரையுலகில் ஜெய்சங்கருக்கான இடம் என்னவென்பதைப் பறைசாற்றுகிறது.

வேதாவைத் தெரியாதா!

இந்திப் படங்களில், மேற்கத்தியப் படங்களில் இடம்பெற்ற மெட்டுகளை தமிழுக்கேற்ப லாவகமாக மாற்றிப் பொருத்தமான பாடல் வரிகளுடன் தந்தவர் இசையமைப்பாளர் வேதா. இவரது இயற்பெயர் எஸ்.எஸ்.வேதாசலம்.

1950களில் இசையமைப்பாளர்கள் சிலரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், நடிகர் ஸ்ரீராம் பரிந்துரையின் பெயரில் இயக்குனர் பி.ஏ.டபிள்யூ.ஜெயமன்னே இயக்கிய சிங்களப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

1956இல் முதன்முறையாகத் தமிழில் ‘ஆரவல்லி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். ’அன்பு எங்கே’ படத்தில் இடம்பெற்ற ‘டிங்கிரி டிங்காலே’ பாடல் இவரைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.

வேதா

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான ’கொஞ்சும் குமரி’ தொடங்கி ‘ஜஸ்டிஸ் விஸ்வநாத்’ வரை பதிமூன்று படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஆரம்பகட்டத்தில் தன் சொந்த மெட்டுகளால் வசீகரித்தவர், அறுபதுகளின் பின்பாதியில் வெற்றி பெற்ற இந்திப்படங்களின் மெட்டுகளை கைக்கொள்ளத் தொடங்கினார்.

ஆனாலும், ஒரிஜினலை விட வேதாவின் இசையமைப்பு அருமை என்று வியப்பவர்கள் இன்றும் கூட இருக்கின்றனர்.

என்னதான் ‘காப்பி இசையமைப்பாளர்’ என்ற பெயர் வேதாவோடு ஒட்டிக் கொண்டாலும், அதற்கு அவர் மட்டுமே காரணம் என்பதை ஏற்பதற்கில்லை.

ஏனென்றால், ’இந்த பாடல் போல வேண்டும்’ என்று இசையமைப்பாளரிடம் இயக்குனரும் தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளும் கேட்கும் போக்கு இன்று போல அன்றும் வழக்கத்தில் இருந்ததை மறுக்க முடியாது.

1971ஆம் ஆண்டு திடீரென்று வேதா மரணமடைந்தது நிச்சயம் திரையுலகுக்கு ஒரு பேரிழப்புதான். குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் எழுபதுகளில் தயாரித்த படங்களைப் பார்க்கையில் வேதாவின் இழப்பை நம்மால் உணர முடியும்.

‘இரு வல்லவர்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆசையா கோபமா’, ‘நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்’ பாடல்கள் இன்றும் தேன் போல இனிக்கும். காரணம், அனைத்தையும் எழுதியது கவிஞர் கண்ணதாசன்.

’அங்கே ஏன் இந்த பார்வை’ பாடல் கிளப் டான்ஸ் ரகம்தான் என்றாலும், அதனைப் பாடுவது ஒரு சாதாரண பெண் என்பதை தன் குரலால் உணர்த்தியிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆனால், அந்த கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடனத்தில் சிருங்காரத்தை வாரியிறைத்திருப்பார் விஜயலட்சுமி.

’குவா குவா பாப்பா’ பாடலைக் கேட்கும் எவரும் அது எம்.எஸ்.ராஜேஸ்வரி என்ற பாடகி பாடியதாகவே உணர முடியாது. அந்தளவுக்கு அப்படத்தில் நடித்த பேபி ஷகிலாவின் குரலாகவே அது அமைந்திருக்கும்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் இறுதிக் காட்சியில் ஒலிக்கும் ‘உறவிருந்தால் பிரிவிருக்கும்‘ கேட்டவுடன் நம் கண்களில் நீர் கோர்க்கும். காரணம், அதில் கலந்திருக்கும் சீர்காழி கோவிந்தராஜனின் குரல்.

ஆர்.எஸ்.மனோகர்

கண்ணதாசன், வாலி, ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம் என்று அக்காலகட்டத்தைச் சேர்ந்த அனேக பாடலாசிரியர்கள் உடன் கைகோர்த்து பாடல்கள் தந்திருக்கிறார் வேதா.

டி.எம்.சௌந்தரராஜன், சுசீலா மட்டுமல்லாமல் பல்வேறு பின்னணிப் பாடகர்கள், பாடகிகளைத் தனது படங்களில் பாட வைத்திருக்கிறார். அப்பாடல்களைக் கேட்டால், வேதா மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகள் அவை என்று தெரிய வரும்.

பந்தயக் குதிரைகள்!

தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்த விஜயலட்சுமியைத் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க வைத்த பெருமை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு. நன்றாக நடனமாடவும் நடிக்கவும் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றவர்.

இவரை இன்றைய தலைமுறையினர் கூட ரசிப்பார்கள். இவரது கச்சிதமான உடல்வாகும் அழகும் இதற்கொரு காரணம்.

அழகுப் பதுமையாக அடையாளம் காணப்பட்ட விஜயலட்சுமி 1960இல் வெளியான ‘பாதை தெரியுது பார்’ என்ற கலைப்படத்தின் வாயிலாகத் தமிழில் அறிமுகமானார் என்பதும்,

1969இல் திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே சுரஜித் குமார் எனும் வேளாண் விஞ்ஞானியைத் திருமணம் செய்துகொண்டபின்னர் அடுத்தடுத்து மெட்ரிகுலேஷன், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தார் என்பதும் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள். தற்போது இவர் அமெரிக்காவில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

அந்தந்த காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் தொடங்கி இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை எவரெல்லாம் தங்கள் நிறுவனத்தின் கீழ் பணிவுடன் பணியாற்றத் தயாராக இருந்தார்களோ அவர்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டது மாடர்ன் தியேட்டர்ஸ்.

‘இரு வல்லவர்கள்’ படத்தை இயக்கிய கே.வி.ஸ்ரீநிவாஸ் கூட அந்த வகையில் ஒரு பந்தயக் குதிரைதான். இந்நிறுவனம் தயாரித்த ‘யாருக்கு சொந்தம்’, ‘காதலித்தால் போதுமா’ உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார்.

வேறு தயாரிப்பாளர்களுக்காக இவர் இயக்கிய ‘பாக்ய லட்சுமி’. ’கண் திறந்தது’, ‘செல்வ மகள்’ போன்ற படங்களும் கூட புகழ் பெற்றவைதான்.

கன்னடம், தெலுங்கில் குறிப்பிடத்தக்க அளவில் சில படங்களை இயக்கியிருந்தாலும் இவர் தனித்துவமான அடையாளத்தைப் பெறாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.

திரும்பத் திரும்ப ஒரே கதை!

1959இல் வெளியான ‘தோ உஸ்தாத்’ ஏழு ஆண்டுகளுக்குப் பின் தமிழில் ‘இரு வல்லவர்கள்’ என்ற பெயரில் ரீமேக் ஆக, 1974இல் இதே கதை ‘ஹாத் கி சபாய்’ என்ற பெயரில் மீண்டும் இந்தியிலேயே வெளியானது.

அதை அப்படியே தழுவி 1981இல் ‘சவால்’ தந்தார் தயாரிப்பாளர் பாலாஜி.

இதே கதை அதிகாரப்பூர்வமற்றும் இன்னும் எத்தனை முறை தமிழில் எடுக்கப்பட்டதென்று தெரியவில்லை.

ஓம் டோக்ரா, ஈத்ராம் ஹுசைன் எழுதிய ‘தோ உஸ்தாத்’ கூட, அதற்கு முன் வெளியான சில இந்திப் படங்களின் தாக்கத்திலேயே உருவானதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சவாலில் அண்ணனாக ஜெய்சங்கரும் தம்பியாக கமல்ஹாசனும் நடித்தனர். இப்போதும் ‘இரு வல்லவர்கள்’, ‘சவால்’ படங்களை அடுத்தடுத்து பார்த்தால் இரு கதைகளுக்கும் இடையிலான பல ஒற்றுமைகளைக் காணலாம்.

விஜயலட்சுமி

அன்று முதல் இன்றுவரை மிகச்சில நடிகர் நடிகைகள் மட்டுமே ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

என்றபோதும், அப்படங்களில் வெற்றிக்கான உத்தரவாதமும் ஒரிஜினலை பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயமும் சம அளவில் நிரம்பியிருப்பதை மறுக்க முடியாது.

அந்த காரணத்தினால், ‘இரு வல்லவர்கள்’ போன்ற திரைப்படங்களுக்கும் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு இடமுண்டு!

படத்தின் பெயர்: இரு வல்லவர்கள்,
திரைக்கதை வசனம்: க.தேவராசன்,
இசை: வேதா, பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்,
எடிட்டிங்: எல்.பாலு,
லேபரட்டரி: டி.பி.கிருஷ்ணமூர்த்தி,
ஆர்ட் அண்ட் செட்டிங்ஸ்: கே.வேலு,
உடை: எம்.அர்த்தநாரி,
ஒப்பனை: ஒய்.வி.பலராம் நாயுடு,
ஒளிப்பதிவு: எஸ்.எஸ்.லால்,
ஒலிப்பதிவு: பி.எஸ்.நரசிம்மன்,
ஸ்டூடியோ: மாடர்ன் தியேட்டர்ஸ்,
தயாரிப்பு: ஆர்.சுந்தரம்,
இயக்கம்: கே.வி.ஸ்ரீநிவாஸ்
நடிப்பு: ஜெய்சங்கர், மனோகர், கே.ஏ.தங்கவேலு, எஸ்.ஏ.அசோகன், ஏ.கருணாநிதி, எல்.விஜயலட்சுமி, வசந்தா, மனோரமா, பேபி ஷகீலா மற்றும் பலர்.

-உதய் பாடகலிங்கம்

You might also like