இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது?

– மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுகோள்

இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள், அந்த இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என ரிசா்வ் வங்கி நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அசீமா கோயல், இலவசங்கள் உண்மையில் மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை என்றும், அரசாங்கங்கள் இலவசங்களை வழங்கும்போது அங்கு மக்களுக்கு எதாவது ஒரு செலவு விதிக்கிறது எனக் கூறினார்.

பஞ்சாப்பில் இலவச மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம் என்றும், இதுபோன்ற இலவசங்கள் கண்ணுக்குத் தெரியாத பெரிய பாதிப்புகளை நாம் சுமக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட கோயல்,

அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கும் ஒரு விலை உள்ளது என்றும், பெரும்பாலான நிதிகள் இலவசங்களுக்கு செலவிடப்படுவதால் மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சுகாதாரம், கல்வி, காற்று மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடுதாகவும், இதனால் ஏழைகளே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதாகவும்  கூறினார்.

சமீப காலங்களாக தேர்தலில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் விவாதங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், இலவசங்களால் மறைமுக செலவுகளும், ஆபத்துகளுமே அதிகம் என ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு உறுப்பினர் கோயல் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like