துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, புயல் காற்று காரணமாக, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like