இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் நடந்த சிறப்பு விழாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
விருதை ஒட்டி ஒரு பட்டயமும், பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையுடன் தன் சார்பில் ஐயாயிரம் ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடையாக மேடையிலேயே அவர் அளித்து விட்டார்,.
காட்சி ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வியப்புடன் வெளியிடப்பட்டன.
ஆனால் தோழர் நல்லகண்ணுவின் இயல்பை அறிந்தவர்களுக்கு இந்தச் செய்கை வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏற்கனவே கட்சி சார்பில் முன்பு வழங்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான நிதியை இந்தியக் கம்யூனிஸட் கட்சிக்கே அளித்துவிட்டார்.
அரசுக்குச் சொந்தமான வாடகை வீட்டில் குடியிருக்கும் அவர் தான் கலந்து கொண்டு பேசும் விழாக்களுக்கு என்று தனியாக எந்தப் பணத்தையும் பெற்றுக் கொள்வதில்லை.
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆர். நல்லகண்ணு தகை சால் தமிழர் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் தன்னுடைய அரிய பண்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பணமே வாழ்க்கை, இலக்கு என்று ஓடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அபூர்வமாக இப்படிப் பட்ட பண்புள்ள தலைவர்களும் நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.
தகைசால் விருது பெருமை அடைந்திருக்கிறது.