ராகுல் பாத யாத்திரை: காங்கிரசை கரை சேர்க்குமா?

கடந்த மக்களவைத் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் முறையாக வீழ்ந்ததும் ராகுல்காந்தி துவண்டு போனார். அமேதியில் அவரே வீழ்த்தப்பட்டார்.

தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ராகுல், கட்சி நிகழ்வுகளில் எப்போதாவது பங்கேற்பார். பின்னர் மறைந்து போவார்.

60 ஆண்டுகளாக நாடாண்ட கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்டமுடியவில்லை.
இதனால், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட நாடு தழுவிய பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளார், ராகுல்.

நகரங்கள், கிராமங்கள் என 5 மாதங்கள் சுற்றி வந்து மக்களை நேரடியாக சந்திக்கப்போகிறார்.

நடைப் பயணம், ராகுலுக்கு புதுசு. ஆனால் பாரததேசத்துக்கு புது விஷயமல்ல.
சந்திரசேகர்

சுதந்திர போராட்டங்களின் போது, மகாத்மா உள்ளிட்ட தலைவர்கள் எண்ணற்ற பாத யாத்திரைகளை மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைக்குப் பிறகான பாதயாத்திரைகளில் மக்கள் கவனம் ஈர்த்த மெகா யாத்திரை சந்திரசேகர் மேற்கொண்ட நாடு தழுவிய யாத்திரை தான்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த கால கட்டத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடைப்பயணம் செய்தார் சந்திரகேகர்.

கன்னியாகுமரியிலிருந்து 1983-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி யாத்திரையை ஆரம்பித்தார்.

6 மாதங்களில் 4,260 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அதே ஆண்டு ஜுன் மாதம் 25-ம் தேதி டெல்லியில் நிறைவு செய்தார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் அனைத்து வட மாநிலங்களையும் தொட்டுச் சென்ற இந்த பயணம், அந்தக் கால கட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

அப்போது அவர் ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தார்.
ஆனால் அந்த யாத்திரையால் ஜனதா கட்சிக்கு எந்த லாபமும் கிட்டவில்லை.

அடுத்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் (இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு) காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது.

(எந்த காங்கிரஸை எதிர்த்து சந்திரசேகர், நடைப்பயணம் செய்தாரோ, அதே காங்கிரஸ் ஆதரவுடன், அவர் 1990-ம் ஆண்டு நவம்பர் முதல் 91-ம் ஆண்டு ஜூலை வரை பிரதமராக இருந்தார் என்பது வேறு கதை)
ராகுல் காந்தி

காங்கிரஸ் அரசுக்கு எதிராக சந்திரசேகர் யாத்திரை மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே பாணியிலான நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ளார்.

அடுத்த மாதம் (செப்டம்பர் ) 7-ம் தேதி கன்னியாகுமரி அருகேயுள்ள சுசீந்திரத்தில் யாத்திரை தொடங்குகிறார்.

ஜனவரியில் காஷ்மீரில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.

14 மாநிலங்கள்.. 150 நாட்கள்.. 3500 கிலோ மீட்டர் தூரம் என பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கடைசி அஸ்திரம்

2 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக மரணதோல்வியை சந்தித்துள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆண்ட கட்சி சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரசை உயிர்ப்பிக்க செய்வதற்கான கடைசி அஸ்திரமாக இந்த யாத்திரை இருக்கும் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.
மோடிக்கு சவால்

யாத்திரையை காங்கிரஸ் அறிவித்த நேரம்-
பிரதமர் மோடிக்கு பொல்லாத நேரமாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

சிவசேனாவை இழந்த பாஜக, இந்தி பாக்கெட்டில் கடைசியாக எஞ்சி இருந்த ஐக்கிய ஜனதா தளத்தையும் அண்மையில் இழந்திருப்பது, அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளும் சூழல் உருவாகி உள்ள நிலையில், ராகுல் பயணம் ஓரளவு வெற்றி அடைந்தால் கூட அது, மோடிக்கு சவாலாகவே இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.

– பிஎம்எம்.

You might also like