பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அதன்பின்னர் பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்தன.
இதனால் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானார். முன்னதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை.
இதனால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். இதையொட்டி, நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 24-ம் தேதி சட்டசபை கூடுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் எனத் தெரிகிறது. ஆளும் கூட்டணிக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.