போதைப் பொருட்களைத் தடுப்பதில் சர்வாதிகாரம் தேவை!

மக்கள் மனதின் குரல்:

தமிழ்நாடு காவல்துறையைப் பற்றிப் பெருமிதமான பக்கங்களும் இருக்கின்றன. வருத்தம் தரத்தக்க பக்கங்களும் இருக்கின்றன.

சமீபத்தில் தமிழகக் காவல்துறை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக சென்னையில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு முன்னால் நடந்த வன்முறையும், கள்ளக்குறிச்சிக்கு அருகில் மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறையும் காவல்துறையின் செயல்பாட்டில் கரும்புள்ளிகளைப் போல மாறி விட்டன.

துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கிறார்கள் என்பதைத் தவிர, காவல்துறை இந்தச் சம்பவங்களில் நடந்துகொண்ட விதம் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.

சென்ற ஆட்சியில் நடந்த குட்கா ஊழல் அந்த ஆட்சியின் மீது படிந்த கறைகளில் ஒன்று. அது தொடர்பான நடவடிக்கை இன்னும் முறையானபடி நடக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் போதைப் பொருட்கள் அங்கங்கே பிடிபடுகின்றன. கஞ்சாவும், குட்கா பொருட்களும் கொத்தாகக் கைப்பற்றப்படுகின்றன.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே தான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கிற அளவுக்கு இருக்கிறது போதைப் பொருட்களின் நடமாட்டம்.

இதற்கு முந்தையை ஆட்சிக்குக் கறை படியக் காரணமான பல குற்ற நிகழ்வுகள் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்வது தற்போதைய ஆட்சிக்குப் பெருமை சேர்க்காது.

ஏற்கனவே நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களில் போதையில் வீழ்ந்ததைப் போலிருக்கும் தற்போதைய இளைஞர்களிடம் போதைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க வாய்ப்பு நீடித்துக் கொண்டிருப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?

முதல்வர் சொன்னதை நிறைவேற்றுகிற விதத்தில் இத்தகைய போதை விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு முற்றியிருக்கிறது நிலைமை.

சென்ற ஆட்சியிலும் தமிழகக் காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மீதே குற்றச்சாட்டு கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த அளவுக்கு ஆட்சி மாறினாலும் போதைப் பொருட்கள் விநியோக வலைப் பின்னல் வலுவாக இருப்பதைத் தடுத்தாக வேண்டும்.

ஒருபுறம் டாஸ்மாக் மற்றும் வெளிநாட்டு மதுவகைகளின் விநியோகம் இளைஞர்களில் கணிசமானவர்களை வலையில் வீழ்த்தியிருக்கிறது. இன்னொரு புறம் சட்டத்திற்குப் புறம்பான போதைப் பொருட்களின் விநியோகம்.

விழிப்பு நிலைக்கு எதிராக இளைஞர்களை மயக்கத்தில் ஆழ்த்த அவர்களுக்கு மிக அருகில் எத்தனை வாசல்கள்?

-யூகி

You might also like