எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளது?

– தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுபாஷ் சந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், “பள்ளி பருவத்தில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தவும், உடல்திறனை மேம்படுத்தி கொள்ளவும் மிகவும் முக்கியமானது ஆகும்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்விக்கு போதுமான முக்கியத்துவம் அளிப்பதில்லை.

குறிப்பாக குறுகலான மற்றும் நெரிசலான இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. உடற்கல்வி ஆசிரியர்களும் போதிய அளவில் நியமிக்கப்படுவதில்லை.

சுத்தமான, சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் கேள்விக்குறியாக உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை, விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர், போதிய வகுப்பறைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்பது குறித்தும்,

எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர் என்பது குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தும், இந்த தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.

எனவே தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர், “தமிழ்நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் உள்ளன? என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

You might also like