தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி புதிய குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும், எதிர்க் கட்சிகளின் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மார்கரெட் ஆல்வாவும் களத்தில் உள்ளனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா்.
எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். எனவே இன்று மாலையே இதன் முடிவுகள் தெரிந்துவிடும்.
குடியரசு துணைத் தலைவா்தான், மாநிலங்களவை தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.