இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது.

துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றும் போதும் இருவரும் இன்னும் நெருக்கமாகி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரும், திருமதி. ஜானகியும் இணைந்து நடித்த ‘மருத நாட்டு இளவரசி’ படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர்.

தி.மு.க.வின் முக்கியப் பொறுப்புக்கும், அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞரை முன்னிறுத்தியதிலும் எம்.ஜி.ஆரின் பங்கு அதிகம்.

அ.தி.மு.க உருவாகி ஆட்சியைப் பிடித்த பிறகும் என்ன தான் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், பரஸ்பரம் இருவருமே நட்பு மாறாமல் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் மறைந்த அன்று தகவல் கிடைத்ததுமே ராமாவரம் தோட்டத்திற்கு சென்ற கலைஞர் தனது நீண்டகால நண்பரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறியதை இருவருடன் நெருங்கிப் பழகியவர்கள் உணர்வார்கள்.

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சாப்பிடாமல் இருந்ததை கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

முரசொலி மாறன் தயாரித்து எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கள் தங்கம்’ படத்திற்காக கவிஞர் வாலி “நான் அளவோடு ரசிப்பவன்” என்று பாடலின் முதல் வரியை எழுதியபோது, அந்தப்பக்கம் வந்த கலைஞர் அதே பாடலின் அடுத்த வரியை இப்படிச் சொன்னாராம்,
“எதையும் அளவின்றிக் கொடுப்பவன்…!”
****
-லியோ

You might also like