குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பவனியாவிற்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (5.8.2022) காலை ஒரு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துப் பரவசம் அடைந்தோம்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-1 தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமமான கிழக்கு செட்டியாப் பட்டியில்,
எளிய குடும்பத்தைச் சார்ந்த பவனியா என்ற பெண், தமிழில் படித்து எந்தவித சிறப்பு வகுப்புக ளுக்கும் செல்லா மல், தானே வகுப்பறையில் படித்து முன்னேறி,
முதல் முயற்சியிலேயே நேரடியாக டி.எஸ்.பி. ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தான் அச்செய்தி!
தகுதி, திறமை உயர்ஜாதிக்கே உண்டு என்றெல்லாம் ஏகபோக உரிமை கொண்டாடிய ஒரு சமூகத்தில், பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது, அதுதான் சனாதன தர்மம் என்று கல்விக்குத் தடை போட்ட ஒரு சமூகத்தில்,
இப்படி ஒரு அரிய சாதனை செய்து, அறிவுக் கூர்மையும், அதனைமூல தனமாக்கிய உத்தியோகமும் அடைய எம்மால் முடியும் என்று காட்டிய செல்வி பவனியாவிற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!” என்று காட்டிய பவனியாக்களைப் போல, பலரும் ‘‘கிராமம்”, ‘‘தமிழ்வழி படிப்பு” எதுவும் உயருவதற்கு எங்களுக்குத் தடை யில்லை என்று காட்டியவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம்” என்று பாராட்டி எழுதியுள்ளார்.