ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம்
திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர், கவனக்குறைவாக கத்தரிக்கோலை வயிற்றில் உள்ளே வைத்து தைத்துள்ளார்.
இது நடந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு, குபேந்திரிக்கு தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
அப்போது அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாயிலாக குபேந்திரியின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் குபேந்திரியின் கணவர் பாலாஜி புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம் குபேந்திரிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.