எனக்காக காது தோட்டை அடமானம் வைத்த அக்கா!

– தொல்.திருமாவளவன் உருக்கம்
*
அரியலூர் மாவட்டத்திலிருக்கிற சின்ன கிராமம் அங்கனூர். மழை பெய்தால் தனித்தீவாகிவிடும் அந்தக் கிராமம்.

கரும்புச் சருகுக் கூரை போட்ட சிறு குடிசை வீடு. எட்டாவது வரை படித்த ராமசாமிக்கு விவசாயக் கூலிவேலை. இரண்டு மனைவிகள். மூத்த தாரத்துப் பையன் திருமாவளவன். கூடவே ஒரு அக்கா.

அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போவார்கள். மாடு மேய்ப்பார்கள். அதோடு தட்டுத்தடுமாறி பிள்ளையைப் படிக்க வைத்தார்கள். எட்டாம் வகுப்புவரை வீட்டில் காலையில் நீராகாரம். பிறகு இரவுதான் சோறு.

பாடப்புத்தகம் வாங்கக் கூடக் காசு இருக்காது. வேப்ப மரங்களுக்குக் கீழ் சிதறிக் கிடக்கும், வேப்பங் கொட்டைகளை சேகரித்து எடுத்து விற்று அதில்தான் புத்தகம் வாங்க முடிந்தது திருமாவளவனால்.

ஊருக்கு வெளியே முளைத்திருக்கிற கருவேல மரங்களை வெட்டி விறகைத் தலைச்சுமையாய்ப் பக்கத்துக் கிராமங்களுக்குப் போய் அதை விற்ற பிறகே பள்ளிக்குப் போக முடியும்.

ஊரில் வசதியானவர்களின் வீட்டுப் பிள்ளைகள் போட்டு உபயோகித்த பழைய சட்டை ட்ரௌவுசர்களை வாங்கி வந்து கொடுப்பார் அப்பா.

“வறுமையை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்தபோதும் அது ஏதோ ஒரு விதத்தில் எனக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தது நிஜம்” கரகரத்தக் குரலில் நினைவுகள் கசியச் சொல்கிறார் திருமாவளவன்.

“சிறு வயதில் எந்த விதமான பொழுது போக்குகளிலும் ஈடுபட என்னை அப்பா அனுமதிக்கவில்லை. மீன்பிடிக்க மற்ற சிறுவர்கள் போகும்போது என்னை விடமாட்டார்.

பக்கத்துக் கிராமங்களில் நாடகங்களைப் பார்க்க மற்றவர்கள் கோணிப்பையை எடுத்துக் கொண்டு போகும்போது எனக்கு மட்டும் அனுமதி கிடைக்காது. உறுமி மேளத்தை வேடிக்கை பார்க்கக் கூட முடியாது.

அப்பாவுக்குக் கடவுள் பக்தி உண்டு. தினந்தோறும் வீட்டில் இருக்கும் சாமி படங்களுக்குக் கற்பூரம் ஏற்றச் சொல்வார். என்னைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவார். ஆறாவது வகுப்புக்குப் பிறகு அதையெல்லாம் நிறுத்திவிட்டேன்.

அந்த வயதில் அதிகம் பேசமாட்டேன். விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு எனக்கு ‘முதல் மொட்டை’ போடுவதாக நேர்ந்து இருந்தார்கள்.
ஆனால் அங்கு போய் வர ஆகும் செலவைக்கூடச் சமாளிக்க முடியாததால், ‘மொட்டை’ அடிக்கப் படவேயில்லை. எனக்கு பெரிதாகச் சடை வளர்ந்துவிட்டது. அதற்குப் பிறகு நான் அடம்பிடித்ததும் எனக்கு ‘கிராப்’ வெட்டி விட்டார்கள். சமயங்களில் அப்பாவே எனக்கு முடி வெட்டி விடுவார்.

கொடுமையான பஞ்ச காலத்தில் சைக்கிள் டயரைக் கொளுத்தி வீட்டில் வெளிச்சத்திற்கு வைத்திருப்பார்கள். இருந்தும் அப்பா எப்படியாவது கடன் வாங்கியாவது, மண்ணெண்ணை விளக்கேற்றுவார். அரிசிச் சோறு வீட்டிலிருக்கும்.

எவ்வளவோ கதைகளை விறகு வெட்டப் போகும்போது சொல்லிக் கொண்டே வருவார். ஒருவித தன்னம்பிக்கையை ஊட்டுவார். அவர்பட்ட கஷ்டத்தை நான் படக்கூடாது என்பதில், கவனமாக இருப்பார்.

சேரியை விட்டுத் தூரத்தில் கோவில் இருக்கும். அய்யனார் சிலை கம்பீரத்துடன் இருக்கும். இருந்தாலும் அந்தப் பகுதிக்குள் நாங்கள் போக முடியாது. பள்ளிக்குப் போகும்போது வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் நான் ஒரு சமயம், அந்தப் பகுதிக்கு போனதும் என்னுடைய அப்பாவைக் கூப்பிட்டு எச்சரித்திருக்கிறார்கள்.

ஒன்பதாவது வகுப்பிற்குப் பிறகு ஹாஸ்டலுக்கு வந்துவிட்டேன். திட்டக்குடியில் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி ‘டிரஸ்’ கொடுப்பார்கள். காக்கி ட்ரௌசர் வெள்ளைச் சட்டை. அதைக் போட்டுக் கொண்டு போகிறபோது “செடி வர்றாண்டா…” என்று கேலி பண்ணுவார்கள். ‘ஷெட்யூல்டு காஸ்ட்’ என்பதைத்தான் அப்படிச் சொல்வார்கள். ரொம்ப நாட்கள் கழித்துதான் அதற்கு அர்த்தம் தெரியும்.

மூன்று வேளை சாப்பிடுகிற முறையே அப்போதுதான் அறிமுகமானது. விருத்தாச்சலத்தில் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ். எங்க அப்பா வேலை செய்த ஆண்டை வீட்டில்போய்ச் சொல்லி கல்லூரியில் படிக்க வைக்கக் கடன் கேட்டிருக்கிறார்.

“படிச்சு என்ன பண்ணப் போறான்? பேசாம பண்ணை வேலைக்கு வரச் சொல்லு” என்று சொல்லியிருக்கிறார். 100 ரூபாய் அப்பா கடன் கேட்டதற்கு இந்தப் பேச்சு.
எங்க அப்பா அதைச் சவாலாக எடுத்துக் கொண்டார்.

என்னுடைய அக்கா காது தோட்டை அடமானம் வைத்து அந்தப் பணத்தில் விருத்தாச்சலம் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்தேன்.

அதுவரை ட்ரௌவுசர் போட்டிருந்தேன். பிறகு வேட்டிக்கு மாறினான். கைச்செலவுக்கு பணம் இருக்காது. கெஞ்சி கூத்தாடி சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரியில் சேர்ந்தேன். அழுக்குப் படிந்த வேஷ்டி சட்டையுடன் இருப்பேன். மாணவர்கள் பஸ் பாஸுக்காக அப்போது அரசிடம் இருந்து கிடைக்கும் 15 ரூபாய்க்காகக் காத்துக் கிடப்பேன்.

சென்னைக்கு வந்ததும் திராவிடர் கழகக் கூட்டங்கள், தி.மு.க. கூட்டங்களுக்குப் போவேன். சினிமா கச்சேரிகளுக்குப் போக மாட்டேன்.

பல எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கல்லூரியிலேயே கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளரானேன்.

சென்னைக்கு வந்து சேர்ந்து சேர்ந்தபோது எனக்குத் தெரிந்த உறவினர் கொத்தவால் சாவடியில், மூட்டை தூக்குபவராக இருந்தார். அவருடன் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தேன். சனி, ஞாயிறுகளில் அவருடன் சேர்ந்து மூட்டை தூக்கப் போவேன்.

தக்காளிக் கூடை, மக்காச் சோள மூட்டை தூக்கினால் ஐந்து, பத்து ரூபாய் கிடைக்கும். இத்தனைக்கும் இடையில், பி.எஸ்.சி. முதல் வகுப்பில் பாஸ் பண்ணினேன். கல்லூரி முடித்து வேலை தேடினேன். மாலை நேரம் எம்.ஏ. கிரிமினாலஜி படித்துவிட்டு பகல் நேரத்தில் கொத்தவால் சாவடியில் ஒரு கடையில், கணக்கு எழுதப் போவேன். 250 ரூபாய் சம்பளம்.

அந்த நேரத்தில் இலங்கையில் இனப்பிரச்சினை சூடு பிடித்திருந்தது. ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு நடத்தினேன். அம்பேத்கர், மார்க்சின் புத்தகங்களைப் படித்தேன். ஈழப்பிரச்சினை மீது எனக்கிருந்த ஆர்வத்தில் ‘விடுதலைப் புலி’ என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினேன்.

பி.எல். படித்துக் கொண்டிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது அவருடைய வொயர்லெஸ் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதை எதிர்த்து அவர் உண்ணாவிரதம் இருந்தார். மாணவர்களுடன் போய் அவரைப் பார்த்தேன்.

அந்தச் சந்திப்பு பெரிய அளவில் எழுச்சியை எனக்குள் ஏற்படுத்தியது. பேசாமல் ஈழத்துக்குப் போய் விடலாமா என்று கூடத் தோன்றியது.

‘இளைஞர் நல இயக்கம்’ என்று மீனவர்கள் மத்தியில் இயக்கத்தைத் துவக்கி நடத்தினோம். நொச்சிக்குப்பம், கணேசபுரம் என்று பல பகுதிகளில் பாடம் நடத்தினோம். வைகோ அறிமுகமானார். அதன் மூலம் கலைஞருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருந்தும் கல்லூரியில் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டபோது என்னுடைய சாதிப் பின்னணி பலருக்கு உறுத்தலாக இருந்தது. சாதிய வேற்றுமையை, சாதிய அரசியலை நெருக்கமாக உணர முடிந்தது.

தடய அறிவியல் துறையில் வேலை கிடைத்தது. கோயம்புத்தூரில் வேலை. முதல் மாதச் சம்பளத்தில்தான் வாட்ச் வாங்கினேன். பிறகு மதுரைக்கு மாற்றினார்கள். என்னுடைய அரசியல் தொடர்பு வீட்டுக்குத் தெரியாது.

அப்போது பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தை நடத்தி வந்த நண்பர் மலைச்சாமி இறந்து விட்டார். அவருக்காக இரங்கல் கூட்டத்தை நடத்தினேன். அப்போது அந்த இயக்கத்தின் தலைவராக என்னைப் பொறுப்பேற்கச் சொல்லி விட்டார்கள். நான் பொறுப்பேற்றதும் எனக்குள் ஈழப்பாதிப்பு இருந்ததால், பெயரை அதே பாணியில் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று மாற்றினேன்.

அதனால் கடுமையான சிரமங்களை அனுபவித்தேன். அதனால் தொடர்ந்து பிரச்சனைகளும், உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலையும் தொடரலாம் என்பதால், திருமணம் செய்து கொள்ளவில்லை.

அந்த அளவுக்கு என்னை யோசிக்க வைத்தன சாதீய வன்கொடுமைகள். சிறுசிறு பிரச்சனைகளுக்கும் கூட குரூரமான வன்முறைகள். அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோம், போராடினோம்.

அதற்குள் அலுவலகத்தில் என்னை ஒரு பிரச்சினையாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். கோவைக்கு மாற்றினார்கள். பல சாதியக் கொலைகள் நடந்தன. எதிர்த்துப் பேரணிகள், வீரவணக்க அணிவகுப்புகள் நடத்தினோம்.

அந்தச் சமயத்தில் என்னை கைது பண்ணியதும் ஒரு பேருந்து கொளுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு காரைக்குடி போலீஸே என்னைக் கடத்திக் கொண்டுபோனது. அதற்குப் பிறகே நான் வெளியுலகிற்குப் பரவலாகத் தெரிய ஆரம்பித்தேன்”.

‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன நிலையில் தனக்கு உத்வேகத்தைக் கொடுத்த சக்தியாகச் சமூக அமைப்பைச் சொல்கிறார்.

“தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களில் பலருக்கு இருக்கிற தாழ்வு மனப்பான்மை எனக்கும் இருந்தது. அது சமூக கூட்டமைப்பின் விளைவு. பொதுமக்களுடன் எனக்கிருந்த ஈடுபாட்டால்தான் அந்த மனப்பான்மையை ஒழித்தேன்.

எந்தப் பிரச்சினை வந்தாலும் ஒதுங்குவது விவேகமல்ல. அதை ஜனங்களுடன் சேர்ந்து சந்திக்க வேண்டும். இந்தச் சமூக அமைப்பை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘அடங்கமறு, அத்துமீறு’ என்கிற முழக்கத்தை இதனால்தான் சொல்கிறோம். இந்த முழக்கம்தான் என்னையும் சேர்த்து பலரை தட்டி உசுப்பி இருக்கிறது. என்னைப் போன்ற மற்றவர்களையும் தட்டி உசுப்பும்.” அனலின் வெப்பம் தகித்தது திருமாவளவனின் பேச்சில்.

– ‘மணா’-வின் ‘கனவின் பாதை’ நூலிலிருந்து…

You might also like