மரங்கள் நடப்பதில்லை. ஆனால் காலற்ற அவை நகரவும் கூடும். மரங்கள் விதைகள் விழுந்த இடத்தில் முளைத்து நிற்பவை. ஆனால் அவை வளர்ந்து, பூத்து, காயாகி, விதையாகி உதிரும்போது புதிய இடம் தேடி நாற்புறமும் பயணிக்கின்றன.
சிலவகை விதைகள் இறகைக் கட்டி வேகமாகப் பறக்கின்றன. சிறகுகளும், முடிபோன்ற மெல்லிய முளைப்புகளும் அவை காற்றில் பறக்க உதவுகின்றன. பல மைல் தூரம்கூட அவை பறந்து செல்வதுண்டு.
பறக்கும் விதைகள் வறட்சியிலும் பசியிலும் வாடி விழுவதும் உண்டு. பிர்ச், மேபிள், ஹார்ன்பீம், ஆஷ் போன்ற கூம்பு மரங்கள் சிறப்பான சிறகுகளைக் கொண்டவை. புயற்காற்று அவற்றைப் பல காதம் கொண்டு செல்லும்.
கனமான பழங்கள் கொண்ட ஓக், செஸ்நட், பீச் போன்றவை நீண்ட தூரம் பணிக்க முடியாது. பறக்க முடியாத அவை பறவைகள், விலங்குகள் துணையுடன் பயணிக்கின்றன.
அணில், கீரி போன்றவை மாவுச் சத்தும் எண்ணெய்ச் சத்தும் மிக்க விதைகளை மிகவும் விரும்புபவை.
அவை அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் மண்ணுக்குள் புதைத்து, உணவு கிடைக்காத பனிக்காலத்தில் பயன்படுத்திக்கொள்கின்றன.
சில சமயம், எலிகளும் ஆந்தைகளும் அவற்றை களவாடித் தின்று விடுவதுண்டு. எலிகள் தமது பனிக்கால உணவை பீச் மரத்தினடியிலேயே சேமிக்கின்றன.
வேர்கள் இடையே வறண்ட குழிகள் பல உண்டு, அவற்றில் சிறு உயிரினங்கள் வாழும்.
எலி வாழும் வலையின் முன் அவை கொறித்த பீச் கொட்டையின் ஓடுகள் கிடப்பதைக் காணலாம்.
அவற்றில் சில சற்றுத் தொலைவில் மண்ணடியில் கிடக்கும். எலிகள் செத்துவிட்டால் புதைக்கப்பட்ட விதைகள் முளைத்துப் புதிய காடு உருவாக வழிவகுக்கும்.
ஜாய் (Jay) பறவைகள் கனமான விதைகளைத் தொலைவில் எடுத்துச்சென்று பாதுகாக்கும். அக்கேரன், பீச் விதைகளை நீண்ட தூரம்கூட எடுத்துச்செல்லும். அணில்கள் சில அடி தூரமே எடுத்துச்செல்லும்.
எலிகள், அணில்கள், ஜாய்கள் ஆகியவை கொட்டைகளை 30 அடி தொலைவுக்கு மட்டுமே எடுத்துச்செல்லும்.
கனத்த கொட்டைகளை நீண்ட தூரம் எடுத்துச் செல்ல முடியாது. கொட்டைகள் முளைக்கும்போது ஓராண்டுக் காலம்கூட வாழ முடியும்.
மென்மையான விதைகளான பாபுலர், வில்லோ ஆகியவை புதிய வாழ்விடத்தை எளிதாக எட்ட முடியும். இந்த மரங்கள் நீண்ட காலம் வாழ முடியாததால், சூரிய ஒளி விரைவில் மண்ணில் விழக் கூடும்.
பின் மரக் கன்றுகள் அதன் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். காடுகள் அதே இடத்தில் நிற்க முடியுமா? இடம் வசதியானதாக இருக்குமா?
வாழ்வதற்கான புதிய இடம் அவசியம். ஏனெனில் பருவநிலை அடிக்கடி மாறுகிறது. பருவநிலை மெல்லப் பல ஆண்டுகளில் மாறும். மரம் எவ்வளவு சகிப்புத் தன்மை கொண்டதாக இருந்தபோதும், அதிகக் குளிரும் வெப்பமும் ஈரமும் அவற்றிற்கு ஏற்புடையதாகாது.
மரங்கள் இதைத் தாங்க முடியாமல் வேறு இடம் தேட நேரிடும். அத்தகைய மரங்களின் புலம்பெயர்வு மத்திய ஐரோப்பியக் காடுகளில் நிகழ்கிறது.
ஏற்கெனவே 1-4 பாரன்ஹீட் அதிகரித்துள்ளது மட்டும் காரணமல்ல. கடந்த பனியுகத்திலிருந்து வெப்பயுக மாற்றம் நிகழ்கிறது.
பனியுகம் மிகவும் குளிராகக் குளிராக மரங்கள் தெற்கு நோக்கி நகர வேண்டியதாகிறது.
மத்திய ஐரோப்பாவில் இந்த இடப்பெயர்வு மெதுவாகப் பல தலைமுறைகள் நடக்கிறது.
மிக மெதுவாக மத்தியதரைக் கடல் பகுதிக்கு வெற்றிகரமாக இடம் மாறுகிறது. பனி வேகமாக முன்னேறினால், பனி இடம்பெயரத் தடுமாறும் காட்டை விழுங்கிவிடுகிறது.
மத்திய ஐரோப்பாவில் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிக்கான பீச் மரங்கள் மட்டுமின்றி, பெரும் இலை பீச் மரங்களும் வாழ்ந்தன.
பீச் எப்படியோ தெற்கு ஐரோப்பாவிற்கு எளிதாகத் தாவிச்சென்று தப்பியது. ஆனால் வேகமாக நகர முடியாத பெரு இலை பீச் பனியில் புதைந்து அழிந்தது.
உயர்ந்த ஆல்ப்ஸ் மலை பெரும் தடையாக நின்றதே இம்மரங்கள் கடக்க முடியாமல் அழியக் காரணம். முதலில் மலை உச்சியை அடைய வேண்டும்; பின்தான், மலையின் மறுபகுதியில் இறங்க முடியும்.
ஆனால் மலையுச்சியின் குளிர் பல மரங்களுக்குத் தாங்க முடியாததாவே இருக்கும். எனவே மலை உச்சியைச் சிரமப்பட்டு எட்டும் மரங்களும் செத்துவிடுவதுண்டு.
இப்போது மத்திய ஐரோப்பாவில் பேரிலை பீச் மரங்களைக் காண முடியாது. ஆனால் அவற்றை வடக்கு மலைச்சரிவில் காணலாம்.
அங்கு அவற்றை அமெரிக்க பீச் என்கிறார்கள். கிழக்கு, மேற்கு மலைப்பகுதியில் அவற்றின் வாழ்வுக்குச் சிரமம் எதுமில்லை என்பதே காரணம்.
எனவே எளிதாக வடக்கு, தெற்கு மலைச்சரிவுகளை வட அமெரிக்கக் கண்டங்களில் எட்டிவிட முடிகிறது.
தெற்குப் பகுதியை அவை எளிதாக எட்டி, பின் வடபகுதியைப் பனியுகம் முடிந்தபின் எட்டிவிட முடிகிறது.
பிற மரங்களின் அரவணைப்புடன் பீச், மத்திய அமெரிக்காவிற்கு ஆல்பஸ் மலைகளைக் கடந்துசென்று தப்பிப் பிழைத்துவிடுகிறது.
இதன் சில இனங்களுக்குப் பாதை சில ஆயிரம் ஆண்டுகள் திறந்துவிடப்படுகிறது. உயர்ந்த உச்சிகள் சில மரங்களுக்குத் தாங்க முடியாததாக உள்ளன.
இப்போது மத்திய ஐரோப்பாவில் பேரிலை பீச் மரங்களைக் காண முடியாது. ஆனால் அவற்றை வட அமெரிக்காவின் கிழக்குச் சரிவில் காண முடியும். இப்போது பீச் மரங்கள் வடக்கு நோக்கி நடக்கத் துவங்கியுள்ளன.
உருகி ஓடும் பனியின் பாதையில் அவை நடக்கின்றன. பருவநிலை வெப்பமானவுடன் விதைகளுக்கு முளைக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
அவை வளர்ந்து, புதிய விதைகளைத் தூவியபடி வடக்கு நோக்கி விரைகின்றன. பீச் மரங்களின் பயணம் ஆண்டுக்குக் கால் மைல் வேகத்தில் நடக்கிறது.
பீச் மரம் மெல்ல நடப்பது. அதன் விதைகள் ஜாய்ஸ் பறவையால் பரப்பப்படுகிறது. காற்று விரைவான விதை விதைப்பான். 4000 ஆண்டுகள் முன் பீச் மரம் திரும்ப வந்தபோது ஓக் மரங்களே பெரும்பாலும் இருந்தன.
அதிக நிழலை ஏற்று வளரும் யுக்தி பீச் மரத்துக்கு உதவியது. ஓக் மரம் தான் எடுத்ததுபோகத் தரும் சிறிது சூரிய ஒளியில் தடைகள் கடந்து வளர்ந்தது. தடுத்த மரங்களைத் தாண்டி உயரமாக வளர்ந்தது. அதன் வெற்றிப் பயணம் ஸ்வீடன் வரை தொடர்ந்தது.
பீச் மரத்தின் வரவு ஐரோப்பியக் காடுகளின் இயற்கைச் சூழலில் பெரும் மாற்றங்கள் தந்தது.
காடுகள் வெட்டப்பட்டு, இறைச்சித் தேவைக்கான மேய்ச்சல் நிலமும் தீவனமும் விளைவிக்கப்பட்டன. காடுகள் மாடுகளுக்கும் பன்றிகளுக்கும் இடம் தந்து விடைபெற்றன. பீச் மரத்திற்கு ஆபத்து வந்தது.
மெல்ல வளரும் அதன் விதைகள் கால்நடைகளின் உணவாகி அழிக்கப்பட்டன. மனிதர்களும் கால்நடைகளும் வரும் முன் 200 ஆண்டுகளுக்கு முன் வந்தது பீச்.
பின்வந்த கால்நடைகளின் அசுரப் பசிக்குக் காடு காலியானது. மரங்கள் வெட்டப்பட்ட காட்டுப் பகுதியில் சூரியஒளி பட்டது.
ஒளிபெற முடியாத மரவகைகள் ஒளி பெற்றன. பனியுகத்திற்குப் பின் பீச் மெல்லப் புலம்பெயர்ந்து புகுந்தது. இன்றுவரை அதன் ஆட்சி நடக்கிறது.
கடந்த சில நூற்றாண்டுகளாக வேட்டை விளையாட்டு எனும் அசுரப் பொழுதுபோக்கு ஐரோப்பாவை ஆக்கிரமித்தது. பெருகிவந்த மான்களையும் பன்றிகளையும் கட்டுப்படுத்த வேட்டை உதவியது.
வேட்டைக்காரர்கள் செயலால் மேய்ச்சல் நிலம் அதிகமானது. மான்கள் கூட்டம் பல மடங்கு பெருகியது. ஜெர்மனியில் மான்கள் எண்ணிக்கை உயர்ந்தது. பீச் மரங்கள் தப்பித்து வாழப் போராடின.
வனத்துறை அதன் பெருக்கத்தைத் தடுத்தது. தெற்கு ஸ்வீடனில் பீச் வசதியாக வளர முடியவில்லை. ஸ்ப்ரூசும் பைனுமே வளர்ந்தன.
பீச் மரங்களைக் காண்பது அரிதானது. பொறுமையுடன் காத்திருந்த பீச் மரங்கள், சமயம் கிடைத்தபோது தமது வடக்கு நோக்கிய புலம்பெயர்வைத் துவங்கின.
ஐரோப்பிய சில்வர் ஃபிர் மரங்கள் மிக மெதுவாகப் புலம்பெயர்பவை. ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்ட வெள்ளி நிறப்பட்டையைக் கொண்டது.
தென் ஐரோப்பாவின் பனியுகம் முடியும்வரை காத்திருந்து இத்தாலி, ஸ்பெயின், பாலிகன் நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 900 அடி எனப் புலம் பெயர்ந்தது.
ஸ்ப்ரூஸ் பைன் மர விதைகள் கனமற்றதாக உள்ளதால் எளிதாகப் பறக்கின்றன. பீச் விதைகள் கனமானபோதும் ஜாய் பறவைகளால் எளிதாகச் சுமந்து கொண்டுசெல்லப்படுகின்றன.
சில்வர் ஃபிர் மரங்கள் தவறான யுக்தியைக் கையாள்கின்றன. அதன் விதைகள் பறக்க உகந்தவையல்ல. அதில் உள்ள சிறகுகள் மிகச் சிறியன என்பதால் அவை பறக்கப் போதுமானதாக இல்லை.
பறவைகள் ஃபிர் விதைகளைத் தின்கின்றன என்றபோதும் பயன் குறைவே. நட்கிரேக்கர் ஸ்விஸ் பைன் விதைகளைத் தின்று சேமிக்கின்றன.
ஆனால் ஜாய்ஸ் பறவைகள் அக்ரோன், பீச் விதைகளை மண்ணில் பல இடங்களில் புதைத்துச் சேமிக்கின்றன.
பறவைகள் மறதியாகச் சில கொட்டைகளை விட்டுச் சென்றபோதும், நீரின்மையால் அவை முளைக்க முடிவதில்லை.
சில்வர் ஃபிர் மரங்களின் வாழ்க்கை சிரமமானது. ஆனால் மத்திய ஐரோப்பாவின் உள்ளூர் மரங்கள், ஸ்காண்டி நேவியாவை நோக்கிப் புறப்படுகின்றன.
சில்வர் ஃபிர் மரங்கள் வடக்கு ஜெர்மனியில் உள்ள ஹார்ஸ் (Harz) மலைகள்வரை செல்கிறது.
சில நூற்றாண்டுகள் தாமதப்பட்டாலும் மரங்கள் அதுபற்றிக் கவலை கொள்வதில்லை. ஃபிர் மரங்கள் நிழலை ஏற்றுக்கொண்டு, பீச் மரத்தடியிலும் வளர்கின்றன.
அவை தம்மைப் பழமையான காடுகளிலும் பதித்துக்கொண்டு வலிமையாக வளர்கின்றன.
பீச் மரங்கள் மத்திய ஐரோப்பாவில் அவ்வளவு போட்டி போடுவது ஏன்? ஐரோப்பாவில் மற்ற எல்லா மர இனங்களைவிடவும் மேலாக வாழ முடியுமானால் உலகம் முழுதும் பரவாதது ஏன்? இதற்கான பதில் எளியது.
இதன் பலன் இந்தப் பருவநிலையில் மட்டும்தான். அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டிய பகுதியில் மட்டும்தான் இதன் ஆதிக்கம். மலையின் உச்சி தவிர (இங்கு பீச் உயர்மலைச் சரிவுகளில் வளராது) வெப்பநிலையில் பெரிய மாற்றமிராது.
குளிர்ந்த கோடைகாலம் போய் கதகதப்பான பனிக்காலம் வரும். பனிப்பொழிவு 20-60 அங்குலம் ஓராண்டில் நிகழும். இதை பீச் விரும்பும்.
வனங்களில் மரம் வளரத் தண்ணீர் ஒரு முக்கியக் காரணம். இங்கு பீச் வெல்கிறது. ஒரு பவுண்ட் மரம் விளைய 22 கேலன் தண்ணீர் தேவை.
பிற மரங்களுக்கு 36 கேலன் தண்ணீர் தேவை. இதனால் பீச் விரைந்து வளர்ந்து பிற மரங்களை வெல்கிறது.
ஸ்ப்ரூஸ் மரங்களுக்கான குளிர்ந்த நீர்ப்பதம் தேவை. வடபகுதி இதற்கு ஏற்றதல்ல. இங்கு அதிகம் மழை பொழியும். வெப்பநிலை குறைவு.
நீராவியாதல் மிகக் குறைவு. இங்கு வளரும் மரங்கள் நீரை வீணாக்குவதில்லை. சிக்கனமான பீச் விரைந்து வளர்கிறது.
வறட்சிக் காலத்திலும் பீச் நன்கு வளர்ந்து, ஊதாரி மரங்களை விட உயரமாகிறது. போட்டியிடும் மரங்கள் கனத்த இலை மறைவில் தரையில் நிற்கும்.
பீச் அலட்சியமாக உயர்ந்து வளரும். பீச் சூரிய ஒளியை அதிகமாக எடுத்துக்கொண்டு, மற்றவற்றிற்கு எதுவும் விட்டுவைப்பதில்லை.
அது தனக்கான நீர்ப்பதம் கொண்ட நுண்பருவ நிலையை உருவாக்கிக் கொள்கிறது. அதே வேளையில் தரையில் தேவையான இலைச் சத்தைச் சேமித்துக்கொள்கிறது.
அதன் கிளைகள் நீரைச் சேமித்துக்கொண்ட மத்தி ஐரோப்பாவின் வெல்ல முடியாத இனம் ஆகிறது. இப்பகுதியில் மட்டும்தான் இது நடக்கிறது.
பருவநிலை வெப்பமாகி மத்தியதரைக்கடல் பகுதியைப் போலாகும்போது இம்மரங்கள் கடினமான சோதனையைச் சந்திக்க நேரிடும்.
கோடை வெப்பத்தை இவை தாங்குவதில்லை. கடுமையான பனிக்காலத்தையும் தாங்குவதில்லை.
ஓக் போன்ற பிற மரங்களுக்கு வழிவிட்டாக வேண்டும்.
கிழக்கு ஐரோப்பாவில் கோடைகாலங்கள் மிகுந்த வெப்பமாகவும் குளிர்காலங்கள் மிகவும் குளிராகவும் இருக்கும் ஸ்கான்டிநேவியாவின் கோடைக்காலம் இவற்றுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் இந்த வடபகுதியில் நிலவும் குளிர்காலம் பீச் மரத்திற்கு ஏற்றதல்ல.
வெப்பம் மிகு தென்பகுதியின் உயர்ந்த பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இங்கு வெப்பம் ஓரளவு குறைவு.
எனவேதான் பீச் மத்திய ஐரோப்பாவில் அடைபட்டுக் கிடக்கிறது. பருவநிலை மாற்றம் வடபகுதியை வெப்பமாக்குகிறது. எனவே எதிர்காலத்தில் இத்திசையில் அவை பரவி வளரும்.
அதே வேளையில் தென்பகுதி வெப்பமாகும். முழ மரத் தொகுப்பும் வடக்கு நோக்கிப் புலம்பெயர நேரிடும்.
‘மரங்கள் பேசும் மௌன மொழி’ என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.
நூல் விவரம்:
மரங்கள் பேசும் மௌன மொழி
(சூழலியல்)
ஆசிரியர்: பீட்டர் வோல்பென்
தமிழில்: வெ. ஜீவானந்தம்
அச்சு நூல் விலை: ரூ. 225
நூலைப் பெற: https://books.kalachuvadu.com/catalogue/u0baeu0bb0u0b99u0b95u0bb3-u0baau0b9au0bae-u0baeu0ba9-u0baeu0bb4_1067/