அருகமைப் பள்ளிகளின் அவசியம்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 9 : சு. உமாமகேஸ்வரி

கல்வி கற்பது என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி என்பது பல பரிமாணங்களில் இருந்து குழந்தைகள் பெறுவது. அவற்றுள் மிக அடிப்படையான காரணி, அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் படிப்பது.

1964 இல் அமைக்கப்பட்ட, கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானது அருகமைப் பள்ளிகள் முறைதான்.

ஒரு கி.மீ. தொலைவில் ஆரம்பப் பள்ளிகளும், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் ஐந்து கி.மீ. தொலைவில் மேல்நிலைப்பள்ளிகளும் அமைந்திருக்க வேண்டும் என்று வரையறை செய்தது கோத்தாரி கல்விக் குழு.

அதன் அடிப்படையில்தான் அரசு விதிகளுடன் அரசுப் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

குழந்தைகள் அந்தந்த வயதிற்கு ஏற்ப, வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பதுதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது.

அதோடு ஆசிரியர்களும் பள்ளி அமைந்திருக்கும் பகுதிகளிலேயே தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை.

பள்ளி துவங்கும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகப் புறப்பட்டு, சக பள்ளித் தோழர்களுடன் சேர்த்து நடந்து சென்றாலே போதும். பள்ளியை சரியான நேரத்திற்கு அடைந்துவிடலாம்.

குழந்தைகளின் குடும்பச் சூழலையும் ஆசிரியர்களால் புரிந்துகொண்டு அவர்களை அணுகும் முறையிலும் இணக்கம் இருக்கும்.

நடத்தை மாற்றங்களில் பிரச்சனைகள் வரும்போது, எளிதாக பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து உரையாடலாம். அல்லது பள்ளிக்கு அருகில் வீடுகள் என்னும் போது ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று பெற்றோர்களைச் சந்திக்கலாம்.

குழந்தைகள் அனைவரும் அந்த ஊரின், சமூகத்தின் பகுதியிலிருந்து வருவதால் ஒருவரை ஒருவர் அறிந்திருப்பார்கள். அவர்களது மொழி, இனம், சாதி சார்ந்த எந்தப் பிரச்சனைகளும் வர வாய்ப்புகள் இல்லை.

ஒரே பகுதியில் வாழும் பல்வேறுபட்ட சமூகப் பொருளாதார வேறுபாடு கொண்ட குழந்தைகளை ஒன்றாக வகுப்பறைகளில் அமரவைக்கும்போது அவர்களுக்குள் வேறுபாடின்றி பழக நட்புறவுகொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.

மாலை நேரங்களில் விளையாடுவதற்கும், சக மாணவர்களுடன் பழகுவதற்கும் உதவும். குறிப்பாக நேர மிச்சம்.

பொதுத்தேர்வு வகுப்புகளுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் வைத்தாலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பேருந்துக்காக வெகு நேரம் காத்திருந்து செல்லவோ, பசியுடன் வீட்டிற்குச் செல்லவோ அவசியமில்லை.

விடுதிகள் என்ற அமைப்புக்கே இடம் தராத பள்ளி அமைப்புதான் அருகமைப் பள்ளி அமைப்பு. சமூக நீதியும், சமவாய்ப்பும் மகிழ்ச்சியான கற்றலும் உருவாகும் இடங்கள்தான் அருகமைப் பள்ளிகள்.

மன அழுத்தங்களுக்கு இடம் தராமல், அன்றாடம் பெற்றோர்களிடம் உரையாட நேரம் கிடைக்க வாய்ப்பு தருபவை.

அதோடு அந்த ஊர் மக்களின் குழந்தைகள் அனைவரும் படிக்கும்போது, பல தரப்பட்ட பொது மக்களின் பார்வையில் பள்ளியை மேம்படுத்துவதும் வளங்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு.

பேருந்தில் கீழே விழுந்து மரணிக்கும் ஆபத்தும், விடுதிகளின் தற்கொலைகளும் அருகமைப் பள்ளிகளில் ஏற்பட வாய்ப்புகளில்லை.

மாற்றாக, தற்போதைய தமிழகக் கல்விச் சூழல் எத்தகையதாக இருக்கிறது என ஆராய்ந்து பார்த்தால் மிக மோசமான முடிவுகளை நமக்குக் கொடுக்கும். தற்கால தனியார் கல்விமயத்தின் அதீத வளர்ச்சியினால் சூழல் தலைகீழாக மாறிவிட்டது.

பெற்றோரின் பேராசை, கெளரவ எண்ணம், 30 கி.மீ. தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்குக் கூட, தங்கள் குழந்தைகளை அனுப்ப வைக்கிறது.

குழந்தைகளிடம் ஒரு நாளும் கேட்கமாட்டார்கள் பெற்றோர்கள்.

இவ்வளவு தூரம் பயணிக்க விருப்பமா? உடல் நலன் ஒத்துழைப்புத் தருகிறதா என்று எந்த உரையாடலும் இல்லை.

மாணவர்களின் வீடுகளிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய தங்கள் பள்ளிகளுக்கு, மஞ்சள் நிறப் பேருந்துகள் விடியற்காலையிலேயே வந்து அள்ளிச் செல்கின்றன.

மழலையர் வகுப்புக் குழந்தைகள்கூட நெடுந்தூரம் பயணிக்கும் வேதனை.

தூக்கமின்றி பேருந்துகளிலேயே தூங்குவதும் உணவுமுறைகளில் துரித உணவுப் பழக்கமும் இவரிகளுக்கு சாதாரணம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என எதுவுமில்லாமல் ஒபிசிட்டி என்ற பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துகளும் உண்டு.

குழந்தைகளை ஏற்கெனவே பாடச் சுமைகள் அழுத்த, வெகு தூரம் பயணிக்கும் இந்த நடைமுறையால் உடல் மன ஆரோக்கியம் கெடுகிறது.

ஒரு கட்டத்தில் படிப்பின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதனால் தற்கொலைகள் நிகழ்கின்றன.

2009 கல்வி உரிமைச் சட்டம் வந்த பிறகுதான் தனியார் பள்ளிகள், மேற்சொன்ன கோத்தாரி கல்விக் குழுவின் வரையறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டன.

இருப்பினும், அது வெறும் தாள்களின் ஆவணமாகவே இருக்கிறது என்பதே எதார்த்தம்.

ஆகவே, இங்கு கல்வி வியாபாரமாகி அருகமைப் பள்ளி முறையை அழித்துவருகிறது.

இதை மாற்றி அருகமைப் பள்ளி முறையை மீட்டெடுக்க அரசு முயற்சிக்கவேண்டும், பெற்றோரும் கை கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்துக்கு வழிவகுக்கவேண்டும்.

தொடரும்…

You might also like