– பாராட்டப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி
“டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னருக்கு ஆலோசகராக இருந்த அவருடைய தந்தை தனியாக ஓர் ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து, முத்துலெட்சுமியின் படிப்பைத் தொடர வழி செய்தார்.
பத்தாயிரம் பேர் தேர்வு எழுதி, வெறும் 80 பேர் தான் தேர்ச்சி பெறும் அந்தக் காலத்தில், மெட்ரிக் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார் முத்துலெட்சுமி.
மருத்துவம் பயின்று தனது அம்மாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரது ஆசை.
ஆங்கிலோ இந்தியப் பெண்களைத் தவிர, மற்ற இந்தியப் பெண்கள் அதுவரை மருத்துவம் பயில அப்போது அனுமதிக்கப்பட்டதில்லை.
“கரண்டி பிடித்துச் சமையல் செய்யும் ஒரு பெண்ணால், கத்தி பிடித்து அறுவைச் சிகிச்சை செய்ய முடியுமா?” என்று சொல்லி அறுவைச் சிகிச்சை வகுப்பில் இருந்து, வெள்ளைக்காரப் பேராசிரியரால் முத்துலெட்சுமி வெளியேற்றப்பட்டார்.
மூன்று மாத காலம். வகுப்பறைக்கு வெளியிலேயே நின்று பாடங்களைக் குறிப்பெடுத்துக் கொண்ட முத்துலெட்சுமி, அந்த வருட சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றிய அதே பேராசிரியர் “இதேபோல இங்கிலாந்தில் ஒரு பெண் இருந்தால் போதும், இங்கிலாந்திலேயே முதல் மருத்துவராக வந்துவிடுவார்” என்று பாராட்டினார்.
பின்பு தனக்குக் கிடைத்த விரிவுரையாளர் பதவியை உதறித் தள்ளி, தன் சொந்த ஊருக்கே சேவை செய்யப் புறப்பட்டார் முத்துலெட்சுமி ரெட்டி”
– 2016 ஆம் ஆண்டு விகடன் இதழ் மேல்மருவத்தூர் கல்லூரியில் நடத்திய ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதிலிருந்து ஒரு பகுதி.