ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை ஜெமினி அதிபர் வாசன் தனது படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்.
அந்நேரம் எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் ஜெமினி கணேசனுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படம், ராஜ் திலக் என்ற பெயரில் இந்தி மொழியிலும் எடுக்கப்பட்டது (1958).
இந்தப் படத்தில் இடம் பெற்ற “கண்ணும் கண்ணும் கலந்து” பாடலில் பத்மினியின் நடனத்தை விட வைஜெயந்தி மாலாவின் நடனமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாடலுக்கு நடுவே வரும் சபாஷ் சரியான போட்டி என்ற வீரப்பனின் வசனமும் சிறப்பு சேர்த்தது..
சுமார் 8 நிமிடங்கள் ஒலிக்கும் இப்பாடலை எடுப்பதற்கு சுமார் ஒரு மாத காலம் ஆனதாம், பத்மினியின் நடனக் காட்சிகளை முதலில் படம் பிடித்தார்கள், பத்மினியின் நடன அசைவுகளை உன்னிப்பாகக் கண்ணுற்று பத்மினியை விட சிறப்பாக ஆடினார் வைஜெயந்தி மாலா!
“இன்னொருத்தி நிகராகுமோ எனக்கு இன்னொருத்தி நிகராகுமோ?” என்று பாடலில் பாடுவதைப் போல் பத்மினிக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் இடையே உண்மையிலேயே பனிப் போர் மூண்டது.
வஞ்சிக் கோட்டை வாலிபன் பட டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என்ற குழப்பம் ஜெமினி நிறுவனத்திற்கு ஏற்பட்டது ..
இந்த விவகாரத்தில் பத்மினியின் தாயார் சரஸ்வதியம்மா தலையிட்டு மத்தியஸ்தம் செய்து வைத்தார்.
வைஜயந்திமாலாவின் பாட்டி யதுகிரி அம்மாள், தன் பேத்தி தோல்வியடைவதாக காட்டக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இந்தப் பிரச்சினையால்தான் இருவரில் யாருமே ஜெயிக்காமல், கடைசியில் ஜெமினி கணேசன் அலங்கார விளக்கை உடைத்து போட்டியை நிறுத்துவது போல் காட்சி அமைத்தார்களாம்.