எட்டி மரங்களை நட்டதில்லை!

அவதூறுகளின் குப்பைக் கூடை
என் மேல் கவிழ்க்கப்படுவது
இது முதன்முறை அல்ல

எனக்கு அது புனித நீராட்டுப் போல்
பழகிப்போய்விட்டது
முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது
இப்போது சுவாச மதுரமாகிவிட்டது

அட,
இன்றைக்கு வரவேண்டிய
வசை அஞ்சல் இன்னும் வரவில்லையே
இணையத் துப்பாக்கி வெடிக்கவில்லையே
முக நூல் சுடுசரம் பாயவில்லையே
என்று என் தோட்டத்தில்
கவலை அரும்புகள் கன்றிப் பூக்கின்றன.

ஒவ்வொரு குப்பை அபிஷேகத்துக்கும்
ஒரு மரக்கன்று நடுகிறேன்
மகிழம் தேக்கு மரமல்லிகை
சந்தனம் தேவதாரு மருது வாகை
வசையின் ஆழத்துக்கு ஏற்றபடி.

ஒருபோதும்
நடுவதில்லை நான்
எட்டி மரங்களை.

-சிற்பி பாலசுப்ரமணியம்

You might also like