அஞ்சலி: திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி

சென்னையில் வாழ்ந்துவந்த திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, செவ்வாயன்று பிற்பகலில் மறைந்துவிட்டார். தமிழ் சினிமா குறித்து ஆழமான பார்வைகளை முன்வைத்த ஆளுமை. அவரது மறைவு குறித்து கலை, இலக்கிய படைப்பாளர்களின் அஞ்சலி…

சி. மோகன், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்

கலை, இலக்கியம், தத்துவம், உளவியல், கலாசார அரசியல் ஆகிய தளங்களில் ஆழ்ந்த அறிவும் தீர்க்கமான பார்வைகளும் கொண்டவர், சக்ஸ் என்று நண்பர்களால் நெருக்கமாக அழைக்கப்பட்ட வெங்கடேஷ் சக்கரவர்த்தி.

சினிமா பற்றிய அவருடைய ஞானம் அபாரமானது. சினிமாவைக் கற்பிப்பதில் ஒரு மேதை.

மிகச் சிறந்த உரையாடல்காரர். அவருடைய சிந்தனைகளின் சிறகுகள் உடனிருப்பவரை பல்வேறு திசைகளுக்கு அழைத்துச் செல்பவை. எனினும், தமிழ்ச் சமூகம் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டது மிகவும் குறைவு.

மனைவி ப்ரீதம் சக்ரவர்த்தி, மகள்கள் மாளவிகா, சம்யுக்தாவுக்கு மட்டுமல்ல, அவரிடமிருந்து உத்வேகம் பெற்ற நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.

பால் நிலவன், எழுத்தாளர், பத்திரிகையாளர்

மறைந்த வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் பேச்சை முதன்முதலாக நான் கேட்டது 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு. டெய்லர்ஸ் சாலையில் உள்ள அரும்புவின் ‘சிகா’ அரங்கத்தில்தான்.

தமிழ் சினிமாவின் முக்கியமான Trendsetting என்று கருதப்படும் ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்கள் தவறான அரசியல் கொண்டதாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். எனக்கு அப்புறம்தான் பல விஷயங்கள் புரியத் தொடங்கின.

இந்திய சினிமாவைப் பற்றி குறிப்பாக அவர் தமிழ் சினிமாவைப் பற்றி எழுதியதைவிட பேசியதுதான் அதிகம். சினிமாவைக் கற்பிக்கும் ஒரு கல்லூரி பேராசிரியர் என்ற நிலையைத் தாண்டி எழுத்தாளர் இடத்திற்கு வர அவருக்கு நிறைய தயக்கம் இருந்தது.

அதில் அவருக்கு விருப்பமுமில்லை. ஹைதராபாத் ராமா நாயுடு பிலிம் ஸ்கூலின் Dean ஆகவும் உயர்ந்தார். சினிமாவிலும் நடித்தார்.

கட்டுரை கேட்டால் நான் பேசியதைக் கட்டுரையாக எழுதிக்கொள்ளுங்கள் என்பாராம்.

நல்லா சிந்திக்கிறார் ஆனா அவருகிட்ட இருந்து காட்சிப் பிழைக்காக கட்டுரை வாங்கிறது போதும் போதும் என்றாகி விடுகிறது என்று காட்சிபிழை ஆசிரியர் அன்பிற்குரிய V.M.S சுபகுணராஜன் ஒருமுறை அலுத்துக்கொண்டார்.

சேரனின் ‘ஆட்டோகிராப்’ பெண்களுக்கு எதிரான படமாக எவ்வாறு ஜொலிக்கிறது என்பதை உயிர்மையில் அவர் எழுதிய கட்டுரை மிக முக்கியமானது.

தமிழ் நவீன சினிமா தேடலுக்கான நட்புவட்டம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்து வாடுகிறது.

அஜயன் பாலா, எழுத்தாளர்

தமிழ் சினிமாவில் சிந்திக்கும் தலைமுறையை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள சக்ஸ் என அன்பாக அழைக்கப்படும் @வெங்கடேஷ் சக்ரவர்த்தி அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. . அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

அ. ராமசாமி, பேராசிரியர்

சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன்.

முதன்முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கு அருகில் இருந்த இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்.

அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார்.

அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்‌ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.

கல்விப்புலம் சார்ந்து சினிமாவைக் கற்றுக் கொண்டவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்.

பலநேரங்களில் அவரது விவரிப்புகளோடும் விளக்கங்களோடும் முரண்பட்டிருக்கிறேன்.

நான் எழுதும் சினிமா விமரிசனங்களோடு அவருக்கும் பல நேரங்களில் உடன்பாடு இருந்ததில்லை என்பதைக் காட்டியிருக்கிறார்.

சினிமா குறித்த கருத்தரங்குகளில் எதிரும் புதிருமாக விவாதம் செய்திருக்கிறோம்.

ராசி அழகப்பன், இயக்குநர்

நல்ல தமிழ் திரைப்படங்கள் உருவாக முயன்ற சக்ஸ் என அன்பாக அழைக்கப்படும் @வெங்கடேஷ் சக்ரவர்த்தி அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. . அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

தொகுப்பு: பா. மகிழ்மதி

You might also like