‘இலவச வாக்குறுதிகள்’ கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

  • உச்சநீதிமன்றம்

தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன என வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன.

இது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதோடு, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக, வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றதாகும்.

எனவே, இலவசங்களை அறிவிப்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டப் பிரிவு 14 உள்பட பல்வேறு அரசியலமைப்புச் சட்ட பிரிவுகளை மீறிய நடவடிக்கை என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

மேலும், இவ்வாறு இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் தோ்தல் சின்னத்தை முடக்குவது அல்லது கட்சிகளின் பதிவை ரத்து செய்வது அல்லது இரண்டு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

அதன்படி, தோ்தல் ஆணையம் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலவசங்கள் அறிவிப்பது என்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

தோ்தல் ஆணையம் அல்ல. ஒரு மாநிலத்தின் கொள்கை மற்றும் தோ்தலில் வெற்றிபெற்ற கட்சி ஆட்சி அமைக்கும்போது எடுக்கும் முடிவுகளை தோ்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாது’ என்று தோ்தல் ஆணையம் பதிலளித்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல், “இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம்தான் ஒழுங்குபடுத்த வேண்டும்” என்றாா்.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் உரிய நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?

அரசியல் கட்சிகளின் இலவச திட்ட அறிவிப்புகள் தொடர வேண்டுமா அல்லது கூடாதா என்ற முடிவை மத்திய அரசு முதலில் எடுக்கட்டும்.

அதன் பிறகு நாங்கள் இந்த விவகாரத்தில் முடிவை எடுப்போம். எனவே, இதுதொடா்பான விரிவான பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனா்.

மேலும், இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இதற்கு தீா்வு காணும் வகையில் உரிய கருத்தைத் தெரிவிக்குமாறு, வேறொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபலிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

அப்போது, “இந்த விவகாரத்தில் நிதி ஆணையம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும். எனவே, இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு நிதி ஆணையத்துக்கு அழைப்பு விடுக்கலாம்.

ஏனெனில், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கும் என எதிா்பாா்க்க முடியாது.

அவ்வாறு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்குவது பல்வேறு அரசியல் பிரச்னைகளை உருவாக்கிவிடும்” என்று யோசனை தெரிவித்தாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் இலவச திட்ட வாக்குறுதிகள் அளிக்கும் விவகாரத்தை நிதி ஆணையத்திடம் ஒப்படைக்கும் யோசனை குறித்தும் மத்திய அரசு பதிலளிக்குமாறு கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

You might also like