அக்சர் அதிரடியால் தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகமாகவே இருந்தது.

வெறும் மூன்று ரன்கள் எடுக்க முடியாமல் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்றது.

முதல் ஆட்டத்திலேயே 300 ரன்கள் கடந்த இரண்டு அணிகளுமே இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட மிக முனைப்புடன் களம் இறங்கியது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் வென்று விட்டால் 1-1 என்ற கணக்கில் அடுத்த ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப் சர்வதேச கிரிக்கெட்டில் தனது நூறாவது போட்டியில் நேற்று விளையாடினார்.

நூறாவது போட்டி என்பதால் நூறு ரன்கள் அடித்துதானே ஆக வேண்டும் என்பது போல இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து நேற்று அசத்தினார். 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 135 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி, இறுதியாக 49ஆவது ஓவரில் தாக்கூர் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரனும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று அவர் ஆட்டத்தில் காட்டிய அதிரடி இந்திய அணியை திக்கு முக்காட வைத்தது. 77 பந்துகளில் 74 ரன்கள் அடித்து இருந்த பொழுது அவரும் தாக்கூர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

நேற்று அவருடைய ஆட்டத்தில் அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார், ஆனால் 6 சிக்சர்களை விளாசினார்.

நிக்கோலஸ் பூரனும், சாய் ஹோப்பும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை துவம்சம் செய்த பொழுது, இந்த ஆட்டம் கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று விடும் என்றுதான் தோன்றியது.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய தாகூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

50 ஓவர்கள் முழுமையாக விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடினம் என்று அனைவரும் விமர்சித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆட்டங்களிலும் முழு ஐம்பது ஓவர்களையும் விளையாடி 300 ரன்களையும் கடந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

312 என்னும் அபார இலக்கை அடைய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.

கடந்த ஆட்டத்தைப் போல இந்தியனின் துவக்கம் மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வெறும் 13 ரன்கள் தவான் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

சுப்மன் கில்லின் சிறந்த ஃபார்ம்

மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் தனது அரை சதம் வாய்ப்பை தவறவிட்டு 43 ரன்களில் நடையை கட்டினார்.

கடந்த இரண்டு ஆட்டங்களையும் வைத்து பார்க்கும் பொழுது சுப்மன் கில் இந்திய அணிக்கு ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்து வருகிறார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பவுண்டரிகளை பிளேஸ் செய்வதில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களை சரியாக கவனித்து, எந்த பக்கம் பந்தை அடித்தால் பீல்டர்களையும் தாண்டி அது பவுண்டரியை சென்றடையும் என்று கணிப்பதில் சுப்மன் கில் கில்லாடியாக உள்ளார்.

கடந்த இரண்டு ஆட்டங்களிலுமே அவர் அடித்த பவுண்டரிகளை பார்க்கும் பொழுது அவர் தனது சிறந்த ஃபார்மில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயரும், சஞ்சு சாம்சனும் ஜோடியாக 99 ரன்கள் குவித்தனர். இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை கடந்தனர்.

ஸ்ரேயஸ் ஐயர் 63 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 11 ஓவர்களில் 15 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது.

அக்சர் பட்டேலின் அதிரடி ஆட்டம்

இந்தியாவின் நிலமையை பார்க்கும் பொழுது இந்தியா தோற்றுவிடும் என்று தான் தோன்றியது ஆனால் திடீரென்று அக்சர் பட்டேல் தனது அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமின்றி அனைவருமே ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.

வெறும் 35 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் அக்சர் பட்டேல் காட்டிய அதிரடியால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

இந்திய அணிக்கு இரண்டு பந்துகள் இன்னும் மீதம் இருக்க, இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

தனது முதல் அரை சதத்தை அதிரடியாக பதிவு செய்த அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடைசி ஆறு ஓவர்களில் தான் தன் கையில் இருந்த ஆட்டத்தை இழந்தது என்று சொல்லலாம். அக்சர் பட்டேல் அதிரடி மட்டும் இல்லை என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக அபாரமாக வென்றிருக்கும்.

என்னதான் மிகவும் மோசமாக தோற்கும் நிலையில் இருந்தாலும் கூட கடைசி முடிவு வரை போராடும் குணம் கொண்டவர்கள் இந்தியர்கள் என்று நிரூபிக்கும் வகையில் அக்சர் பட்டேல் நேற்று இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற புதன்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

தொடரை ஏற்கனவே இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற மிக முனைப்புடன் களமிறங்கும் என்று தெரிகிறது.

You might also like