குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். குடியரசுத்தலைவர் பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார்.
இதையடுத்து திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வந்தனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் விழா தொடங்கியது.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு உரையாற்றினார்.
“நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்றத்தில் இருந்து மக்களை வணங்குகிறேன். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். என்னுடைய புதிய பொறுப்புகளை நிறைவேற்ற உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் தேவை.
ஒரு சாதாரண பழங்குடியின கிராமத்தில் இருந்துதான் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினேன். நான் வந்த பின்னணியில் இருந்து ஆரம்பநிலை கல்வியை பெறுவது என்பது மிகப்பெரும் கனவாக இருந்தது.
குடியரசுத் தலைவர் பதவியை அடைந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை ஆகும். சாமானிய ஏழை மக்களின் கனவும் நிறைவேறும் என்பதற்கு நான் உதாரணமாக திகழ்கிறேன்.
வளர்ச்சிக்கான பாதையில் நாடு செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன். இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக பணியாற்றுவேன்.
கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் வலிமையின் அடையாளம் ஆகும். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.
இளைஞர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை நான் மிக நெருக்கமாக இருந்து உணர்ந்துள்ளேன்” எனக் கூறினார்.