தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பாட்டும் பரதமும், மன்னாதி மன்னன், சலங்கை ஒலி, சந்திரமுகி படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தப் படங்களை மையமாக இணைக்கிற அம்சம் – பரதம்.
64 கலைகளில் முக்கியக் கலையான பரதநாட்டிய முத்திரைகளையும், அடவுகளையும் இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள கோவில் சிற்பங்களில் பார்க்கலாம். பாவம், ராகம், தாளம் இணைந்த அற்புதக்கலை தான் பரதம்.
சதிராட்டம், சதிர் என்கிற பெயர்களில் கோவில் மரபுடன் இணைந்திருந்த பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் தஞ்சை நால்வர்.
அடுத்த கட்டத்திற்குப் பரதத்தைக் கொண்டு சென்றவர்கள் பாலசரஸ்வதியும், ருக்மணிதேவி அருண்டேலும்.
திரைப்படங்கள் மூலம் அதைப் பிரபலப்படுத்தியவர்கள் வைஜெயந்திமாலா, பத்மினி, குமாரி கமலா, ஈ.வி.சரோஜா, எல்.விஜயலெட்சுமி, ஷோபனா போன்ற கலைஞர்கள்.
மேடை மூலமும் நிருத்யோதயா நாட்டியப்பள்ளி மூலமும் எண்ணற்ற பரதக் கலைஞர்களை உருவாக்கிய பெருமைமிக்க நாட்டியக்கலைஞர் முனைவர் பத்மா சுப்ரமணியம். அதோடு, சித்ரா விஸ்வேஸ்வரன்,
கே.ஜே.சரசா, மிருணாளினி சாராபாய், அலர்மேல் வள்ளி, யாமினி கிருஷ்ணமூர்த்தி, அனிதா ரத்னம், தனஞ்செயன், ஈ.கிருஷ்ணய்யர், நர்த்தகி நடராஜ் இன்னும் ஈழத்தில் பிரபலமான நாட்டியக் கலைஞர்கள் என்று நீண்ட கலைஞர்கள் பட்டியல் நமக்கு முன்னால்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் மரபுடன் இணைந்த பரதம் உள்ளிட்ட கலைகளையே ஒரு பாடத் திட்டமாக – ஒரு கல்வித் திட்டமாக இளைய தலைமுறையிடம் கொண்டு சென்றால் எப்படியிருக்கும்?
அதைத் தான் சிறப்பான அம்சமாகக் கொண்டிருக்கிறது சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
நாட்டியத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் நாட்டியத்தை முதுகலைப்பட்டப் படிப்பாக இங்கு பயில முடியும்.
தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் நாட்டியம் பாடத்திட்டமாக 2005 ஆம் ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப்படுகிறது.
பரத நாட்டியத்துடன், இசை, யோகா உள்ளிட்டவை தேர்வு முறையாகவும் கற்பிக்கப்படுகிறது. செய்முறை பயிற்சியாகவும் கற்பிக்கப்படுகிறது.
பிரபல பரதநாட்டியக் கலைஞரான முனைவர் பத்மா சுப்பிரமணியம் அவர்களிடம் பயிற்சி பெற்ற கலைஞரான சொர்ணமால்யா போன்றவர்கள் இங்கு பயிலும் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.
இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து வந்து தங்கி நாட்டியத்தைப் படிக்கும் மாணவிகளும் இருப்பது சிறப்பு.
இயல், இசை, நாடகமென்ற மூன்று வடிவங்களில் நாடகத்திற்கான நடிப்பு மொழி, மேடையாக்கம், உச்சரிப்புப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி, நாடகத்திற்கான அனைத்துக் கூறுகளும் இங்கு கற்றுத் தரப்படுகின்றன.
இதை முறையாக பயின்ற ஒரு மாணவி தன்னியல்பாக ஒரு நாடகத்தை உருவாக்கி விட முடியும்.
ஆர்வமும், ப்ளஸ்டூ தேர்வில் தேறியிருந்தால் மட்டும் போதும்.
நாட்டிய வகுப்பில் சேர்ந்து விடலாம். இதில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது என்பது விசேஷம்.
இந்த நாட்டிய வகுப்புகள் காலை 8.10 மணி முதல் பிற்பகல் 1.10 வரை நடத்தப்படுகிறது.
தொடர்புக்கு : 80560 72954, 044 – 2493 7382, 2493 7392
மின்னஞ்சல் முகவரி : admin@mgrjanaki.ac.in
இணையதள முகவரி : www.mgrjanaki.ac.in