செல்லாத வாக்களித்த தமிழக எம்.எல்.ஏ!

தேர்தலில் சாதாரண பிரஜைகள் செலுத்தும் ஓட்டுகள் பல நேரங்களில் செல்லாதவையாக இருக்கும்.

இது ஒரு செய்தியே அல்ல.

ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் தேர்தலில் செல்லாத வாக்களித்துள்ளனர் என்ற தகவல், கோபம், ஆத்திரம், எரிச்சல், வியப்பு, அதிர்ச்சி என பல உணர்ச்சிகளை ஒரே சமயத்தில் கொப்பளிக்கச் செய்கிறது.

மொத்தம் 53 பேர் செல்லாத வாக்களித்து மக்கள் முகத்தில் கசி பூசியுள்ளனர்.

செல்லாத வாக்களித்தவர்களில் 15 பேர் எம்.பி.க்கள். 38 பேர் எம்.எல்.ஏ.க்கள்.

தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.வும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ.வும் செல்லாத ஓட்டு போட்டுள்ளனர்.

அந்த பிரகஸ்பதிகள் யார் என தெரியவில்லை.

(கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 77 பேர் செல்லாத ஓட்டு போட்டனர். இந்தத் தேர்தலில், செல்லாத ஓட்டுகள் குறைந்துள்ளது என நமக்கு நாமே கை குலுக்கிக் கொள்வோம்.)

இந்தத் தேர்தலில் ஏகப்பட்ட கூத்துக்களும், சுவாரஸ்ய நிகழ்வுகள் பலவும் அரங்கேறியுள்ளன.

கொஞ்சம் பார்க்கலாம்.

126 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு

குடியரசுத் தலைவர் தேர்தலில், கட்சி கொறடா, தங்கள் கட்சி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது.

அப்படி அவர் ஆணையிட்டாலும், அதனை எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ பொருட்படுத்த வேண்டியது இல்லை.

மனசாட்சிப்படி வாக்களிக்கலாம். கட்சித் தாவல் தடைச் சட்டம், இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க முடியாது.

அதனால் தானோ என்னவோ, பல மாநிலங்களில் அணி அணியாக கட்சி மாறி ஓட்டளித்துள்ளனர்.

99 சதவீத எதிர்க்கட்சி ஆட்கள், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளார்கள். 17 எம்.பி.க்களும், 126 எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாறி முர்முவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

பாஜக ஆட்சி நடக்கும் அசாம் மாநிலத்தில் மட்டும் 22 எம்.எல்.ஏ.க்கள் (பெரும்பாலும் காங்கிரஸ்) முர்முவுக்கு வாக்களித்துள்ளார்கள்.

மற்ற மாநிலங்களில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் இது:

மத்தியபிரதேசம் – 19

மகாராஷ்டிரா -16

ஜார்கண்ட் – 10

குஜராத் – 10

பீகார்-6

பாவம் யஷ்வந்த் சின்கா

ஆந்திரா, சிக்கிம், நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களில் 100% ஓட்டுகளை அள்ளியுள்ளார் முர்மு.

இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

அவரது சொந்த மாநிலமான ஜார்கண்டுவில் யஷ்வந்துக்கு 9 வாக்குகள் மட்டுமே விழுந்தன. முர்முவுக்கு அங்கு 137 ஓட்டுகள் கிடைத்தன.

25 ஆம் தேதி பதவி ஏற்பு

64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிக்கனி பறித்துள்ள முர்மு, வரும் 25 ஆம் தேதி நாட்டின் 15 – வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்கிறார்.

மிகவும் இளையவர், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர், 2- வது பெண் குடியரசு தலைவர் என்பன போன்ற பெருமைகள் முர்முவுக்கு கிடைத்துள்ளன.

-பி.எம்.எம்.

You might also like