யானைகளும் மனித உயிரிழப்புகளும்: தீர்வு என்ன?

இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக 1992ஆம் ஆண்டு யானைத் திட்டம் (Project Elephant) தொடங்கப்பட்டது.

ஆசிய யானைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இயற்கை வாழ்விடங்களில் யானைகள் நீண்டகாலம் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த உலகம் தோன்றியதிலிருந்தே இயற்கையை அழித்து தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வது என்பது மனிதனின் இயல்பாக உள்ளது.

அந்த வகையில் இயற்கை பெருமளவில் அழிக்கப்பட்டு வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே அடிக்கடி எதிர்கொள்ளல் ஏற்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் நாட்டில் யானைகள் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், மேகாலயா, நாகாலாந்து,

ஒரிசா, தமிழகம், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் காட்டு யானைகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து யானைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானைகள் தாக்கி 1578 பேர் உயிரிழப்பு

இதுகுறித்து கடந்த 18ஆம் தேதி இந்திய வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவிக்கையில்,

“இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது. இதனால் வன விலங்குகள் – மனிதர்கள் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக யானைகள் தாக்கி மனிதர்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 1578 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், “கடந்த 3 வருடத்தில் ஒடிசாவில் 322 பேரும், ஜார்கண்டில் 291 பேரும், அஸ்ஸாமில் 229 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டில் 58 பேரும், 2021ஆம் ஆண்டில் 57 பேரும், 2022ஆம் ஆண்டில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக யானை தாக்கி 152 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

191 லட்சம் ரூபாய் இழப்பீடு

கடந்த மூன்று ஆண்டுகளில் ‘ப்ராஜெக்ட் எலிபன்ட்’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் யானை தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 191 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் வாழ்வாதாரத்தின் தரத்தைக் குறிக்கும் ஒன்றாக இயற்கை எப்போதும் இருந்துள்ளது. ஆனால் மனிதர்களோ அந்த இயற்கையை அழித்து தான் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வது என்று முடிவெடுத்தது போல கடந்த பல ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் பல காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

யானைகள் தாக்கி பல மனிதர்கள் உயிரிழக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளும் நாம், யானைகளின் காட்டை அழித்து தான் பல நெடுஞ்சாலைகளும், பல திட்டப் பணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை மறந்து விடுகிறோம்.

வனவிலங்குகள் எதுவுமே மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்துவதில்லை. மனிதர்கள்தான் காடுகளை அழித்து விட்டு, பின்னர் வனவிலங்குகள் தங்களை தாக்குவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

யானைகளின் வாழ்விடத்தை அழித்து விட்டு, அங்கு நெடுஞ்சாலைகளை அமைத்த பின், வாகனங்கள் செல்லும் வழியில் யானைகள் இடையூறுகள் ஏற்படுத்துகின்றன என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

யானைகளின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து விட்டு, யானைகள் அங்கு வரக் கூடாது என்று சொல்வதற்கு நாம் யார்?

என்னதான் விலங்குகளை காப்பாற்ற வேண்டும் காடுகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் குறித்து மனிதன் கவலை தெரிவித்தாலும், தான் வளர்ச்சி என்று வரும்பொழுது விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பதில் மனிதன் கவலை கொள்வதில்லை.

இயற்கை தான் மனிதனின் மிகப்பெரிய சொத்து என்ற எண்ணம் எப்பொழுது அனைவரின் ஆழ்மனதில் வருகிறதோ அப்பொழுதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இளவரசன்

You might also like