குடியரசுத் தலைவர் தேர்தல்: மட்டம் போட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்?

மாநிலங்களில் அரங்கேறிய சுவாரஸ்ய காட்சிகள்.

‘’தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும்’’ என தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்.

வாக்காளர்களும் வேலையை விட்டு விட்டு, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்படி ஒரு வேண்டுகோளை தேர்தல் ஆணையம் வைக்கவில்லை.

அதனால் தானோ என்னவோ, குடியரசுத் தலைவர் தேர்தலில் 8 எம்.பி.க்களும், 34 எம்.எல்,ஏ.க்களும் ஓட்டுப்போட வரவில்லை.

கட்சி மாறி வாக்குப்பதிவு, வேண்டுமென்றே தேர்தல் புறக்கணிப்பு என மாநிலங்களில் பல்வேறு கூத்துக்கள் அரங்கேறின.

சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் பார்க்கலாம்.

மட்டம் போட்ட மக்கள் பிரதிநிதிகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் எண்ணிக்கை – 4796.
எம்.பி.க்கள் – 771 பேர்
எம்.எல்.ஏ.க்கள் – 4025 பேர்
இந்தத் தேர்தலில் 99.1 % வாக்குகள் பதிவாகின.

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அனைத்து எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.

நாடு முழுவதுமாக 8 எம்.பி.க்களும், 34 எம்.எல்.ஏ,.க்களும் ஓட்டுப்போடவில்லை.

பாஜக எம்.பி.க்கள் சன்னி தியோல், சஞ்சய் தோத்ரே, பகுஜன் சமாஜ் எம்.பி. அதுல் சிங், சிவசேனா எம்.பி. கஜநான் கிர்திகர் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் அடங்குவர்.

சன்னி தியோல், சிறையில் இருக்கிறார். சஞ்சய் தோத்ரே, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இப்படி எம்.பி.க்கள் பலர் ஓட்டுப்பதிவு செய்யாததற்கு ஒவ்வொரு காரணம் உள்ளது.

கட்சி மாறி குவிந்த வாக்குகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னாருக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என அரசியல் கட்சிகளின் கொறடா உத்தரவு போட முடியாது.

இதனால் சகட்டு மேனிக்கு பலர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.

பெரும்பாலும் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவாக, இந்த ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

அசாமில் மட்டும் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல்.

ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ.முகம்மது, முர்முவுக்கு ஓட்டளித்ததை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

‘’முர்மு ஒடிசாவின் குழந்தை.. அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்பது எங்களுக்குப் பெருமை .. எனவே முர்முவுக்கு ஓட்டு போட்டேன். கட்சி விளக்கம் கேட்டால் பதில் சொல்லத் தயார்’’ என்று கூறியுள்ளார் முகம்மது.

பஞ்சாபில் சிரோமணி அகாலிதள எம்.எல்.ஏ.  மன் பிரித் சிங் தேர்தலை புறக்கணித்து விட்டார். அவரது கட்சி முர்முவுக்கு ஆதரவு அளித்திருந்தது. ஆனால், இதற்கு மன்பரீத் சிங் ஒப்புக்கொள்ளவில்லை.

’’முர்முவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து என்னிடம் கேட்கவில்லை. எனவே தொகுதி மக்கள் விருப்பத்தின் பேரில். யாருக்கும் வாக்களிக்கவில்லை’’ என்று கூறியுள்ளார் மன்பிரீத் சிங்.

பாஜக தந்திரம்

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை ஆதரித்தது  சமாஜ்வாதி கட்சி.

சின்கா, பாஜகவில் இருந்தபோது சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கை  பாகிஸ்தான் உளவாளி என விமர்சனம் செய்திருந்தார்.

அதனை இப்போது வலைத்தளங்களில் பரப்பியது பாஜக. பாஜக நினைத்தது போலவே சமாஜ்வாதி கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்தத் தேர்தலில் முலாயம் சிங் தம்பி சிவபால் சிங் யாதவ், முர்முவுக்கு வாக்களித்துள்ளார்.

‘’முலாயம் சிங்கை ஐ.எஸ். உளவாளி என சொன்னவருக்கு உண்மையான சமாஜ்வாதி தொண்டன் எப்படி ஓட்டுப்போடுவான்?’’ என சிவபால் சிங் கேள்வி எழுப்பினார்.

கட்சி மாறி ஓட்டு, புறக்கணிப்பு என நடந்து முடிந்துள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

-பி.எம்.எம்

You might also like