வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி

மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல.

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த முனைந்தவர் பிரேசிலின் சிறந்த கல்வியாளர் பாலோ ஃப்ரையிரே.

அவர் விரும்பிய கல்வி முறை பிரேசிலுக்கு மட்டுமானது அல்ல. பொதுவாக உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளுக்கு உகந்த முறையாகவே பார்க்கலாம்.

உரையாடலும் கருத்துச் சுதந்திரமும் நிரம்பிய வகுப்பறைச் சூழலையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதை நிகழ்கால வகுப்பறைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இதையே ‘மெளனக் கலாச்சாரத்தை’ (Culture of Silence) உடைக்கும் வகுப்பறை வேண்டும் என்கிறாரோ ஃப்ரையிரே.

நமது கல்வி முறையை வங்கிமுறைக் கல்வி என்கிறார். வெறும் தகவல்களைத் தந்து குழந்தைகளின் மூளை செல்களை நிரப்பும் வழக்கமாகவே நமது வகுப்பறைகள் இயங்குகின்றன.

ஒரு வழிப்பாதையாக ஆசிரியர்கள் மட்டும் பேசுவதாகவும், மாணவர்கள் அதைக் கேட்கும் ஒரு கருவியாகவும்தான் செயல்பட்டு வருகின்ற கல்விமுறையை நாம் பின்பற்றுகிறோம்.

அவர் கூறி அரை நூற்றாண்டு ஆனபிறகும்கூட நம் பள்ளிகளில் இந்த மெளனக் கலாச்சாரத்தை உடைக்கும் வகுப்பறைகள் எந்தளவிற்கு செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளன என்பது ஆய்வுக்குட்பட்டது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் நமது வகுப்பறைகள் புதிய பொலிவு பெற்றிருக்கும். குழந்தைகள் தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்றிருப்பர்.

பிரச்சனைகளை வெளிப்படுத்தும் இயல்பும் தீர்வுகளைக் குறித்த சிந்தனையும் பெற்று மனம் வலுப்பெற்றவர்களாக வளர்ந்து நிற்பர்.

ஆனால் நமது வகுப்பறைகள் குழந்தைகளுக்கு சலிப்பும் வேதனையும் தரும் இயல்பைப் பெற்றிருப்பதாகவே தொடர்கிறது.

பாடச் சுமையும் விரும்பாத தகவல் மூட்டைகளும் அவர்களுக்கு மன அழுத்தத்தையும் கல்வியின்மீதே வெறுப்பு மனநிலையையும்தான் வளர்க்கின்றன.

பிரச்சனைகளை அணுகும் திறன்களை வளர்க்கும் விதமாக செயல்படும் கல்விமுறையை நமது வகுப்பறைகள் தராததாலேயே அனிதாக்களும், லாவண்யாக்களும், ஸ்ரீமதிகளும் உருவாகின்றனர்.

மாணவர்களிடையே ஒடுக்குமுறைக்கு எதிரான அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் மனநிலையை உருவாக்கத் தவறுகிறது இந்த மெளனக் கலாச்சாரம் பெற்ற வகுப்பறைகள்.

அவற்றின் நீட்சியாகவே சமூகத்துக்கான மனிதர்களின் உற்பத்தி குறைகிறது மேலும் அற்றுப்போகிறது. சுயநலமான போக்கும் கல்விபெற்ற மனிதர்களிடம் மலிந்து காணப்படுகிறது.

அமைதியாக அமர்ந்து கைகட்டி, வாய்பொத்தி ஆசிரியர் கூறுவதைக் கேட்க வேண்டும், சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்பதே தற்போதைய வகுப்பறைகளின் எதார்த்தம்.

எத்தனையோ மாற்றங்கள் அனைத்துத் துறைகளிலும் வந்தாலும் கல்வித் துறையில் மட்டும் இன்னும் பிற்போக்குச் சிந்தனையை வேருடன் அகற்ற முடிவதில்லை.

மெளனக் கலாச்சாரத்திற்கே மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

ஒரு குழந்தை வகுப்பறையில் தனது மெளனத்தைக் களைத்தால், கேள்விகள் கேட்டால் அதை ஆசிரியர்கள், கல்விக்கு இழைக்கப்படும் அநீதியாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டும்.

மாணவர்களின் கருத்துச் சுதந்திரம் என்று பார்க்காமல் தங்களை எதிர்த்துப் பேசுவதாகவே கவனிக்கப்படுகிறது என்றால், ஆசிரியர் – மாணவர் உறவு என்ற ஒரு அழகான தருணம் மலராமலேயே கருகிவிடுகிறது.

அதன் தொடர் விளைவுகளாக, கற்றலில் தேக்கம் முதல் நடத்தைமாற்றங்களில் நெறிபிறழ்வுகள் என மாணவர்கள் இழக்கும் உரிமைகள் ஏராளம். அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கையின் விதைகளும் பட்டுப்போய்விடுகின்றன.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சுதந்திரமாக சுற்றித் திரிந்த நிறைய பேசிய, சிந்தனை செய்த ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே மெளனக் கலாசசாரத்திற்குள் நுழைந்துவிடப் பழக்கப்படுத்தப்படுகிறது.

பிறகு அதுவே பள்ளி வாழ்க்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதை எப்போது மாற்றப்போகிறோம்?

பள்ளிக் கல்வியாக இருந்தாலும் உயர்கல்வியாக இருந்தாலும் இந்தக் கலாச்சாரத்தை மீறும் குழந்தைகளை வரவேற்க மறுக்கின்றன கல்வி நிறுவனங்கள். இந்த அணுகுமுறை மிகவும் ஆபத்தானது.

சமூகப் பிரச்சனைகள் உருவாகுவதற்கும் சீரழிவிற்கும் இந்தக் கல்வி முறையின் வகுப்பறை மெளனக் கலாச்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

சமூகத்தை அறிமுகப்படுத்தும் உரையாடல்கள் வகுப்பறைக் கற்பித்தலில் இடம்பெற்றால் மட்டுமே இந்த மெளனக் கலாச்சாரத்தை உடைக்கமுடியும்.

(தொடரும்…)

You might also like