தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்!

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அரசியல் ரீதியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் கவனத்தை ஈா்த்துள்ள நிலையிலும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் இன்று தொடங்கியது.

கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளையில், அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரிடம் கோரியுள்ளன.

அக்னிபத் விவகாரம் மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் பண்டிட்டுகள், சிறுபான்மையினா், வெளிமாநிலத்தவா் உள்ளிட்டோர் குறிவைத்துத் தாக்கப்படுதல், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவோரின் வீடுகள் இடிக்கப்படுவது,

பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வரலாற்று வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து வெளியேறுவது, கிழக்கு லடாக் எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மழைக்கால கூட்டத்தொடரின்போது எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே கூட்டத்தொடரின்போது பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

முக்கியமாக, தொழிற்போட்டி சட்டம்-2002, திவால் சட்டம்-2016 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றுக்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like