இரவின் நிழல் – அசுரத்தனமான உழைப்பின் சாட்சி!

சிங்கிள் ஷாட் பிலிம் என்ற வார்த்தை திரையுலகுக்குப் புதிதல்ல. உண்மையைச் சொன்னால், ஹாலிவுட்டில் ஹிட்ச்காக் காலத்திலேயே அதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது.

அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு பல படங்கள் உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்..

பெரும் எண்ணிக்கையில் நடிகர் நடிகைகள், பிரமாண்டமான செட்கள், ஆச்சர்யப்பட வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள், மயிர்க்கூச்செறியச் செய்யும் கேமிரா நகர்வுகள் அப்படங்களில் இடம்பெறும்போது, அந்த முயற்சிக்குப் பின்னிருக்கும் உழைப்பு வாயைப் பிளக்க வைக்கும்.

அப்படியொரு படைப்பாக அமைந்திருக்கிறது பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இரவின் நிழல்’.

அருவெருப்பில் தோய்ந்த கதை!

பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுவன் மெல்ல போதைப்பொருள் விற்பவனாக மாறி, பீரோ புல்லிங் திருடனாக உருமாறி, பின்னர் சாராயம் காய்ச்சுபவனாக மாறுகிறான்.

பருவ வயதில் பித்துப் பிடிக்க வைத்த காதல், பணத்தின் முன்னால் தோற்றுப் போகச் செய்ய, பெண்கள் என்றாலே போகப்பொருள் என்று எண்ணத் தொடங்குகிறான்.

அந்த நேரத்தில், தேவதையாக அவன் வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள். அதுவரை அவன் வாழ்ந்த வாழ்வையே தலைகீழாக மாற்றுகிறாள்.

அந்த பெண்ணை மனைவியாக்கி அழகான ஒரு இல்லற வாழ்க்கைக்கு அச்சாரமிடும் நேரத்தில் கந்துவட்டிக் கடன் அவளது உயிரைப் பறிக்கிறது.

அதன்பின், தன்னை அமைதிப்படுத்த அவன் எடுக்கும் முயற்சிகளில் போலிச்சாமியார் ஒருவனை நாடியோடுவதும் ஒன்றாகிறது.

அந்த கணம் முதல் அவனது வாழ்வில் பணம் நீராக இறைந்தோடுகிறது. அதோடு, அவனது பாவக் கணக்கும் எகிறுகிறது.

திடீரென்று திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறக்கும்வரை அது தொடர்கிறது. அந்தக் கணத்தில் அம்மனிதனின் பாவக்கணக்கு மேற்கொண்டு நகராமல் நின்றுவிட, அதன்பின் அவனது வாழ்வு என்னவாகிறது என்பதைச் சொல்கிறது ‘இரவின் நிழல்’.

சாதாரண ரசிகர்கள் கேட்கக் கூசும் வசனங்கள், பார்க்கச் சகிக்காத காட்சியமைப்புகள் இதில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

அதனாலேயே, மொத்தக் கதையும் அருவெருப்பில் தோய்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. அதைப் பொருட்படுத்தவில்லை எனில், பார்த்திபனின் இம்முயற்சி நம்மை ஒவ்வொரு கணத்திலும் ஆச்சர்யப்படுத்தும்.

என்ன ஒரு ‘திட’ முயற்சி!

ஒரு ஆச்சர்யத்தை அப்படியே உணரச் செய்வது ஒரு கலை. இல்லாவிடில், அந்த ஆச்சர்யம் ‘அச்’ என்று அமுங்கியும் போகும்.

கடந்த கால அனுபவங்கள் தந்த பாடத்தில், ’இரவின் நிழல்’ அந்த வரிசையில் சேர்ந்துவிடக் கூடாது என்று தீவிரமாக உழைத்திருக்கிறார் பார்த்திபன்.

இப்படம் உருவாக்கப்பட்டது எப்படி என்பதையும், சிங்கிள் ஷாட்டில் எடுக்க எத்தனை ‘டேக்’குகள் எடுக்கப்பட்டன என்பதையும் அவர் விளக்கிச் சொல்வது முதல் பாதியாக அமைக்கப்பட்டிருப்பது நல்ல உத்தி.

காரணம், ‘மேக்கிங்’ பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் 100% ரசிகர்கள் மனதில் பெருகுகிறது.

அந்த எதிர்பார்ப்பு பொய்க்காதவாறு மிகநேர்த்தியாக முழுப்படத்தையும் உருவாக்கியிருக்கிறது பார்த்திபன் அண்ட் டீம்.

பார்த்திபன் தொடங்கி ரோபோ சங்கர், வரலட்சுமி, சினேகா, சாய் பிரியங்கா ரூத், அனந்தகிருஷ்ணன், சந்துரு, ‘மின்னலே’ டேனி உட்பட பலர் நடித்தாலும் நம் மனதைக் கவர்வது சிலக்கம்மாவாக வரும் பிரிகிடா சாகா தான்.

‘மாயவா தூயவா’ பாடல் ஆரம்பித்தவுடன் நம் மனதில் படியும் அவரது பிம்பம் படம் முடிந்தபின்னும் மறைவதில்லை.

பார்த்திபனின் குழந்தையாக நடித்த சிறுமி உட்பட அனைவருமே மிகப்பிரமாதமான ஒத்துழைப்பைத் தந்துள்ளதால் மட்டுமே இப்படியொரு முயற்சி சாத்தியம் என்பதை எவராலும் உறுதிபடச் சொல்ல முடியும்.

அதனால், ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாராட்ட வேண்டிய அவசியமில்லை. மேக்கிங் பகுதியே இது ஒரு ’திடமான முயற்சி’ என்பதை உணர்த்திவிடுகிறது.

பயன்படுத்தலின் உச்சம்!

24 டேக்குகள், 90 நாட்கள் ஒத்திகை. அது மட்டுமல்லாமல் செட் மற்றும் காஸ்ட்யூம் வடிவமைப்புக்கான திட்டமிடல்.

இடைவிடாமல் படம்பிடிப்பதற்கேற்ற திரைக்கதை, தொய்வின்றி கேமிரா நகர்வதற்கேற்ற சாதனங்கள், உத்திகள் என்று பல அம்சங்கள் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் பொதிந்திருக்கின்றன.

விஜய் முருகனின் கலை வடிவமைப்பு அவற்றில் முதலிடம் பெறுகிறது. படப்பிடிப்பின் போதும் அதற்கு முன்னரும் அக்குழுவினர் அபாரமாக உழைத்திருப்பது கண்கூடு.

அதையும் மீறி, திரையில் செட்கள் யதார்த்தமில்லாதது போலத் தோன்றுவதற்கும், பிரமாண்டம் இல்லையோ என்ற எண்ணுவதற்கும் ஒரேயொரு காரணமாக ‘பட்ஜெட்’ மட்டுமே இருக்க வேண்டும்.

ஆர்தர் கே.வில்சனின் ஒளிப்பதிவு பல காலகட்டங்களை, பருவங்களை, மனித உணர்வுகளை, முன்பின்னாக நகரும் கதையிலுள்ள முரண்களை இனிதே பிரதிபலிக்கிறது. அதேபோல ஒலி வடிவமைப்பும் நம்மை அசத்துகிறது.

முழுக்க முழுக்க எழுத்திலும் ஆக்கத்திலும் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருப்பதால், இப்படத்திற்குத் தனியாக ஒரு படத்தொகுப்பாளர் தேவைப்படவில்லை.

ஒருவேளை தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், இக்கதையில் எந்த ஷாட்கள், காட்சிகள் இன்னும் தேவை? எவையெல்லாம் தேவையில்லை என்பதை இன்னும் ‘செம்மை’யாக வரையறுத்திருப்பார்.

அவ்வாறு செய்யாத காரணத்தால் ரோபோ சங்கர் நடித்த ‘பரமானந்தா’ பாத்திரத்தின் தற்போதைய நிலைமையோ, வரலட்சுமி நடித்த ‘ராஜமாதா’ பாத்திரத்தின் தார்மீக கோபங்களோ,

பார்த்திபன் நடித்த ‘நந்து’ பாத்திரம் ஒரு பைனான்சியராக கொடுத்த பணத்தை இழந்து அதிகார வர்க்கத்திடம் இருந்து எத்தகைய இன்னல்களைச் சம்பாதித்து என்பதோ, நந்துவின் பீரோபுல்லிங் குற்றங்களோ விரிவாகச் சொல்லாமல் விடுபட்டிருக்கின்றன.

இதனால், ‘ஒத்த செருப்பு’ தந்த திருப்தியை ‘இரவின் நிழல்’ கதை நமக்குத் தரவில்லை என்பதே உண்மை.

சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியான ‘1917’ திரைப்படம் ரசிகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட செட்கள் மற்றும் அவற்றை முன்னிலைப்படுத்தும் அபாரமான கேமிரா நகர்வுகள்.

இதில் அப்படியொரு பிரமிப்பை ஏற்படுத்த தவறியிருக்கிறார் பார்த்திபன். நீண்ட நெடிய ஷாட்கள், அதற்கேற்ற செட்கள் எனும்போது அதன் தாக்கம் இன்னும் ஆழமாக இருந்திருக்கக்கூடும்.

அதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பவர்களுக்கு, எதிர்மறை அம்சங்களைக் கொண்ட கதையாக இருந்தாலும் பரவாயில்லை என்பவர்களுக்கு,

மிகமிக வித்தியாசமான முயற்சிகளைக் கொண்டாட வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு ‘இரவின் நிழல்’ கண்டிப்பாக பிடிக்கும்.

கூடவே, ‘பாபம் செய்யாதிரு மனமே’ என்று அறத்தைப் போதிக்கும் ஒரு காட்சியையும் நம் மனதில் ஒட்டச் செய்யும்.

மனம் மயக்கும் ரஹ்மானிசம்!

‘பேஜாரா உய் உய்..’ போன்ற ஒரு பாடலை எப்படி ஒரே ஷாட்டில் எடுக்க முடியும் என்பதற்கும் ‘மேக்கிங்’கில் பாபா பாஸ்கரை காட்டி பதில் தந்திருக்கிறார் பார்த்திபன்.

‘மாயவா தூயவா’ பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், நம் மனதில் காதல் ததும்பும். ’காயம்’, ‘கண்ணெதிரே’ பாடல்களும் கூட காட்சியோடு இறுக ஒட்டிக்கொள்கின்றன.

இதனால், காட்சிகளில் இருக்கும் அருவெருக்கத்தக்க அம்சங்களையும் மீறி மனதில் ஒரு சாந்தத்தை குடி வைக்கிறது ரஹ்மானின் இசை.

உண்மையைச் சொன்னால், ’இரவின் நிழல்’ மீது உலகின் கவனம் விழக் காரணமும் அவர்தான். அதற்கேற்றவாறு அவரது பின்னணி இசையும் அமைந்திருக்கிறது.

ஒரு சாதாரண ரசிகனுக்கு இந்த படம் எத்தகையை உணர்வெழுச்சியைத் தரும் என்பதைத் தாண்டி, திரையுலகில் இந்த படம் இன்னும் எத்தனையெத்தனை ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் என்ற கேள்விக்குப் பதில் தேடுவது கடினம்.

ஏனென்றால், ஏற்கனவே இருந்த ஜாம்பவான்கள் பலரை பொறாமையில் ஆழ்த்துவதோடு இனி வரும் படைப்பாளிகள் நம்பிக்கை கொள்ளும் விதமாக ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.

‘ஒத்த செருப்பு’ போலவே, ‘இரவின் நிழல்’ கூட ஆங்கிலத்தில் உருவாக்கப்படலாம்.

அப்போது, இன்னும் பல மடங்கு நாம் பார்த்திபனை சிலாகிக்க நேரிடலாம். இது மட்டுமே, இப்படைப்புக்கான பாராட்டாக நம் கண் முன்னே தென்படுகிறது!

-உதய் பாடகலிங்கம்

You might also like