தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள்!

2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வழியில் வெளியிட்டார்.

அதில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு (Indian institute of science) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதில், பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.

இதனிடையே, தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தரவரிசைப் பட்டியல் 2022-இல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்றும்,

உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம், அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும்,

இச்சாதனைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like