மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா.
முதலில் கொரோனா உருவானதாகச் சொல்லப்பட்ட சீனாவிலும், இதர உலக நாடுகளிலும் மறுபடியும் பரவத்தொடங்கியிருக்கிறது கொரோனா.
பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கின்றன பல நாடுகள். இந்தியாவிலும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது கொரோனா.
டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
‘மாஸ்க்’ அணிவதைக் கட்டாயப்படுத்தியும் மக்கள் அதில் அதிகம் கவனம் செலுத்துகிற மாதிரித் தெரியவில்லை. அவ்வளவு அலட்சியமாக இருக்கிறது பொதுவெளி.
தமிழகத்தைப் பொருத்தவரை பல கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பரவலாகப் பரிசோதனைகள் நடக்காவிட்டாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்பட்டிருப்பது நிலைமையின் தீவிரத்தை வெளிக்காட்டுகிறது.
கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தால், பாதிக்கப்பட்டவர்களின் அசலான எண்ணிக்கை தெரிய வரலாம்.
உடல்ரீதியாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை அனுசரித்து பலரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை அதிகப்பட்டிருக்கிறது.
கொரோனாவால் சீர்குலையும் பொருளாதாரம் பற்றித் தான்.
ஏற்கனவே பரவிய கொரோனாவினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ நான்கு கோடிக்கும் அதிகமானவர்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சென்ற ஆண்டு மட்டும் 84 % வீடுகளில் வருமானம் குறைந்திருக்கிறது. பெண்கள் முதற்கொண்டு பலர் வேலையை இழந்ததால் 2020-ம் ஆண்டில் மட்டும் 59.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதெல்லாம் ஆக்ஸ்காம் இந்தியா என்கிற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்கள்.
கொரோனாவினால் பலர் வேலைகளை இழந்து, வருமானத்தை இழந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமா வருமானத்தை இழந்திருக்கிறார்கள்?
அது தான் இல்லை.
2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 லிருந்து 143 ஆக உயர்ந்திருக்கிறது. இங்குள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சென்ற ஆண்டில் மட்டும் 57.3 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள 142 பெரும் கோடீஸ்வரர்களிடம் மட்டும் 71,900 கோடி டாலர் அளவுக்குச் சொத்து இருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் உள்ள 55 கோடி மக்களிடம் உள்ள சொத்து மதிப்பு 65,700 கோடி டாலர் தான்.
பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கொரோனாக் காலகட்டத்திலும் இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்றால், கொரோனாவின் பாதிப்பு கூட இங்கு யாருக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது?
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தானே!
இனி மறுபடியும் பரவ ஆரம்பித்திருக்கிற கொரோனா என்ன செய்யும்? வருமானத்திற்குத் திண்டாடிக் கொண்டிருக்கிறவர்களை மேலும் தடுமாற வைத்துப் பொருளாதாரத்தில் மேலும் சரிய வைக்கும்.
அதே சமயம் பெரும் பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக்கும். இந்திய அரசும் அவர்கள் மீது கருணை கொண்டு அவர்கள் வங்கிகளில் வாங்கிய பெரும் எண்ணிக்கையிலான கடன்களைத் தள்ளுபடி செய்யும்.
சாதாரண மக்களை இன்னும் அழுத்தும் விதத்தில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி அதற்கு வியாக்கியானமும் அளிக்கும்.
இந்தியாவைப் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு வந்தால் கூட, அது யாருக்குச் சாதகமாக இருக்கிறது? யாருக்குப் பாதகமாக இருக்கிறது?
– யூகி