ஆடம்பர வாழ்வில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இந்த நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 12-ம் தேதி தேசிய எளிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்க்கையில் அடிப்படை தேவை என்ன என்பதை உணர்த்துகிறது இந்நாள்.
இயற்கையின் வழியில் வாழ்ந்து காட்டிய ஹென்றி டேவிட் தூரோ என்பவரின் பிறந்த நாளான்று அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய எளிமை தினம் கொண்டாடப்படுகிறது.
யார் இந்த ஹென்றி டேவிட் தூரோ:
எளிமையான முறையில் தனது வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். பரபரப்பான இயந்திர வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர்.
இயற்கை சூழ்நிலையில் தனது வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர் ஹென்றி டேவிட் தூரோ.
இவர் 1817-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் உள்ள கான்கார்ட்டில் பிறந்தார்.
பன்முகம் கொண்ட அவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தத்துவவாதி, இயற்கைவாதி, கவிஞர், வரலாற்றாசிரியர், சர்வேயர் மற்றும் ஒரு ஆழ்நிலை நிபுணர் என பல திறமைகளை தனக்குள் கொண்டவர்.
‘வால்டன்’ புத்தகத்திற்கு பெயர் பெற்ற இவர் 1845 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு புகழ்பெற்ற வால்டன் குளத்தில் தங்கி அதன் விளைவாக உருவானதாக கூறுகின்றனர்.
நவீன வாழ்க்கை முறை, தொழில்நுட்பங்கள் இல்லாமல் மனிதர்களால் காடுகளில் இயற்கையோடு இயற்கையாக வாழ முடியும் என்று ஆசிரியரின் பரிசோதனை நிரூபிக்க தனியாக காடுகளில் வாழ்ந்து காட்டியவர்.
அவர் தனிமையில் வாழ்ந்த அனுபவங்களை புத்தகமாகவும் வெளியிட்டார்.
அவரது எளிமையை பாராட்டும் விதமாக தேசிய எளிமை நாள் கொண்டாப்படுகிறது.
நாகரீகம் என்ற பெயரில் அடிப்படை தேவை என்ன என்பதை மறந்து ஆசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வது நமது கையில்தான் உள்ளது. ஆசை என்பது தீராதா ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் எது தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இது நம்ம வீட்டில் இல்லை என்றால் அடுத்தவர் என்ன நினைப்பார். அவரது தகுதிக்கு இந்த பொருளை எப்படி பரிசளிப்பது.
அவங்க வீட்டுக்கு போனா இப்படித்தான் போக வேண்டும். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அது வைத்துள்ளனர், இது வைத்திருக்கின்றனர், இப்படி இருந்தால் எப்படி மதிப்பார்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
தேவைக்காக ஓய்வு இல்லாமல் ஓடி ஓடி… ஆரோக்கியத்தை இழந்து, மன ரீதியாக நிம்மதியை தொலைத்து ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல், கடைசியில் ஆடம்பரத்துக்கு அடிமையாகி நாம் கடனாளியாக மாறியபின் தான் தெரியும் நமக்கு நாம் வாழவில்லை என்பது.
மகிழ்ச்சி என்பது நாம் சேர்க்கும் பொருட்களில் இல்லை என்பதை உணர வேண்டும். அடுத்தவர் என்ன நினைப்பார் என்று வாழத் தொடங்கினால் நமக்கான வாழ்க்கை என்ன என்பதை நாம் மறந்து விடுவோம்.
நமது பொருளாதாரம் என்ன என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். அதற்குள் வாழ பழக வேண்டும்.
ஆடம்பரம், நவீனம் என்ற போர்வையில் நமது வாழ்க்கையை துளைத்து விடக்கூடாது. எளிமையான வாழ்க்கை பல பிரச்சனைகளை தவிர்க்கும்.
போட்டிக்கு வாழாமல் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.
எளிமையான வாழ்க்கை முறையில் சந்தோஷம், நிம்மதி, நிறைவான பெருமை அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசைகளை தவிர்த்து தேவைக்காக வாழ்ந்தாலே எளிமையான வாழ்க்கை என்பது சொர்க்கமே…
– யாழினி சோமு