நான் கடிதம் எழுதுவது உங்களுக்கு மட்டும்தான்!

இசையமைப்பாளர் இளையராஜா எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதம்

தமிழ்த் திரையிசை உலகின் உச்சத்தைத் தொட்ட இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜா அவர்களுக்கு, இதுவரை உள்ளூர் முதல் சர்தேச நாடுகள் வரை பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.

இப்போது அவரை கௌரவிக்கும் விதமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தருனத்தில் அவரைப் பற்றிய சில சிறப்புப் பதிவுகள்.

சிறப்புப் பதிவு – 1

“நான் கடிதம் எழுதுவது உங்கள் ஒருவருக்கு மட்டும் தான்”- இளையராஜா
“அன்பு கி.ரா அவர்களுக்கு,
கீ என்று எழுதிய பின் தட்டியது சப்தத்தில் வாழும் எனக்கு சப்தத்திற்கு எழுத்துத் தேடும்போது அதை ஒட்டியே வந்துவிடுகிறது. கி.ரா என்று வரமாட்டேன் என்கிறது.

இளமைப் பருவத்திற்கப்புறம் யாருக்கும் கடிதம் எழுதும் அவசியம் எனக்கேற்படவில்லை.

நான் கடிதம் எழுதுவது உங்கள் ஒருவருக்கு மட்டும்தான்.

சினிமா சம்பந்தமான அந்த நிகழ்ச்சியின் தேதி நிச்சயிக்கப்பட்டவுடன் அறிவிக்கவும். கலந்து கொள்ள ஆகுமா? ஆகாதா? என்பதைப் பின்னர் பார்ப்போம். கலந்து கொள்ள விரும்பினாலும் புதுவை வருவதாயிருந்தால் நமது சந்திப்பிற்காகத் தான் வரவேண்டும்.

“துளிக்கடல்”- என்ற சிறிய நூலொன்றும்- என் ஆன்மீக அனுபவங்களையும் எண்ணங்களையும் வெண்பாக்களையும் வெளிப்படுத்தும் நூலொன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வறட்டு இலக்கியவாதிகளிடமிருந்து- உயிருள்ள இலக்கியங்களைக் காப்பாற்றும் ஒர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் – இரண்டையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியை – அவ்வப்போது நினைவுகூர்வேன்.

ஆனந்தவிகடன் தொடர் தீபாவளியோடு முடிகிறது.

“தினமலரில்” ஆன்மீகம் பற்றி எழுதவிருக்கிறேன்.

காலை ஏழு மணிக்கு முன்னரும் மாலை ஒன்பது மணிக்குப் பின்னரும் தொடர்பு கொள்வதாயின் நலம்.

கடிதத்தை விட தொலைபேசி நன்று.

அன்புடன்
இளையராஜா

(புதிய பார்வை, நவம்பர் 1- 2004 இதழிலிருந்து…)

You might also like