– சென்னை மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், “மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்வதை அனுமதிக்கக் கூடாது.
செல்போன் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்க வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் செல்போன் கொண்டு வருவதை தடுத்திடும் வகையில் வகுப்பு ஆசிரியர்களால் வாரத்தில் இருமுறை சுழற்சி அடிப்படையில் சோதனை செய்ய வேண்டும்.
அரசு பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்கும் போதும் படிக்கட்டில் நின்று பயணம் செய்வது, பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை தவிர்த்திடும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் அமர்ந்திருப்பதை தவிர்த்திடும் வகையில் வகுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உணவு, இடைவெளியின் போது மாணவ-மாணவிகள் சுத்தமான, பாதுகாப்பான இடத்தில் தனித் தனியாக அமர்ந்து உணவு உண்ணுவதை உறுதி செய்ய வேண்டும்.
தனியாக வாகனங்களில் வருகை புரியும் மாணவர்களின் பாதுகாப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.
பள்ளி நேரம் முடிவடைந்த பின்பு ஒவ்வொரு வகுப்பறைகளை மூடுவதற்கு முன்பு அறைகளில் எவரும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எவ்வித தகவலும் இல்லாமல் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களது விபரம் குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளில் எவ்வித சமரசத்திற்கும் இடம் அளிக்காமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.