பெண்களுக்கு புதிய பாதை காட்டிய ஏநியூ அமைப்பு!

பிஎஸ்சி பட்டதாரி ஜெயஸ்ரீ கோபிகிருஷ்ணன் எதிர்காலம் பற்றிய கவலையுடன் இருந்தார். ஒருநாள் சூழ்நிலை அமைய ஏநியூ அமைப்புடன் அறிமுகம் கிடைத்தது.

பிறகு அவர்கள் நடத்திய மூன்று மாத அடிப்படைத் தகவல் தொழில்நுட்பப் படிப்பில் சேர்ந்தார். ஜெயஸ்ரீயின் வாழ்க்கை மெல்ல மாறத் தொடங்கியது.

இந்த பயிற்சி வகுப்பில் மொழிப் பயிற்சி, தகவல் தொடர்புப் பயிற்சி, நேர்காணலுக்குத் தயாராகும் பாடங்கள் மற்றும் தொழில் ஆலோசனையும் கிடைத்தது.

முதல் தலைமுறை பட்டதாரியான அவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் பிபிஓ வேலை கிடைத்தது. இன்று காக்னிசென்ட் நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் பணியாற்றிவருகிறார்.

வீடு வீடாகச் சென்றும் விளம்பரம் செய்துவந்த யாமின் பானுவின் வாழ்க்கையை ஏநியூ அமைப்பின் ஹோம் நர்சிங் திட்டம் மாற்றியது.

படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, 15 வயதில் திருமணம் செய்தார். அதனால் பல வாய்ப்புகளை இழந்தார்.

2009 ஆம் ஆண்டு எல்லாமும் மாறியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நல்ல வேலை கிடைத்தது. இன்று யாமின் பானு சொந்தக் காலில் நிற்கிறார்.

சம்பாதிக்கும் பணத்தில் தன் செல்லக் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார்.

ஏநியூ என அழைக்கப்படும் பெண்களின் பாரம்பரியமற்ற வேலைவாய்ப்புக்கான சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை விதைத்துள்ளது. நர்சிங், கார், ஆட்டோ டிரைவிங் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சிகளைப் பெண்களுக்கு வழங்குகிறது.

ஒரு ரூபாய்கூட பெண்கள் செலவழிக்காமல், தங்களது சொந்த வேலைவாய்ப்புப் பிரிவு மூலம் அவர்களுக்கு வேலை கிடைப்பதை ஏநியூ அமைப்பு உறுதி செய்கிறது.

“சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவில் தொடங்கினோம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு பிளம்பிங், எலக்ட்ரீஷியன் மற்றும் தச்சு பயிற்சிகள் வழங்கினோம்.

பின்னர் நர்சிங் பயிற்சிகள். ஏனெனில், அப்போது செவிலியர்கள் பெரும்பாலும் கேரளாவில் இருந்து வந்தார்கள்.

பிறகு, ஓட்டுநர் மற்றும் கணினிப் படிப்புகளை அறிமுகம் செய்தோம். அடுத்து வேறு பல படிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்தோம்” என்றாா் அதன் தலைவர் வினோதினி சுதீந்திரன்.

கணினி படிப்புகளில் ​​டிடிபி மற்றும் பப்ளிஷிங் ஆகியவை மட்டுமே கற்பிக்கப்பட்டன. இன்று அது அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

இவர்களிடம் ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வில் ஏநியூ அமைப்பு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா. மகிழ்மதி

You might also like