அக்னிபாதைத் திட்டத்தின்கீழ் 17 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் முப்படைக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா்.
இதில் 25 சதவீதம் போ் ஒப்பந்த காலம் முடிந்து மேற்கொண்டு 15 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணிபுரிய இத்திட்டம் வழிவகை செய்கிறது.
75 சதவீதத்தினா் ஒப்பந்த காலம் நிறைவடைந்து வேலைவாய்ப்பற்ற சூழலை எதிர்கொள்வதால், இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான விடுமுறை கால அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்களின் வழக்கறிஞா்கள் ஆஜராகி, “இந்தத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக் கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அக்னிபாதைத் திட்டத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டனர்.
வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், “கோடை விடுமுறை நிறைவடைந்ததும் அடுத்த வாரம் தகுந்த அமா்வு முன்பாக இந்த வழக்கு பட்டியலிடப்படும்” என தெரிவித்தனா்.