வழக்கமான ‘பார்முலா’வை மீறிய இயக்குனர் ஹரி!

’யானை’ – திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிவேக ஆக்‌ஷன் திரைக்கதைகளுக்காகவே அறியப்படுபவர் இயக்குனர் ஹரி.

அதேநேரத்தில், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு வட்டார மொழி, சாதீய வழக்கங்கள், பாசப் போராட்டம், சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் தினசரிப் பிரச்சனைகளும் அவரது படங்களில் நிறைந்திருக்கும்.

விஜய் மற்றும் அஜித் இருவரையும் வைத்து படமெடுக்காமலேயே ’மாஸ்’ ஹீரோக்களுக்கான இயக்குனராக அறியப்படுவது ஹரியின் தனித்துவமான வெற்றிக்குச் சான்று.

அப்படிப்பட்டவர் தனது மனைவியின் சகோதரர் அருண் விஜய்யோடு முதன்முறையாகக் கைகோர்க்கிறார் என்றால் எத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும்? அதனைப் பூர்த்தி செய்திருக்கிறதா ‘யானை’?

சரியாகத் தைக்கப்பட்ட சட்டை!

ராமநாதபுர வட்டாரத்தில் இறால் ஏற்றுமதி தொழில் உட்பட பல்வேறு வியாபாரத்தில் முத்திரை பதித்து வருபவர் பிஆர்வி (ராஜேஷ்).

அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு ராமச்சந்திரன் (சமுத்திரக்கனி) உட்பட மூன்று (போஸ் வெங்கட், சஞ்சீவ்) மகன்கள்.

இரண்டாவது மனைவிக்கு (ராதிகா) ரவி (அருண் விஜய்) என்றொரு மகன்.

ராமச்சந்திரனும் மற்ற இரு சகோதரர்களும் இறால் வியாபாரத்தில் கண்ணும்கருத்துமாக இருக்க, பேருந்து போக்குவரத்து நிறுவனத்தைக் கவனித்துக் கொள்கிறார் ரவி.

அது மட்டுமல்லாமல் ஊர் பஞ்சாயத்து, அடிதடி என்று ‘நாட்டாமை’யாக வலம் வருகிறார். தனது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் நலனே முக்கியம் என்று நினைத்துச் செயல்படுகிறார்.

ஒருகாலத்தில் பிஆர்வியின் நெருக்கமான தொழில்முறை நண்பராக இருந்த சமுத்திரம் (ஜெயபாலன்), தன் மகன் பாண்டியின் மறைவுக்குப் பிறகு விரோதியாக மாறுகிறார்.

காரணம், சாதிரீதியிலான மோதலின் அடிப்படையில் ராமச்சந்திரனே பாண்டியின் மரணத்திற்குக் காரணமாகிறார்.

இதனால், பிஆர்வி குடும்பத்தைப் பழி வாங்கும் உக்கிரத்தில் இருக்கிறார் சமுத்திரத்தின் இன்னொரு மகனான லிங்கம் (ராமச்சந்திர ராஜு).

லிங்கத்தை மட்டுமல்லாமல், மாற்றாந்தாய் வயிற்றில் பிறந்த சகோதரரான ரவியையும் எதிரியாகப் பாவிக்கிறார் ராமச்சந்திரன். சாதிவெறி மட்டுமே எப்போதும் அவரது மனதில் தாண்டவமாடுகிறது.

சாதி மற்றும் மதத்தால் வேறுபட்ட ஜெபமலர் (பிரியா பவானிசங்கர்) மீது காதல் கொள்கிறார் ரவி.

அதே நேரத்தில், கல்லூரி செல்லும் ராமச்சந்திரனின் மகளும் (அம்மு அபிராமி) தன்னுடன் படிக்கும் ஒரு முஸ்லிம் வாலிபரைக் காதலிக்கிறார்.

இது ரவிக்குத் தெரிந்தாலும், விஷயம் தனது சகோதரர்களின் காதுகளை எட்டாமல் பார்த்துக்கொண்டால் போதுமென்று இருந்துவிடுகிறார்.

இந்த நிலையில், ஒருநாள் ராமச்சந்திரனின் மகளும் அந்த இளைஞரும் காணாமல் போகின்றனர். அவர்கள் ஓடிச்சென்று கல்யாணம் செய்துகொண்டதாகத் தகவல் கிடைக்கிறது.

அதேநேரத்தில், அவர்களிருவரையும் கொலை செய்ய லிங்கத்தின் கும்பலும் துரத்துகிறது. மகளின் காதல் விவகாரம் ரவிக்குத் தெரியும் என்று ராமச்சந்திரனுக்குத் தெரிய வந்ததும், பிஆர்வி குடும்பத்தில் விரிசல் விழுகிறது.

நடந்த உண்மையை அறிய, சகோதரர் மகளையும் அவரது காதலரையும் தேடும் முயற்சியில் ரவி இறங்குகிறார்.

எதிர்ப்புகளை மீறி காதலர்கள் இருவரையும் ரவி கண்டறிந்தாரா, தன்னைச் சூழும் பகையை வென்றாரா, லிங்கம் பிஆர்வி குடும்பத்தைப் பழி வாங்கினாரா என்று சொல்கிறது ‘யானை’.

‘யானை’யின் கதையை மேலோட்டமாகப் பார்த்தால், ஹரியின் தாமிரபரணி, வேல், பூஜை, கோவில் போன்ற படங்களை மொத்தமாகச் சேர்த்தது போலிருக்கும்.

அதேநேரத்தில், படம் முழுக்க ‘டைட்’டான சட்டையை அருண்விஜய் அணிந்துவருவது போல இக்கதையும் அவருக்குப் பொருத்தமாக இருப்பதையும் பாராட்டத்தான் வேண்டும்.

முக்கியமாக, இரண்டு சண்டைக்காட்சிகள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது அவரது திறமைக்குச் சான்றாக அமைந்திருக்கின்றன.

மீண்டும் ‘ஹரி’!

விக்ரம், சூர்யாவுக்கு முழுக்க முழுக்க ஆக்‌ஷனை மையமாகக் கொண்ட கதைகள் என்றால், இளைய நட்சத்திரங்களான சிம்பு, விஷால், தனுஷ் போன்றவர்களுக்கு குடும்பப் பாசத்தை மையமாகக் கொண்ட கமர்ஷியல் மசாலாவைத் திரைக்கதையாக வடித்தெடுப்பார் இயக்குனர் ஹரி.

இன்னும் அஜித், விஜய் போல மாஸ் ஹீரோ அந்தஸ்தை எட்டாத தன் மைத்துனருக்கு ’யானை’யில் இரண்டாவது ரக கதை சொல்லலைத் தேர்த்ண்டுத்திருக்கிறார்.

வழக்கமாக, தனது கதைகளில் கொஞ்சமாய் ‘சாதீய’த்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஹரியின் வழக்கம்.

குறிப்பிட்ட சாதியினருக்கு ‘ஜே’ சொல்லும் விதமாக இல்லாவிட்டாலும், அச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களை அப்படியே படம்பிடிப்பார்.

இதிலும் அப்படியே.. ராமநாதபுர வட்டாரம், கதை மாந்தர்களின் தொழில் மற்றும் வியாபாரம், குடும்ப பெயர்கள் போன்றவற்றைக் கவனித்தால் இந்த அம்சங்களை அறியலாம்.

ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட சாதியினர், மதத்தினர் கதாபாத்திரங்களாக இடம்பெற்றாலும் மிக மிகக்கவனமாக ‘சமத்துவத்தை’ பேசியிருக்கிறார்.

இந்த அம்சம்தான் ‘யானை’யை வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து நிரம்பவே வித்தியாசப்படுத்துகிறது.

அவர் தனது பார்முலா பாத்திரங்கள், கதையமைப்பில் இருந்து விலகி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அதேநேரத்தில், ‘காதலுக்கு மரியாதை’ டைப்பில் ‘கோவில்’ படத்தைப் போலவே இதிலும் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே காதல் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்றிருக்கிறார். ஆணவக் கொலைகள் தவறு என்று சொல்வதோடு நின்றுகொள்கிறார்.

வில்லனாக வருபவரையும் அவரது குடும்பத்தினரையும் மிக மோசமாகச் சித்தரிக்காமல் தவிர்த்திருப்பது, சாதீய மோதலுக்கு இப்படம் வித்திடுவதைத் தவிர்த்திருக்கிறது.

அதற்கேற்றவாறு, வசனங்களில் இரு தரப்புக்கான மோதலைத் தனிப்பட்ட நபர்களின் மோதலாகவே சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

இதையெல்லாம் மீறி, பெரிதாக வன்முறைக் காட்சிகள் இல்லாமல் இக்கதையைப் படம்பிடித்திருக்கிறார் ஹரி. அதுவே, குடும்பத்துடன் இப்படத்தைப் பார்க்கலாம் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறது.

மறைந்த விவேக், சந்தானம் போல இப்படத்தில் யோகிபாபுவும் புகழும் நம்மை ரொம்பவே சோதிக்கின்றனர். அம்மு அபிராமி ராதிகா மற்றும் அருண்விஜய்யுடன் அவர் இணைந்துவரும் காட்சி மட்டும் விதிவிலக்கு.

மிகச்சில இடங்களில் இமான் அண்ணாச்சி சிரிப்பை வரவழைக்கிறார். அடுத்த முறையாவது, தன் படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் ஹரி.

நல்லதொரு பொழுதுபோக்கு படம்!

ஏற்கனவே பெற்ற ‘கமர்ஷியல் பட வெற்றி’கள் மூலமாக, தானொரு திறமையான நடிகன் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்திவிட்டார் அருண்விஜய். ஆதலால், இதில் அவர் ‘ஸ்லோமோஷனில்’ வரும் காட்சிகள் எரிச்சலை உண்டாக்குவதில்லை.

பிரியா பவானி சங்கருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும், அதீத கவர்ச்சியில்லாமல் மிகச்சாதாரணமாக வந்து நம் மனதில் இடம்பிடிப்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

வில்லனாக வரும் ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, ராஜேஷ், போஸ் வெங்கட், சஞ்சீவ், மூத்த அண்ணியாக வரும் ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, குணச்சித்திர காட்சிகளில் கலக்கும் யோகிபாபு, வ.ஐ.ச. ஜெயபாலன் என்று பலர் இருந்தாலும், ஒட்டுமொத்த திரைக்கதையிலும் தனித்து தெரிவது ராதிகா மட்டுமே.

இரண்டொரு காட்சிகள் வந்தாலும் ‘நான் ஒரு பெண் சிங்கம்’ என்பதை நிரூபித்திருக்கிறார்.

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான தரத்தை திரையில் வெளிப்படுத்துகிறது கோபிநாத்தின் ஒளிப்பதிவு.

அதேபோல, ஒரு கிலோமீட்டர் தூர பயணத்தை ஒருநொடியில் திரையில் காட்டும் வித்தையைச் செய்யாமல் ‘இது வழக்கமான ஹரி படமல்ல’ என்று உணர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.

இந்த ‘பாஸ்ட் பார்வேர்டு’ உத்திக்காகவே ஹரி படத்தைக் கண்டு அலறுபவர்களின் லிஸ்ட் பெரியது என்பதை அவர் உணர்ந்திருப்பது ஆறுதல்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை நம்மை திரையோடு ஒன்றச் செய்தாலும், பாடல்கள் அனைத்தும் கொஞ்சம் வாசல் கதவுகளை நோக்கி பார்வையைத் திருப்பச் செய்கின்றன.

மீண்டும் மீண்டும் கேட்டால் பிடிக்கும் என்ற ரகத்தில் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பது படம் முடியும்போதே பிடிபடுகிறது.

ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் சினிமா இயக்குனர் என்ற அந்தஸ்தை, தனது இரண்டாவது படமான ‘சாமி’யிலேயே நிரூபித்தவர் ஹரி.

கொஞ்சம் ட்ரெண்டில் இருந்து விலகிவிட்டாரோ என்று நினைக்கும் நேரத்தில், ‘யானை’யின் வழியே ‘கம்பேக்’ தந்திருக்கிறார்.

இது அருண் விஜய்க்கு மட்டுமல்ல, அவருக்கும் நிறைய ‘தன்னம்பிக்கை’ தந்திருக்கும்.

இந்த உற்சாகத்தோடு, அடுத்த படத்தை இன்னும் தரமான ‘மசாலா சினிமா’வாக, உங்களது முதல் படமான ‘தமிழ்’ போன்ற ஒரு படைப்பைத் தர வேண்டும் ஹரி.

ஏனென்றால், உங்கள் மீது நீங்கள் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்று அது மட்டுமே!

-உதய்.பா

You might also like