மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வரனார். காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். இதில் ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையை நிரூபித்து ஷிண்டே தனது ஆட்சியை தக்க வைத்தார்.
பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அரசுக்கு ஆதரவாக 164 பேர் வாக்களித்தனர்.
இதனால் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் இருந்தனர்.
இதில் ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 பேர் இருந்தனர். சட்டமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சிவசேனா கட்சியின் மேலும் ஒரு எம்எல்ஏ, ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினார். இதனால் ஷிண்டே அணியின் பலம் 40 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.