– ராக்கெட்ரி தி நம்பி விளைவு விமர்சனம்
கடந்த சில ஆண்டுகளாக, ஏதேனும் ஒரு துறையில் கோலோச்சியவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் அவை விளையாட்டு தொடர்பான படங்களாகவே இருக்கின்றன.
அவற்றில் இருந்து வேறுபட்டு, நம்பி நாராயணன் என்ற இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்கிறது மாதவன் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் ‘ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்.
நம்பி நாராயணன் என்ற பாத்திரத்திலும் மாதவனே நடித்திருக்கிறார். நிச்சயமாக, அவரது திரையுலக வாழ்க்கையில் இது ஒரு அபாரமான முயற்சி. அதனைத் திறம்படச் சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறாரா?
சுமத்தப்பட்ட துரோகம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோவின் திருவனந்தபுரம் பிரிவில் பணியாற்றியவர் நம்பி நாராயணன்.
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் உட்பட விண்கல ஆய்வில் ஈடுபட்ட பல சாதனையாளர்களோடு பழகியவர், சேர்ந்து பணியாற்றியவர்.
அவர்களை விட ஒரு படி அதிகமாகப் புகழ் ஈட்டியிருக்க வேண்டிய நம்பியின் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போட்டது 1994-ல் நடந்த ஒரு சம்பவம்.
மாலத்தீவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கொண்ட தொடர்பால் இஸ்ரோ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று நம்பி நாராயணன் குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வெளியானது.
இடைப்பட்ட காலத்தில் சமூகம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இழைத்த அவமானங்கள், இந்தியாவே கொண்டாட வேண்டிய ஒருவரின் பணியைப் புழுதியில் புரட்டி எடுத்தது என்கிறது ‘ராக்கெட்ரி- தி நம்பி எபெக்ட்’.
நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கேரள போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
அதன்பின், தீர்ப்பு வெளியானபிறகு ஒரு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளிக்கிறார். அப்போது, தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாக கதை விரிகிறது.
இந்திய விண்வெளி ஆய்வில் முதன்மையானவராகக் கருதப்படும் விக்ரம் சாராபாயின் ’செல்ல’ மாணவராக இருந்தது, ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற பேராசிரியரிடம் ஆய்வுப் படிப்புக்காகச் சேர்ந்தது, நாசா அளித்த வேலை வாய்ப்பினை ஏற்க மறுத்தது,
பிரிட்டனில் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளான திரவ எரிபொருள் பயன்பாட்டுச் சாதனங்களை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சித்தது, பிரான்ஸில் எவ்வாறு திரவ எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய இந்தியாவைச் சேர்ந்த 52 விஞ்ஞானிகளுடன் சென்று அங்குள்ள ஆய்வு மையத்தில் பணியாற்றியது,
இறுதியாக சோவியத் ரஷ்யா உடைபடுவதற்கு முன்னதாக அங்கிருந்து கிரையோஜெனிக் என்ஜின்களை வாங்கி தந்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தது என்று நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த ‘நாயகத்தனமான’ சம்பவங்கள் திரைக்கதையில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
முடிவில், இஸ்ரோவில் சாகசக்காரராகவும் சாதனையாளராகவும் அறியப்பட்ட நம்பி ஒரு சர்ச்சையில் சிக்கி வெளியுலகில் பலத்த அவமானங்களுக்கு உள்ளானதையும், அது பொய்க்குற்றச்சாட்டு என்பதை உலகிற்குப் புரிய வைப்பதற்குள் அவரது வாழ்வின் பின்பாதி முழுவதும் செலவானதையும் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
படத்தின் முழுக்கதையையும் காட்சிகளையும் புட்டு புட்டு வைத்தபிறகும், தாராளமாக ‘ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்’டை பார்க்கலாம். காரணம், இயக்குனர் மாதவனின் தேர்ந்த காட்சியாக்கம்.
அபாரமான கூட்டுழைப்பு!
நம்பி நாராயணன் மகன், மகள், மனைவி, மருமகன் பேசுவதாக அமைக்கப்பட்ட காட்சியில் வசனங்கள் மணிரத்னம் படங்களை நினைவூட்டின.
ஆனால், அதற்கடுத்த காட்சிகளிலேயே மெல்ல நகைச்சுவை கலந்த பாணிக்கு தாவிவிடுகிறார் மாதவன்.
திரைக்கதையிலும் கூட, நம்பியின் இளமைக்காலத்தைச் சொல்லும்போது இஸ்ரோ மற்றும் விண்கல ஆய்வு சம்பந்தப்பட்டவற்றை மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தவறிக்கூட குடும்பத்தையோ, அவர் வெளியுலகினரால் எவ்வாறு அறியப்பட்டார் என்பதையோ சொல்லாமல் ‘சேஃப் கேம்’ ஆடியிருக்கிறார்.
இதனால், முக்கால்வாசி திரைக்கதை இந்தியாவையும் இஸ்ரோவையும் உலக அரங்கில் உயர்த்துவதற்காக நம்பி மேற்கொண்ட முயற்சிகளையும் தந்திரங்களையும் யுக்திகளையும் சார்ந்திருப்பது முழுக்க ‘ஹீரோயிச’த்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
அதே நேரத்தில், சக பணியாளர் ஒருவரின் குழந்தை மரணமடைந்ததைச் சொல்லாமல் தவிர்த்து நம்பி வேலை வாங்கியதாக காட்டப்படும் காட்சியில் அவரது குரூரமான ‘முதலாளித்துவ’ மனோபாவத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன்.
இதுவே, மொத்த படத்தின் ஆதாரமாகவும் அமைகிறது. அதனாலேயே, அதே பணியாளர் நம்பியைச் சிறையில் வைத்து பார்க்க வரும் முதல் நபராக நிற்கும்போது ‘அட’ என்று சொல்ல வைக்கிறது திரைக்கதை.
கூடவே, இது ஒரு உண்மைக்கதை என்ற உணர்வு மேலிடும்போது மூளைக்குள் மெலிதாக ஒரு பயம் பரவுகிறது.
ஷிர்சா ராயின் ஒளிப்பதிவு வெறுமனே வண்ணமயமாக மட்டுமல்லாமல், காட்சியின் தன்மைக்கேற்ற உணர்வையும் நமக்குள் கடத்துகிறது. கடந்த காலத்தைக் காட்டும் ஒரு கதைக்கு ஏற்றவாறு, உண்மையான நிகழ்வுகள் என்பதை உணருமாறு, ஷாட்கள் நீளமாக இருப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிஜித் பாலா.
அதே நேரத்தில், பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் ‘விகாஸ்’ எந்திரத்தின் திறனைப் பரிசோதிக்கும் காட்சியில் சடசடவென்று பாத்திரங்களின் முகபாவங்களை அடுக்கி நம்மிடம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.
வெவ்வேறு காலகட்டம், இஸ்ரோவின் ஆரம்ப கட்ட உள்ளடக்கம், சாதனங்கள் உட்பட பலவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறது பிரேர்னா கதுரியா மற்றும் ரஞ்சித் சிங்கின் தயாரிப்பு வடிவமைப்பு.
தொடக்கத்தில் வரும் ராக்கெட் ஏவுதல் தவிர, பெரும்பாலான காட்சிகளில் விஎஃப்எக்ஸ் தனித்து தெரியாதவாறு இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்திய படக்குழு, இறுதியாக வரும் டைட்டிலில் தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் உருவும் சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்கலாம்.
சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை இப்படத்தின் பெரும்பலம். பல இடங்களில் விறுவிறுப்புக்கு வழியமைப்பதோடு, இறுதிக் காட்சிகளில் நம்மிடம் நெகிழ்வையும் பிறக்கச் செய்கிறது.
வசனம், திரைக்கதை போன்றவற்றில் பிற எழுத்தாளர்களுடன் சேர்ந்து இந்தி, தமிழ், ஆங்கிலத்தில் எழுதியது, இதுவரை தான் பணியாற்றிய இயக்குனர்களிடம் பெற்ற அனுபவத்தின் மூலமாகத் தேர்ந்த திரை மொழியை வெளிப்படுத்தி இருப்பது,
இதர தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சிறப்பான முறையில் கூட்டுழைப்பை பெற்றது என்று வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் மாதவன்.
மிக முக்கியமாக, இயக்குனராகவும் நடிகராகவும் செயல்பட்டிருப்பது, அவரது மகுடத்தில் இன்னொரு மைல்கல்.
இந்தி பதிப்பில் பயன்படுத்திய ரஜித் கபூரை பயன்படுத்தாமல் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ரவி ராகவேந்தரை விக்ரம் சாராபாயாக நடிக்க வைத்தது மாதவனின் புத்திசாலித்தனம். அதேபோலவே தமிழில் சூர்யாவையும் இந்தியில் ஷாரூக்கையும் கௌரவ தோற்றத்தில் நடிக்க வைத்திருப்பது.
நம்பி நாராயணனாக நடித்தாலும், அவரது இளமைப்பருவ காட்சிகளில் மாதவன் மட்டுமே தென்படுகிறார்.
அதேநேரத்தில், வயதான கெட்டப்பில் தோன்றும்போது அப்பாத்திரத்திற்கான நியாயத்தையும் நேர்த்தியையும் சேர்த்து தந்திருக்கிறார்.
ஆட்டோவில் ஏறியபிறகு இறக்கிவிடப்படும் காட்சியொன்றில் நம் கண்களில் நீரை வரவழைக்கிறார்.
சிம்ரனுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. ‘வாரணம் ஆயிரம்’ போல இதிலும் அம்மா வேடம். ஆனாலும், ’ஜஸ்ட் லைக் தட்’ என வந்து போயிருப்பது அவரது திறமைக்குச் சான்று.
மிஷா கோஷல், தினேஷ் பிரபாகர், ராஜிவ் ரவீந்திரநாதன் உட்பட பலரது நடிப்பு நம் மனதில் பதிகிறது. முக்கியமாக, உன்னி எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் சாம் மோகன் அசத்தியிருக்கிறார். வெகு விரைவில், ஒரு நல்ல வில்லன் நடிகராக அவர் மிளிரக்கூடும்.
ராக்கெட்டுக்கான திட எரிபொருள், திரவ எரிபொருள், கிரையோஜெனிக் என்ஜின், அவை செயல்படும்விதம் போன்றவற்றை எளிமையாக திரையில் விளக்கினாலும், அறிவியல் அலர்ஜி என்பவர்களுக்கு இத்திரைக்கதை வேற்றுகிரகத்தில் நடப்பதாகத் தெரியலாம்.
முடிந்தவரை காட்சிகள் புரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
இறுதிக் காட்சியில் நம்பி நாராயணனை தோன்றச் செய்து, மொத்த படத்தையும் அவரது காலடியில் சமர்ப்பித்திருக்கிறார் மாதவன்.
அதேபோல, இப்படத்திற்கு விளம்பரம் தேடித் தந்த ‘பஞ்சாங்க’ சர்ச்சை குறித்து திரைக்கதையில் ஒரு காட்சி கூட இல்லை. படம் முடிந்து வெளிவருகையில் அது நினைவுக்கு வரும்போது, ‘மார்க்கெட்டிங் உத்தி’யிலும் மாதவன் தேறிவிட்டார் என்ற எண்ணம் உருவாகிறது.
நம்பி நாராயணனின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் அவரும் அவரது குடும்பத்தினரும் சகிக்க முடியாத அவமானங்களை அடைந்தது இஸ்ரோவுக்கு பின்னடைவு என்பதே இப்படத்தின் சாராம்சம்.
ஆனால், முழுக்க முழுக்க அதை மட்டுமே கலைப்பூர்வமாகச் சொல்லாமல் நம்பியின் துணிச்சலான முடிவுகளையும் தெனாவட்டான குணத்தையும் திரைக்கதையில் மையப்படுத்தி ‘ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்’டை கமர்ஷியலாகவும் வெற்றி பெறச் செய்திருக்கிறார் மாதவன். வாழ்த்துகள்!
– உதய் பாடகலிங்கம்