யார் இந்த நுபுர் சர்மா?
சில நாட்களுக்கு முன்பு அரபு நாடுகளில் இந்தியாவின் பெயர் படாதபாடு பட்டுவிட்டது. ஒவ்வொரு நாடும் தம் கண்டனங்களை இந்திய தூதர்களிடம் தெரிவித்தன.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் வார்த்தைகள்தான் இத்தனை களேபரங்களுக்கும் காரணமாக அமைந்தன.
இஸ்லாமியர்களின் நம்பிக்கையான முகமது நபிகள் நாயகம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் உலக நாடுகளில் தீயை மூட்டின.
உள்நாட்டிலும் ஓர் அசாதாரண நிலையே ஏற்பட்டது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நுபுர் சர்மா, நபிகள் குறித்து பேசியது சர்ச்சையை உருவாக்கிவிட்டது.
பின்னர், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. உடனடியாக பாஜக தலைமை நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது.
“இந்தியாவை ஆளும் கட்சி மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்தக் கருத்துக்களுக்கு இந்திய அரசு சார்பில் பகிரங்க மன்னிப்பு மற்றும் கண்டனத்தை கத்தார் எதிர்பார்க்கிறது” என்று கத்தார் கண்டனம் தெரிவித்திருந்தது.
நுபுர் ஷர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோருக்கு எதிரான பிரசாரம், அரபு நாடுகளில் ஓமன் முஃப்தி ஷேக் அகமது பின் ஹமத் அல் கலீலி என்பவரால் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் ஆளும் கட்சியின் செய்தித்தொடர்பாளர் இஸ்லாமின் தூதருக்கு எதிராக இழிவான மற்றும் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டார்.
அல் கலீலியின் அறிக்கைக்குப் பிறகுதான், அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கின.
இந்தியாவுக்கு எதிரான கருத்துப் புயல்கள் அடங்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், “முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
வளைகுடா நாடுகளின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
நபிகள் குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய நீதிபதிகள், “நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கி விட்டார்.
அவருக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. அவர் நடந்துகொண்டவிதம், பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக் கேடானது.
உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான். டி.வி.யில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கவேண்டும்.
ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு” என்று கண்டனத்துடன் சுட்டிக்காட்டினார்கள்.
யார் இந்த நுபுர் சர்மா?
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும், சட்டக் கல்லூரியில் எல்எல்பி பட்டமும் பெற்றவரான நுபுர் சர்மா, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஒரு மாணவர் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய நுபுர் சர்மா, 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முக்கிய பொறுப்பில் இருந்த நுபுர் சர்மா பல பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் டெல்லி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தேசிய அளவிலான குழுவை அமைத்தபோது நுபுர் சர்மா, தேசிய செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்று முதல் நுபுர்சர்மா, காட்சி ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய சொற்கள்தான் அரபு நாடுகளை கொதிநிலைக்குக் கொண்டு சென்றது. இப்போது உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துவிட்டது.
இது ஜனநாயக நாடுதான். இங்கே பேச்சுரிமையும் இருக்கிறது. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கிறது. அதே புல்லை கழுதை மேய்வதற்கும்கூட உரிமை இருக்கிறது.
தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா.
ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், “மனுவில் நுபுர் சர்மா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார்.
உண்மையில் அவருக்கு அச்சுறுத்தலா, இல்லை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்று நாம் பார்க்கவேண்டும்.
நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்தப் பெண் ஒரு தனி நபராகக் காரணமாகியுள்ளார்” என்று சுட்டிக்காட்டினார்.
- மாறன் ரோட்ரிகோ