தி.ஜானகிராமன் (ஜுன்-28, 1921) நினைவையொட்டி அவருடைய ‘மாப்பிள்ளைத் தோழன்’ சிறுகதையில் இருந்து ஒரு பகுதி.
“அது என்ன பாட்டோ தெரியவில்லை. யார் பாடின பாட்டோ? சமையற்காரன் குரல் வரவரக் தடித்துக் கனத்துக் கொண்டேயிருந்தது. குரலில் சூடு ஏற ஏற கதவில் சாய்ந்து நின்றான், கையை ஆட்ட, பக்கத்தில் நின்றவர்களை ஒதுக்கிவிட்டான்.
பாட்டுக் கச்சேரி பாங்கு இல்லை. ஆனால் தாளமும் சுருதியும் புரிந்துகொண்ட பாட்டாகத்தான் இருந்தது. ஏழெட்டுச் சரணம் பாடினான். பாட்டு முடிந்ததும் அதே கையோடு ஒரு மங்களமும் பாடினான். அந்த பாட்டும் முடிந்ததும் உரக்கப் பேசினான்.
“எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும். எல்லாரும் திருப்தியாயிருக்கணும். எத்தனையோ கிடைக்கும், கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும், எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்க கத்துக்கணும்.
நூறு இல்லாம இருக்கலாம். பத்து இல்லாம இருக்கலாம். காசு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வயித்துக்கு இருக்கலாம். இல்லாமலிருக்கலாம்.
வெயில் கொளுத்தலாம். மழை கொட்டலாம். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணணும். சந்தோசமாத்தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கணும். பிடிவாதமா சிரிக்கணும்.
அப்படி ஒரு பிடிவாதம் இருந்தா, நீங்க அந்த அம்மா சொன்ன உடனே விடாம பாடியிருப்பேள். சந்தோஷமா இருக்கக் கத்துக்கணும். கங்கணம் கட்டிக்கணும். சிரிச்சுண்டேயிருப்பேன்னு பிடிவாதம் பண்ணணும். சிரிக்கிறதிலே சண்டித்தனம் பண்ணணும். அதாவது சிரிக்கிறதை நிறுத்த மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணணும். பல்லு வலிக்கச் சிரிக்கணும்.
மனசு கொள்ளாம சந்தோஷமா இருக்கணும். எங்கே சிரிங்கோ பார்ப்போம். பெரியவாளுக்குக் கூச்சமாயிருக்கும். நீங்கள்ளாம் சிரிங்கோ பார்ப்போம். குழந்தைகளா! நீங்க சிரிங்கோ, நான் சிரிக்கிறேன். என்னோடு சேர்ந்து சிரிங்கோ பார்ப்போம்…”