புஷ்பவனம் குப்புசாமியின் குலதெய்வ நம்பிக்கை
*
“வெள்ளைக் குதிரையில் அய்யனாரே
வேகமாய் வந்தருளும் அய்யனாரே
எல்லையில் கோயில் கொண்ட அய்யனாரே
எல்லை உண்டோ உந்தனுக்கு அய்யனாரே..”
– இது எங்களின் குலதெய்வமான அய்யனாருக்காக நாங்கள் பாடுகிற பாட்டு. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் இருக்கிற புஷ்பவனம் என்கிற எங்க கிராமத்தில்தான் கடலோரத்தில் அய்யனார் கோயில் இருக்கிறது.
‘காஞ்சியப்ப அய்யனார்’ என்று சொல்வார்கள். ‘கஞ்சப்ப அய்யனார்’ என்றிருந்த பெயர் தான், காஞ்சியப்ப அய்யனாராகிப் போனது. ‘கஞ்சம்’ என்றால் தாமரை என்கிற அர்த்தத்தில்தான் இந்தப் பெயர் வந்திருக்கிறது.
குல தெய்வமான அய்யனார் எப்போதும் எங்களுடன் இருக்கிறார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு. தெய்வத்திற்கு முக்கியம் நம்பிக்கைதானே. தெய்வத்தின் மீது இருக்கின்ற மதிப்பும், குற்றம் செய்தால் தெய்வம் நம்மைத் தண்டிக்கும் என்கிற பயமும் நம் வாழ்வைச் சிறப்பாக்குகிறது.
என்னைப் பொறுத்தவரை அய்யனார் என்றால், ஐயப்பன் சாமி தான். ஐயப்பசாமி நம்பூதிரிகளால் பூசிக்கப்படுகிறார். அய்யனார் கிராமத்து மக்களால் வணங்கப்படுகிறார்.
அய்யனாருக்கு எங்கள் ஊரில் சைவப் படையல்தான். ஆனால் அய்யனாருடனிருக்கும் கருப்பண்ணசாமிக்கு அசைவப் படையல் படைக்கப்படும். கருப்பண்ணசாமியுடன் பிறந்தவர்கள் 21 பேர். அதனால் அனைவருக்கும் சேர்த்து 21 படையல் போடப்படும். ஊரைக் காப்பவரும் இவர்தான்.
பேய், பிசாசுகளிடம் இருந்து நம்மைக் காப்பவரும் அவர்தான். அதனால்தான் அவருக்கு அசைவம். எங்கள் ஊரில் குழந்தை பிறந்தால், அய்யனார் கோவிலுக்குத் தூக்கிச் சென்று அய்யனாருக்கு முன்னாள் போட்டு பெயர் சூட்டுவார்கள். எனக்கும் அப்படித்தான் பெயர் வைத்தார்கள்.
கோயிலுக்கு முன்னால் குப்பைகளைப் போட்டு எரித்து அந்தச் சாம்பலை என்னைப் போட்டு குப்பைசாமி என்கிற பொருளில் எனக்கு குப்புசாமி என்று பெயர் வைத்தார்கள்.
அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. எங்கள் ஊரில் ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தங்காமல் இருந்தால் – அடுத்து பிறக்கும் குழந்தைகளைத் தெய்வத்திற்கு தத்துக் கொடுக்கும் பொருட்டு, இந்தக் குழந்தை எங்களுக்கு வேண்டாம், இதை நாங்கள் குப்பையில் போடுகிறோம்.
இனி நீ தான் துணை என்கிற அர்த்தத்தில் அப்படி செய்வது வழக்கம். ஒரு விதத்தில் சொல்லப் போனால் இம்மாதிரியான நம்பிக்கைகள்தான் எங்கள் கிராமத்தைச் சிறப்பாக வைத்திருக்கின்றன.
எங்கள் ஊரில் பொங்கல் திருவிழா அமர்க்களமாக நடக்கும். அப்போது ஊரில் உள்ள அனைவரும் மதம், சாதி பாராமல் ஒன்றுகூடி அய்யனாருக்குப் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம்.
திருவிழா அங்கு உள்ளவர்களை எப்படி எல்லாம் ஒன்றுபடுத்துகிறது தெரியுமா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும்.
சுனாமி தாக்குதல் நடப்பதற்கு முந்தைய தினம் – அடுத்த நாள் அதாவது சுனாமி தாக்கிய அன்று கடலோரத்தில் இருக்கிற எங்களுடைய குலதெய்வக் கோயிலில் பொங்கல் வைக்க முடிவு செய்திருந்தோம்.
அதற்காக நானும் மனைவி அனிதாவும் ஊருக்குக் கிளம்பத் தயாராகி விட்டோம்.
பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் காரில் ஏற்றி விட்டோம்.
அப்போது தில்லையாடி வள்ளியம்மை ஊரிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
“கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் நீங்கள் பாடுவதற்காக வர வேண்டும்” என்று வற்புறுத்தினார்கள்.
நான் ஊருக்குப் போவதைச் சொல்லி மறுத்தேன். அவர்கள் விடவில்லை.” நீங்கள் அவசியம் வரத்தான் வேண்டும்” என்று பிடிவாதமாகச் சொன்னார்கள்.
நானும் யோசித்து ஊருக்குப் போன் செய்து, “பூஜையை ஒரு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமா” என்று கேட்டேன் அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அதனால் நாங்கள் பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்தோம்.
மறுநாள் டிசம்பர் 26 ஆம் தேதி, கடலோரத்தில் கோயில் வாசலில் நான் வரவில்லை என்ற வருத்தத்துடன் நின்று கொண்டிருக்கிறார் என்னுடைய அப்பா.
அந்தச் சமயத்தில் தான் சுனாமி பொங்கி எழுந்து வந்து இருக்கிறது. வந்த ராட்சத அலை என்னுடைய அப்பாவைக் கடலுக்குள் இழுத்துச் செல்கிறது. அலறுகிறார், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அலையின் கையில் அவர் இருக்கிறார்.
அப்போது அவருடைய கையில் சிக்குகிறது ஒரு கயிறு. கயிற்றின் மறுமுனை அங்கிருந்த பனை மரத்தைச் சுற்றி இருக்கிறது. அலை பின்னோக்கி இழுத்தபோதும் அப்பா மட்டும் அலை இழுப்பில் மாட்டாமல் தப்பிப் பிழைத்தாா்.
அவருடைய கண்ணுக்கு முன்னால் 13 பேர் அலைவீச்சில் மாட்டி உயிரிழந்து போனார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் நீச்சல் நன்கு தெரிந்த மீனவர்கள்.
இவ்வளவுக்கும் மத்தியில் என்னுடைய அப்பாவைக் காப்பாற்றியவர் எங்கள் குல தெய்வம் அய்யனார்தான் என்று நான் நம்புகிறேன்.
அங்கு செல்ல இருந்த என்னையும், என் குடும்பத்தையும் தடுத்தவரும் அதே அய்யனார்தான் என்று இப்போதும் நான் நம்புகிறேன்.
இது சிலருக்கு வித்தியாசமாக படலாம்.
இது என்னுடைய நம்பிக்கை. இந்த நம்பிக்கை தான் என்னை வாழ வைத்து கொண்டிருக்கின்றது.” என்கிறார் நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி.
***
திருமணத்திற்கு முன்பு வரை அனிதா குப்புசாமியின் குலதெய்வம் வேறு. திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடைய குல தெய்வமான அய்யனார் தான் அவருடைய குலதெய்வம்.
அதன் மகிமையைப் பற்றிச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.
“அவர் தன்னுடைய குலசாமியைப் பற்றிப் பாடும்போது அவருக்குள் ஒருவித ஆவேசம் இருப்பதை என்னால் உணர முடியும்” என்கிறார் கணவரைப் பற்றி.
“திருமணம் ஆகும் வரை எனக்கு அய்யனார், கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்களைப் பற்றி எதுவும் தெரியாது. அதற்குப் பிறகே அந்தத் தெய்வங்களின் அருமையை உணர்ந்தேன்.
அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு அமைந்தது. என்னுடைய கணவரும் நானும் கச்சேரிகளில் பிஸியாக இருந்த நேரம், இரண்டாவது பெண் குழந்தை பிறந்து அப்போது ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தன.
அதனால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள ஒரு பெண்மணியை வீட்டு வேலைக்கு வைத்திருந்தோம்.
எங்கள் சமையலறையில் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் உண்டு. அன்றைக்கு வேலை செய்து விட்டுப் போகும்போது, வேலை செய்த பெண்மணி மறந்து 2 சிலிண்டர் நாப்களையும் திறந்து வைத்துவிட்டு போய்விட்டார்.
நாங்கள் அன்றைக்குக் கச்சேரி முடிந்து வீட்டுக்கு வர நள்ளிரவாகி விட்டது. எங்களுக்கு நல்ல அசதி. அதனால் மாடிக்குச் சென்றுப் படுத்து விட்டோம். படுத்த ஒரு மணி நேரத்திற்குள் எங்கள் வீட்டுக்குள் தொலைபேசி அழைப்பு வரும்வதும், கட்டாவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் அழைத்தது யார் என தெரியவில்லை. என் கணவருக்கு ரொம்ப கோபம். கீழே இருந்த போனில் உள்ள காலர் ஐடியில் எந்த எண்ணிலிருந்து அழைத்து இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள கீழே இறங்கிப் போனார்.
கீழே இறங்கியதும்தான் அவருக்கு வீட்டில் கேஸ் புகை நிறைந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. சட்டென்று சுதாரித்து வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றையும் திறந்து வைத்துவிட்டு கேஸை வெளியேற்றி அனைத்தையும் சரி செய்தார்.
அன்றைக்கு நள்ளிரவில் அந்தத் தொலைபேசி அழைப்பு தொடர்ந்து வரா விட்டால், நாங்கள் கேஸ் பரவியிருப்பதை உணர்ந்திருக்க மாட்டோம். விடியற்காலைக்குள் ஏதாவது விபரீதம் நேர்ந்திருக்கலாம்.
இன்னொரு ஆச்சரியம் கீழே இருந்த போனை எடுத்து அதிலிருந்த காலர் ஐடியைப் பார்த்தால், நள்ளிரவில் 12 முறை அடித்து அந்த எண்ணைத் தவிர மற்ற நேரத்தில் அடித்த எண்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. 13 ஆவது முறை போன் அடித்தபோது நான் எடுத்தேன். எடுத்ததும் ஒரு குழந்தையின் சிரிப்பு சத்தம் மட்டும் எனக்கு கேட்டது.
இத்தனை விசித்திரங்களை நிகழ்த்தி எங்களைக் காப்பாற்றிய எங்களுடைய குலதெய்வமான அய்யனார்தான் இன்றைக்கும் எங்களைக் காப்பாற்றி கொண்டிருக்கிறார் என்று முழுமையாக நான் நம்புகிறேன்.
எங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
எந்தக் காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் அவரை வணங்கி விட்டுத்தான் துவங்குகிறோம்.
அவருடைய கருணை எப்போதும் எங்களைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று நம்பிக்கை எங்களிடம் வலுவாக இருக்கிறது.”
– மணாவின் ‘பிரபலங்களின் குலசாமிகள்’ நூலிலிருந்து..