கொரோனா இப்படி எல்லாம் செய்ய வைக்குமா?

மீள் பதிவு:

கொரோனாக் காலம் இப்படி எல்லாம் மனிதர்களைச் செய்ய வைக்குமா?
வியப்பாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

கொரோனாப் பரவல் ஊரடங்கைக் கொண்டு வருகிறது. பல உயிர்களைப் பலியாக்கி அனைவரையும் பீதி அடைய வைக்கிறது. முன்பு தடுப்பு மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் தற்போது தடுப்பூசி போட வரிசையில் நிற்கிறார்கள்.

வீடுகளில் ஊரடங்கால் அடைந்திருப்பவர்கள் முன்பை விட, அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள். முதியவர்களை முந்தையக் காலத்தை விடத் தவிக்க விடுகிறார்கள். சிலர் தனித்தும், சிலர் குடும்பத்தோடும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பொருளாதாரப் பிடுங்கலில் திருட்டுக்களில் இறங்குகிறார்கள். வயதான பெரியவர்கள் தெருக்களில் கூச்சத்தோடு கையேந்துகிறார்கள்.

பொருளாதார வருமானம் குறைந்த பட்டியலில் இருப்பவர்கள் அதிகரிக்கும் நிலையில், அவர்களுடைய மனவெளி தத்தளிப்பானதாக மாறியிருக்கிறது. சுலபமாக மற்றவர்கள் மீது நம்பிக்கை இழந்து, கூடவே பொறுமையும் இழந்துவிடுகிறார்கள்.

சாலை நடுவே காவலர்களுடனும், மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுடனும் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு மோதுகிறார்கள். காவலர்களும் தங்கள் பணிச்சுமையின் பாரத்தை சாலையில் எதிர்ப்படும் மனிதர்களிடம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் குழந்தைகள் கொரோனாவின் கனம் தாங்காமல் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள கேம்ஸ்களில் புகுந்து கொள்கிறார்கள். இதுவரை பேசாத அளவுக்குக் கடுமையான சொற்களைப் பெற்றோரிடம் பேசுகிறார்கள். ஆழ்ந்த மௌனமாக இருக்கிறார்கள்.

ஆன்லைனில் நடக்கும் வகுப்புகளில் அவர்கள் இயல்பான கற்றல் மனநிலையுடன் இல்லை. மாணவிகளோ ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளில் நடந்து கொள்ளும் குற்றத்தால் மன நோயாளிகளைப் போல் ஆகிறார்கள். எதிர்காலத்தை இருட்டானதாக உணர்கிறார்கள்.

வினோதமான மனநிலைகளுக்கு வழிதவறிப்போகும் அவர்கள் எந்தவிதமான அனுபவங்களுக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு விழுப்புரத்தில் அண்மையில் ஒரு மாணவி நடந்து கொண்ட விதம் ஓர் உதாரணம்.

பதினைந்து வயதான மாணவி ஆன்லைன் வகுப்பில் வேண்டா வெறுப்பாக அமரும் போதெல்லாம் தன்னுடைய தலைமுடியைப் பிடுங்கிச்சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த மாணவியின் வயிற்றில் ஒரு கட்டி. மருத்துவரிடம் அழைத்துப்போனபோது முழுக்க முடிக்கற்றை, அதிலும் ஒரு கிலோ அளவுக்கு.
கொரோனா காலத்துத்தனிமை அந்த அளவுக்கு மனச்சோர்வை உருவாக்கியிருக்கிறது.

அந்த மாணவிக்குத் தற்போது மனநலச்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
உங்களது குழந்தைகளிடம் நீங்கள் உரையாடி அவர்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்கள் தன்னுடைய போக்கில் எப்படியெல்லாம் போகத் தயார் ஆகிறார்கள், பாருங்கள்.

You might also like