திரைத்துறையில் தன் மீது எந்த வெளிச்சம் விழுவதை விரும்பாமல் எத்தனையோ கலைஞர்கள் தங்களால் செய்ய முடிந்த வேலையை மனம் ஒன்றிச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அம்மாதிரியான இசைக்கலைஞர், ‘திரையிசைத் திலகம்’ என்று அழைக்கப்பட்ட மகத்தான இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.
பல மொழிப்படங்களில் ‘கிளாசிக்’ உச்சியைத் தொட்டவர்.
திருவிளையாடல், நவராத்திரி, வேட்டைக்காரன், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, அரசகட்டளை, வியட்நாம் வீடு, அடிமைப்பெண், சங்கராபரணம் என்று அவருடைய இசை சாம்ராஜ்யம் விரிந்த படங்கள் எத்தனையோ!
நாகர்கோவிலை அடுத்துள்ள கிருஷ்ணன் கோவில் தான் இவருடைய சொந்த ஊர். தாத்தா, அப்பா எல்லோருமே இசையுடன் வாழ்ந்தவர்கள்.
கிருஷ்ணன் கோவில் வெங்கடாசலம் மகாதேவனான கே.வி.மகாதேவன், முறையான இசையை பூதப்பாண்டியைச் சேர்ந்த அருணாசலக் கவிராயரிடம் கற்றுக் கொண்டார்.
பள்ளிப்படிப்பு ஏறவில்லை. துவக்கத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் பெண் வேஷங்களில் நடித்த போது மாதச்சம்பளம் 15 ரூபாய்.
கதாகாலட்சேபம் நடந்தபோது அதில் பின்பாட்டுப் பாடியிருக்கிறார். வேறு வழியில்லாமல் சென்னைக்கு வந்த நாட்களில் மிகவும் சிரமப் பட்டிருக்கிறார்.
சென்னையில் பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்ததை அவரே பிந்தைய நாட்களில் சொல்லியிருக்கிறார்.
வெறும் அரைக்கால் ட்ரௌசர். மேலே ஒரு பனியனோடு துறைமுகத்திலிருந்து சைக்கிளில் சூளைக்குப் போய் லாரி ஆபிஸில் அனுப்பும் சரக்குகளைப் பற்றிய துண்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டு வரும் வேலையும் பார்த்திருக்கிறார்.
பலப் பல வேலைகள். அதற்காக அப்போது அவருக்குக் கிடைத்தவை பத்தணா தான்.
“அதைச் சொல்ல நான் வெட்கப்பட மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம, எந்தத் தொழில் செஞ்சு சம்பாதிச்சாலும் தப்பில்லை’’ என்றிருக்கிறார் தனது கடந்த காலத்தை நினைவுகூரும்போது.
இதற்கிடையில் – சென்னையில் ஒரு வாசல் திறந்தது.
இசையமைப்பாளரான எஸ்.வி.வெங்கட்ராமனின் கண்ணில் பட்டு, அவருக்கு உதவியாளராக இசைக்குழுவில் வேலை பார்த்தார்.
ஒரு வழியாக 1941-ல் வெளிவந்த ‘மனோன்மணி’ படத்திற்கு முதலில் இசையமைத்த போது, கே.வி.எம்.மின் முதல் பாடலைப் பாடியவர் அப்போதைய சூப்பர் ஸ்டாரான பி.யு.சின்னப்பா.
“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’’ என்று எம்.எஸ்.ராஜேஸ்வரி கொஞ்சும் குரலில் பாடிய பாட்டுகள் நிறைந்த படமான ‘டவுன் பஸ்’ மகாதேவனை அடையாளம் காட்டியது.
“கொஞ்சும் கிளியான பெண்ணை’’ டி.எம்.எஸ். பாடிய ‘கூண்டுக்கிளி’ படங்கள் எல்லாம் வந்த நேரத்தில், தயாரிப்பாளராக ஆகியிருந்தார் சாண்டோ சின்னப்பா தேவர்.
‘தாய்க்குப் பின் தாரம்’ எம்.ஜி.ஆர் கதாநாயகன். இசை கே.வி.மகாதேவன்.
“மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா’’ போன்ற பாடல்கள் செமை ஹிட்.
அதிலிருந்து தேவர், மகாதேவன் கூட்டணி தான்.
“உன்னை அறிந்தால்…” என்று முழங்கிய ‘வேட்டைக்காரன்’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’ துவங்கி ‘நல்ல நேரம்’ வரை அந்தக் கூட்டணி தொடர்ந்தது.
புராணப் படங்களை எடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் ‘சம்பூரண ராமாயணம்’, ‘கந்தன் கருணை’, திருவருட் செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என்று மகாதேவன் இசையால் இணைந்து அந்தக் கூட்டணியும் வெற்றி.
“வீணைக் கொடியுடைய வேந்தனே…” என்று துவங்கிப் பல ராகக் கலவையாக சிதம்பரம் ஜெயராமனின் குரலில் சம்பூர்ண ராமாயணப் பாடல் கிறங்கடித்தது.
“மனம் படைத்தேன்…’’ – சுசீலாவின் தேன்குரலில் கொஞ்சி ஒலித்தது.
“மன்னவன் வந்தானடி…” வளைய வந்தது.
“ஒரு நாள் போதுமா?…’’ பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் ரீங்காரமிட்டது.
“நலந்தானா?…’’ நாதஸ்வரத்துடன் குழைந்து பலருடைய காதுகளுக்குள் இதமாகப் பரவி நலம் விசாரித்தது.
தெலுங்கிலும் தொட்டதெல்லாம் ஹிட். உச்சம் – ‘சங்கராபரணம்’.
“மானஸ சஞ்சரரே..’’ மொழியைக் கடந்து வந்து மனதைத் தொட்டது.
“ஆயிரம் நிலவே வா..’’ – பாடலோடு அடிமைப்பெண் படத்தில் மகாதேவனால் தமிழில் பிரபலமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை உச்சிக்குக் கொண்டு போனது ‘சங்கராபரணம்’.
‘கந்தன் கருணை’க்கும், ‘சங்கராபரணம்’ படத்திற்கும் கே.வி.எம்.முக்குத் தேசிய விருதுகள் கிடைத்தன.
“தாயில்லாமல் நானில்லை…” பாடலைக் கொண்ட ‘அடிமைப் பெண்’ படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
வசந்த மாளிகை, பல்லாண்டு வாழ்க – வரை ஏகப்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும், பலருடைய மனதை இப்போது கேட்டாலும் உருக வைக்கும், டி.எம்.எஸ் தழுதழுக்க ‘வியட்நாம் வீடு’ படத்தில் பாடியிருக்கும் “உன் கண்ணில் நீர் வடிந்தால்…’’ பாடல்.
1990 வரை இசையமைத்துக் கொண்டே இருந்த மகாதேவன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 1500க்கும் மேல்.
இவ்வளவு படங்களில் இசையமைத்து, 2001-ல் மறைந்த மகத்தான திரையிசைக் கலைஞரான கே.வி.மகாதேவன் தன்னுடைய சாதனைகள் எதையும் தன்னுடைய தலையில் ஏற்றிக் கனமாகச் சுமக்கவில்லை.
அவருக்குத் தேசிய விருதுகள் கிடைத்தபோது கூட, “இந்த விருதை ஜனாதிபதி கொடுத்ததாக நான் நினைக்கலை. ஆண்டவன் கொடுத்ததா நினைக்கிறேன்’’ என்று மென்மையாகச் சொன்னார் மகாதேவன்.
மிகப் பெரும் சாதனை.
அதை விட மிக எளிய மனம்!
*
– அகில் அரவிந்தன்